Sunday, July 29, 2012

விளையாட்டாய் வந்த வினை!

தமிழர் தாயகப் பகுதிகளில் சிங்களத்தின் திட்டமிட்ட பரம்பல் ஆமை வேகத்தில் ஆரம்பித்து இன்று முயல் வேகத்தில் செல்கின்றது. ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்த சிங்கள ஓநாய் இறுதியில் தமிழ் மொழியையே விழுங்க ஆரம்பித்துள்ளது. இனி இலங்கையின் எப்பாகத்திலும் சிங்களத்திற்கே முதலிடம் என்ற மமதையில் சிங்களம் தனது செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளது.
அதாவது, யாழ். குடாநாட்டில் அண்மைக் காலமாக அரச சார்பு மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் வருகை தற்போது அதிகரித்து வருகின்ற நிலையில், அவற்றுடன் இணைந்து சிங்கள மொழியும் அங்கு அதன் ஆதிக்கத்தை அதிகரித்துள்ளது. யாழ்.குடாநாட்டில் முக்கிய இடங்களில் இருக்கின்ற அரச நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளில் சிங்கள மொழியே முதன்மை மொழியாக காணப்படுகின்றமை அங்கு தமிழ் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகின்றது.
அத்துடன், யாழ்.குடாவிற்கு புலம்பெயர் மண்ணில் இருந்து நீண்டகாலத்திற்குப் பின்னர் விடுமுறையில் செல்லும் பலர் இந்தப் பெயர்ப்பலகைகளைக் கண்டு கொதித்துப் போயுள்ளனர். யாழ். குடாநாடானது வட கிழக்கு மாகாணங்களில் அதிகமான தமிழர்கள் செறிந்து வாழும் பகுதியாகும். ஆனால் இங்கு வைக்கப்படும் பெயர் பலகைகளே சிங்கள மொழியினை முதன்மையாக கொண்டு காணப்படுகின்றன. இதனை அவதானித்து விட்டு அண்மையில் புலம் பெயர் நாடு திரும்பிய ஒருவர், போகிறபோக்கைப் பார்த்தால் அங்கு தனிச் சிங்கள மொழிதான் பயன்படுத்தப்படும் என்று கூறி தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்தப் பெயர் பலகைகள் அனைத்தும் தமிழர்களுக்கு ஒரு செய்தியினை சொல்லுகின்றது அதாவது சிங்களவர்களுக்குக் கீழ் தான் தமிழர்கள் என்ற செய்தியினை செல்லுகிறதா? எனவும் அவதானிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்நிலையில், வன்னிப் பகுதியில் மாவீரர் துயிலுமில்லம் உட்பட அனைத்து மாவீரர் நினைவுத் தூபிகளையும் சேதமாக்கி அழித்த சிங்களம், அங்கு தாராளமாகப் புத்த விகாரைகளை நிறுவி வருகின்றது. அத்துடன் நிற்காத சிங்களம் அங்கு படிப்படியாக மாவீரர் பெயர்களைக் கொண்டிருந்த வீதிகளின் பெயர்கள் உட்பட ஏனைய தமிழ்ப்பெயர்களை கொண்ட வீதிகளின் பெயர்கள் மற்றும் ஊர்களின் பெயர்களை அழித்துவிட்டு சிங்களப் பெயர்களை நிறுவி வருகின்றது.
இது தமிழ் மக்களை மேலும் கொதிப்படைய வைத்துள்ளது. இந்த வீதிகளுக்கும் ஊர்களுக்கும் சிங்களப் பெயர் சூட்டுவதில் இராணுவத்தினரும் அரச அதிகாரிகளும் முக்கிய கவனம் செலுத்தி வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி வன்னியில் பல பகுதிகளிலும் ஊர்களும் வீதிகளும் சிங்களமயமாக்கப்பட்டு அங்கு சிங்களவர்கள் குடியேற்றப்பட்டு சிங்களக் கிராமங்களாகவே அவை மாற்றப்பட்டு வருகின்றன. கடும் யுத்தத்தை சந்தித்த மக்கள் இன்னும் யுத்தத்தின் வடுக்கள் ஆற முன்னரே இந்தக் கொடுமைகளையும் காணும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக கடும் விசனமடைந்துள்ளனர்.
தமிழ் கிராமங்களதும் வீதிகளதும் பெயரை அபிவிருத்தி என்ற பெயரில் அரச அதிகாரிகள் சிங்ளமயமாக்க துணைபோவதாகவும் நாளடைவில் இது பெரும் பிரச்சினைகளை ஏற்படுத்தும் எனவும் அந்தப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட அத்துமீறிய செயற்பாடுகள் தற்போது ஏறாவூர்ப் பற்று செங்கலடிப் பிரதேச செயலர்பிரிவுக்கு விஸ்தரிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

செங்கலடி - பதுளை வீதியில் (ஏ5) மாஓயா சந்திக்கு 5 கிலோமீற்றர் கிழக்காக உள்ள மஞ்சள் ஆறு எனும் இடத்தில் காடுகளை வெட்டி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுவருவதாக தெரிவிக்கப்படுகிறது. இப்பகுதிக்குத் தற்போது சிங்களவர்கள் மங்களகம என பெயர் மாற்றம் செய்துள்ளனர். மட்டு அம்பாறை மாவட்டத்தின் எல்லையில் அமைந்துள்ள 36,38,40 ஆகிய கொலனிகளைச் சேர்ந்த சிங்களவர்களே இவ்வாறு மேற்படி பகுதிக்கு சிங்கள அரசின் அனுமதியின் பெயரில் இந்த திட்டமிட்ட ஊடுருவலை மேற்கொண்டுவருகின்றனர்.
பெரும்பான்மையினர் இவ்வாறு அத்துமீறிய செயற்பாடுகளில் ஈடுபடுவதினால், அங்குள்ள தமிழ்பொதுமக்கள் தமது சேனைப் பயிர்ச் செய்கையினை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். பயிர்ச் செய்கை மாத்திரமின்றி அப்பகுதியில் உள்ள குளங்களில் மீன்பிடித் தொழிலையும் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படும் பட்சத்தில் எமது பொருளாதாரம் மிகவும் பின்னடைவை எதிர்நோக்க நேரிடும் என அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
2007 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த படுவான்கரை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்த பின்னர் பட்டிப்பளைப் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 9 ஆம் கட்டை மற்றும் கெவிளியாமடு போன்ற பகுதிகளில் அத்துமீறிய குடியேற்றங்களை மேற்கொண்ட பெரும்பான்மையினர் பின்னர் கச்சக்கொடி, சுவாமிமலை பகுதிக்கு தமது திட்டமிட்ட ஆதிக்கத்தினை நகர்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கடந்தவாரம் யாழ். தீவுப் பகுதி ஊர்காவல்துறைப் பகுதியில் இடம்பெற்ற இரு அணிகளுக்கு இடையிலான உதை பந்தாட்டத்தில் ஏற்பட்ட முறுகல் நிலையையடுத்து ஒட்டுக்குழுக்களும் ஆயுததாரிகளும் இணைந்து குறித்த ஒரு அணியைச் சேர்ந்த இளைஞர்கள் மீது கடும் தாக்குதல் நடத்தியதில் பல இளைஞர்கள் படுகாயமடைந்து ஊர்காவல்துறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
குறித்த மருத்துவமனைக்கு விரைந்த ஊர்காவல்துறை பிரதேச சபைத் தலைவரும் ஒட்டுக்குழு உறுப்பினருமான காந்தன் என்பவர், படுகாயமடைந்த இளைஞர்களை அணுகி இந்த விடயம் வெளியில் வரக்கூடாது எனவும் குறிப்பாக ஊடகங்களில் வரக்கூடாது எனவும் கடும் தொனியில் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதற்கு ஊர்காவல்துறை காவல்துறையினரும் துணைபோனமை குறிப்பிடத்தக்கது. படுகாயமடைந்தவர்கள் அண்மையிலேயே வன்னிப்பகுதியில் இருந்து மீண்டும் தமது சொந்த இடத்திற்கு சென்று குடியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மெலிஞ்சிமுனை அணி மற்றும் ஊர்காவல்துறை ரேஞ்சஸ் அணி ஆகியவற்றிற்கிடையில் ஊர்காவல்துறை மெலிஞ்சிமுனை இருதயராஜா சனசமூக நிலையத்தில் இடம்பெற்ற உதைபந்தாட்ட நிகழ்வின்போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலம் பெயர் வாழ் எம் தமிழ் உறவுகளே சிங்களமும் ஒட்டுக்குழுக்களும் இணைந்து தமது இருப்பிற்காக அப்பாவித் தமிழ் மக்கள் மீது தமது கீழ்த்தரமான நடவடிக்கைகளை அரங்கேற்றி வருகின்றனர். இதனை சர்வதேசத்திடம் ஒருமித்த குரலில் எடுத்துரைக்க வேண்டியது எமது கடமையாகும். சிந்தியுங்கள் செயற்படுங்கள்!
(சூறையாடல்கள் தொடரும்)
நன்றி : ஈழமுரசு

Friday, May 4, 2012

சம்பூர் மக்களின் வாழ்வு சூறையாடப்படுகின்றது! (45)


இன்னும் கிறீஸ் மனித விவகாரத்துக்கு முற்றுப் புள்ளிவைக்காத நிலையில், வடக்கின் பல பகுதிகளிலும் மர்ம மனித நடமாட்டம் உள்ள பகுதிகளில் இராணுவத்தினரே தென்படும் நிலையில், சிறிலங்கா அரசு தமக்கும் இந்த விவகாரத்துக்கும் எதுவித தொடர்பும் இல்லை என்று 'கண்ணை மூடிக்கொண்டு பூனை பால் குடிக்கும்" போக்கில் தெரிவிக்கின்றது.
இச்சம்பவம் தொடர்பாகத் தாம் நடவடிக்கை எடுப்பதாகக் கூறிக்கொண்டு, கிறீஸ் மனித விவகாரத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது' சிறிலங்கா அரசு.
'நாட்டுக்குள் இராணுவ ஆட்சியை கொண்டுவர விரும்பும் இந்த அரசாங்கம், அதற்காக பாதுகாப்பு தரப்பினரையே பயன்படுத்தி வடக்கு கிழக்கு மற்றும் மலையகப் பிரதேசங்களில் வாழும் அப்பாவித் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை அச்சத்துக்குள் தள்ளப் பார்க்கிறது' என மன்னார் மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்ட ஆயர் தெரிவிக்குமளவிற்கு நிலைமை அங்கு உச்சநிலையை அடைந்துள்ளது என்பது திண்ணம்.
இந்நிலையில், தமிழ் மக்களை கிறீஸ் மனிதர்கள் பக்கம் திரம்பவைத்துவிட்டு, சிங்கள அரசு தமிழ் மக்களின் நிலங்களை சூறையாடுவதில் முனைப்புக் காட்டிவருகின்றது.
திருகோணமலை சம்பூர்ப் பகுதியில் அனல் மின்னிலையம் என்ற பெயரில் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் சூறையாடப்பட்டுள்ளன. இதுகுறித்து சம்பூரில் சிங்களப் பேரினவாதத்தால் விரட்டியடிக்கப்பட்ட சம்பூர் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
சம்பூர் அனல் மின்நிலையம், காங்கேசன் துறை துறைமுகம் ஆகியவற்றுக்கான உடன்படிக்கைகளை இந்தியாவால் செய்ய முடியுமென்றால் சம்பூரில் இருந்து இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்துவதற்கு சிறிலங்கா  அரசாங்கத்தை இந்திய அரசாங்கம் ஏன் கேட்கக் கூடாது என்று சம்பூரில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த பூர்வீக இடங்களுக்கு திரும்ப வேண்டும் என்பதே இந்தியா, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச சமூகத்தினதும் கோட்பாடாகவுள்ளதாக இந்தியா திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருக்கின்றது.
பொதுமக்களின் சொந்த வாழ்விடங்களாக இருந்த சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காணிகளை பொருளாதார வலயமாக பிரகடனப்படுத்தியுள்ளதாக சிறிலங்காஅரசாங்கம் கூறுகின்றது.
பொருளாதார வலயத்திற்கான இடத்தை மாற்றி அமைக்கலாம். ஆனால் மக்களின் வாழ்வாதார உரிமையை மறுப்பதென்பது ஏற்றுக் கொள்ள முடியாதென்று அம்மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்குமப்பால் சம்பூர் மக்களின் மீள் குடியேற்றத்திற்கென ஒதுக்கப்பட்டுள்ள காணிகள் பயிர்செய்கையில் ஈடுபடுவதற்கு உகந்த காணிகளாக இல்லை. அத்துடன் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டு வாழ்வாதாரத்தை முன்னேற்றிக் கொள்ள கூடிய வசதி வாய்ப்புக்களும் இங்கு இல்லை.
குடி நீருக்கோ அன்றேல் விவசாயத்திற்காகவோ கிணறு தோண்டுவதாயின் நீருக்காக 60, 70 அடி ஆழத்திற்கு தோண்ட வேண்டியுள்ளது.
எனவே வாழ்விடத்திற்குப் பொருத்தம் இல்லாத காணிகளில் குடியேறுமாறு நிர்ப்பந்திப்பதும் குடியேற மறுக்கும் பட்சத்தில் படைத்தரப்பின் முக்கியஸ்தர்கள் உட்பட ஆளுநரும் அப்பாவி மக்கள் மீது மிரட்டல் விடுவது எந்தளவுக்கு சரியானது என்றும் சம்பூர் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இந்தப் பின்னணியில் தமது சொந்தக் காணிகளில் குடியேறுவதற்கு இந்தியா,சிறிலங்கா அரசாங்கத்தை வற்புறுத்த வேண்டும் என்று கூறும் இடம்பெயர்ந்த சம்பூர் மக்கள் சிறிலங்கா அரசாங்கம் நாங்களும் இந்நாட்டு பிரஜைகள் என்று நினைக்குமாகவிருந்தால், தம்மீதான வற்புறுத்தல்களையும் பயமுறுத்தல்களையும் இனிமேல் செய்யாது நட்ட ஈட்டுடன் எமது சொந்த வாழ்விடங்களில் வாழ அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கின்றனர்.
இந்நிலையில் இவ்விடயம் தொடர்பாகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் திருகோணமலை மாவட்ட அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளது.
சிறிலங்கா அரசாங்கம் 2006 ஆம் ஆண்டு மனிதாபிமான நடவடிக்கை என்ற போர்வையில் சம்பூர் பிரதேசத்தின் மீது மேற்கொண்ட இராணுவ நடவடிக்கையின் போது அப்பகுதி மக்கள் முழுமையாக இடம்பெயர்ந்தனர்.
ஆந்தப் பிரதேசத்தில் அனல் மின் நிலையம் அமைப்பதற்காக இந்தியாவுக்கு வழங்கப்போகின்றோம் என்பதனை சாட்டாகக் கூறி சம்பூர், கூனித்தீவு, சூடைக்குடா, இளக்கந்தை மற்றும் கடற்கரைச்சேனையின் ஒரு பகுதி உள்ளடங்கிய சுமார் பத்தாயிரம் ஏக்கர் பரப்பளவு உள்ள பிரதேசம் உயர்பாதுகாப்பு வலயமாக சிறிலங்கா அரசாங்கத்தினால் பேணப்படுகின்றது.
இப்பிரதேசத்தில் 2008 ஆம் ஆண்டு மூதூர் பிரதேச செயலக புள்ளிவிபரத் திரட்டின்படி 1940 குடும்பங்களைச் சேர்ந்த 7494 பேர் வாழ்ந்து வந்துள்ளனர். பத்தாயிரம் ஏக்கர் பரப்பளவுள்ள இப் பிரதேசத்தில் சுமார் 2500 ஏக்கர் நெல் வயலும், சுமார் 1000 ஏக்கர் குடியிருப்புப் பிரதேசமும் சுமார் 2000 ஏக்கர் மேட்டு நிலமும் சுமார் 4500 ஏக்கர் காட்டுப் பிரதேசமும் காணப்படுகின்றன.
இப் பிரதேசத்தில் கிட்டத்தட்ட ஆயிரம் மாணவர்கள் கல்வி கற்ற சம்பூர் மகாவித்தியாலயம் இன்று ஒரு கடற்படை முகாமாக உள்ளது. சம்பூர் சிறிமுருகன் வித்தியாலயம், கூனித்தீவு நாவலர் வித்தியாலயம், சூடைக்குடா பாரதி வித்தியாலயம் என்பன மூடப்பட்ட நிலையில் அழிவடைந்து கொண்டிருக்கின்றன. அப்பகுதி மாணவர்கள் பாடசாலைக் கல்வியின்றி வீதிகளில் அலைகின்றனர்.
சம்பூர் மக்களின் பாரம்பரிய வழிபாட்டுத் தலங்களான சிறிபத்திரகாளி அம்பாள் ஆலயம், சம்பூர் பிள்ளையார் ஆலயம், சம்பூர் அரசடி விநாயகர் ஆலயம், சம்பூர் நாகதம்பிரான் ஆலயம், கூனித்தீவு பிள்ளையார் ஆலயம், கூனித்தீவு வடபத்திரகாளி ஆலயம், சூடைக்குடா மாரியம்மன் ஆலயம், மற்றும் இளக்கந்தை வைரவர் ஆலயம் என்பன கடந்த 6 வருடங்களாக மக்கள் வழிபாடு செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டு, பூiஐகள் எதுவுமின்றி சிதிலமடைந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை 06.09.2011 அன்று இந்திய இலங்கை அரசுகளுக்கிடையே 500 மெகா வாட் மின்சாரத்தினை உற்பத்தி செய்யக்கூடிய அனல் மின்நிலையம் ஒன்றை சம்பூரில் அமைப்பதற்கான உடனப்படிக்கை  இரு நாடுகளுக்கும் இடையே கைச்சாத்திடப்பட்டுள்ளது. வெறும் 500 மெகா வாட் மின்சாரத்திற்காக பத்தாயிரம் ஏக்கர் காணி பறிமுதல் செய்யப்பட்டு சுமார் பத்தாயிரம் தமிழ் மக்கள் நடுத்தெருவில் விடப்பட்டு அவர்களது வாழ்வும் பலியிடப்பட்டுள்ளது.
அனல் மின் நிலையத்திற்காக 500 ஏக்கர் ஒதுக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசு தொடர்ச்சியாகக் கூறி வருகின்றது. மிகுதி 9500 ஏக்கர் பற்றி எதுவித கதையும் இல்லை. அப்பகுதி மக்கள் குடிப்பதற்குக் கூட தண்ணியில்லத காட்டுப்புறத்திலுள்ள கருங்கற் பிரதேசங்களில் குடியேறுமாறு தொடர்ச்சியாக இராணுவத்தினர் வற்புறுத்தி வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர் என அந்த அறிக்கை தொடர்ந்து செல்கின்றது.
தமிழ் மக்களின் இந்த அவல நிலைமையைத் தவிர்ப்பதற்கு சர்வதேசம் தான் கண்திறக்கவேண்டும்.
புலம்பெயர் வாழ் எம் உறவுகளே இது சிந்திக்கும் நேரமல்ல செயற்படும் நேரம்!         வரும் (19.09.2011) திங்கட்கிழமை  ஜெனிவாவில் இடம்பெறும் மாபெரும் பொங்கு தமிழ் பேரணியில்   சிங்களத்தின் வன்கொடுமைகளுக்கு எதிராக நாம் ஒன்றுபட்டுக் குரல்கொடுப்போம் வாரீர்!
                                         (சூறையாடல்கள் தொடரும்)

சூறையாடப் புறப்பட்ட சிங்களப் பூதம்!


தமிழர் தாயகப் பகுதி எங்கும் கிறீஸ் பூதம் மற்றும் மர்ம நபர்கள் என்ற பெயரில் சிறிலங்கா அரசு, சர்வதேசத்தைத் திசைதிருப்ப நாடகம் ஆடிவருகின்றது. தமிழர் தாயகத்தின் பல பாகங்களிலும் இவ்வாறான மர்ம நபர்களின் அச்சம் தொடர்கதையாகவே இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.
இதனால் தமிழ் மக்கள் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். இது வரை இராணுவத்தினரின் பிடியில் இருந்துகொண்டு பல கொலை, கொள்ளை, கடத்தல் போன்ற சூறையாடல்களை எதிர்கொண்டிருந்த மக்கள் தற்போது அவற்றுடன் புதிய பிரச்சினை ஒன்றுக்கும் முகம் கொடுக்கவேண்டிய துர்ப்பாக்கியமான நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
 தமிழ் மக்களை படுகொலை செய்வதற்கும்  அவர்களின் சொத்துக்களை சூறையாடுவதற்கும் இனி, மேலும் வசதியாக சிங்களத்திற்கு இருக்கும் என பொதுமக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். காரணம் எதைச் செய்துவிட்டும் பழியை மர்மநபர்களாக உலாவரும் கிறிஸ் பூதங்கள் மீது சுலபமாகப் போட்டு விடலாம் என்பதே இவர்களின் குறிக்கோளாக உள்ளது.
முன்னர் இருந்ததை விட தற்போது அதிகளவில் அச்சமடைந்தவர்களாகவே மக்கள் அங்கு தமது நாட்களை நகர்த்துகின்றனர்.
தட்டிக்கேட்க ஆட்கள் இல்லை என்ற நினைப்பில்  தாம் நினைத்த போக்கிற்கு சிங்களம் ஆடுகின்றது. இனித் தமிழர்களை எவ்வாறும் ஆட்டிவைக்கலாம் என்பதே இவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
பல இடங்களில் தமிழ் மக்களின் உடமைகள், பெறுமதி வாய்ந்த சொத்துக்கள் சேதமாக்கப்பட்டதுடன், தமிழ் மக்கள் விரட்டியும் அடிக்கப்பட்டனர். மர்ம மனிதர்களாக வலம் வருபவர்கள் இருட்டு வேளையிலும் பொதுமக்கள் விரட்டிச்செல்லும்போது இராணுவமுகாம், கடற்படை முகாம்,  பொலிஸ் நிலையம் என்பவற்றுக்குள் வழிதவறாமல் ஓடி ஒளிந்து கொள்வதுதான் பொதுமக்களுக்கு மேலும் மேலும் விசனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மீறித் தட்டிக் கேட்க முன்வருபவர்கள் தாக்கப்படுவதுடன் சிறைகளில்  அடைக்கப்படும் சம்பவங்களும் அங்கு அதிகளவில் இடம்பெறுவதை நாம் அறியக் கூடியதாக உள்ளது.
 இந்நிலையில் கிளிநொச்சியிலும்  இந்த மர்ம மனிதர்களின் அச்சம் அதிகரித்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த பூதத்தின் அச்சம் வன்னியின் ஏனைய பாகங்களுக்கும் பரவ ஆரம்பித்துள்ளது.
இதனால், வன்னியுட்பட்ட மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய தமிழர் தாயகப் பகுதிகளில் பாரிய சுற்றிவளைப்புத் தேடுதல்களில் படையினரும் பொலிஸாரும் இறங்கியுள்ளனர்.
'பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் நிலையே இது" என்று அவதானிகள் பலரும் விசனம் தெரிவிக்கின்றனர். இதனால் தமிழ் மக்கள் பெரும் குழப்பமடைந்துள்ள நிலையில் காணப்படுகின்றனர்.
சுற்றிவளைப்புத் தேடுதல் என்னும் பெயரில் தமிழ் மக்களை மேலும் மேலும் துன்புறுத்தும் நடவடிக்கையே அங்கு இடம்பெறுகின்றது.
இதேவேளை, பலரது கவனமும் கிரீஸ் பூதத்தின் பக்கம் திரும்பியுள்ள நிலையில் யாழ்.குடாவில் சிங்களக் குடியேற்றங்களை அமைக்கும் பணியிலும் சிங்களம் முனைப்புடன் இறங்கியுள்ளதான செய்திகள் தற்போது வெளியாகியுள்ளன. இதற்கு இந்தியாவும் துணைநிற்கிறது என்பது அதைவிடக் கொடுமை.  
இந்நிலையில், யாழ். குடாநாட்டின் தீவுப் பகுதியை நோக்கி தென்பகுதியின் கவனம் திரும்பியுள்ளதாக  உள்ளூர் மீனவர்களிடையே அச்சமான சூழல் எழுந்துள்ளது. அண்மையில் புங்குடுதீவை வந்தடைந்த தெற்கு பெரும்பான்மையின மீனவர்கள் தொடர்ந்தும் அங்கு தங்க வைக்கப்பட்டிருப்பதாக உள்ளூர் மீனவர்களிடையே சந்தேகம் வலுத்துள்ளது.
அதேவேளை, நெடுந்தீவிற்கும் தெற்கு மீனவர்கள் வருகை தரவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் அங்கும் குழப்பகரமான சூழலொன்றை ஏற்படுத்தியுள்ளது. அண்மைக் காலமாக வடமராட்சி வடக்கு மற்றும் கிழக்கு கடற்பரப்பில் கடலட்டை மற்றும் சங்கு பிடிப்பதற்கென கூறி நூற்றுக்கணக்கான தெற்கு மீனவர்கள் வருகை தந்து தங்கியுள்ளனர். இவர்கள் பாதுகாப்பு அமைச்சினதும், கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சினதும் அனுமதியுடனேயே குடாநாட்டிற்கு வந்துள்ளனர்.
 இவர்களுக்கான படகுகள் மற்றும் வதிவிட உதவிகளை உள்ளூர் மீனவர்கள் வழங்கி வருகின்றனர். பெருமளவு தென்னிலங்கை மீனவர்கள் படையினரின் முகாம் சூழல்களிலும் தங்கியுள்ளனர்.
 தென்னிலங்கை மீனவர்கள் அதி கூடிய வெளியிணைப்பு இயந்திரங்களை பயன்படுத்துவதாகவும் இதனால் தமது தொழில் நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதாகவும் உள்ளூர் மீனவர்கள் குரல் எழுப்பத்தொடங்கியுள்ளனர்.
 அண்மையில் ஒன்று கூடிய வடபகுதிமீனவ சங்கங்கள்,தென்னிலங்கை மீனவர்களுக்கு படகுகளையோ, வதிவிடங்களையோ உள்ளூர் மீனவர்கள் வழங்கக் கூடாதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய இழுபறிகளின் மத்தியிலேயே தெற்கு மீனவர்களது கவனம் கடற்படையினரது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள தீவகப் பகுதிகளை நோக்கி திரும்பியுள்ளது. கடற்படையினரது பாதுகாப்புடன் வந்திருந்த நூற்றுக்கணக்கான தென்னிலங்கை மீனவர்கள் புங்குடுதீவு கடற்பரப்பில் கடலட்டை மற்றும் சங்கு பிடிக்கும் தொழிலில் ஈடுபட முற்பட்டுள்ளனர்.
எனினும் இதற்கு உள்ளூர் மீனவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதையடுத்து உட்பட்ட முறுகல் நிலையை தீர்க்க உள்ளூர் மீனவ சங்க பிரதி நிதிகளை கடற்படை அழைத்திருந்தது. அவ்வேளைமீனவ சங்க பிரமுகர்கள் கொலை அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இத்தகைய இழுபறிகளின் மத்தியிலேயே நெடுந்தீவிலுள்ள அரச காணிகளில், தென்னிலங்கை மீனவர்களை குடியமர்த்தும் முயற்சிகள் தொடர்பான செய்திகள் வெளிவரத் தொடங்கியுள்ளன. ஆழ்கடல் மீன் பிடியில் ஈடுபடக் கூடியதாக, தொழில் உபகரணங்கள் சகிதம் இம் மீனவ குடும்பங்கள் குடியமர்த்தப்படவுள்ளன.
இவர்களுக்கு இந்திய வீடமைப்பு திட்ட உதவியின் கீழ் நிரந்தர வீடுகளை அமைத்து வழங்கவும் திட்டமிடப்படுவதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
புலம்பெயர் வாழ் எம் உறவுகளே இது சிந்திக்கும் நேரமல்ல செயற்படும் நேரம்! வரும் 19.09.2011 ஜெனிவாவில்,சிங்களத்தின் வன்கொடுமைகளுக்கு எதிராக நாம் ஒன்றுபட்டுக் குரல்கொடுப்போம் வாரீர்!
  (சூறையாடல்கள் தொடரும்)

தமிழ் மக்களைக் குழப்பும் காணிப்பதிவுகள்!

தமிழர் தாயகப் பகுதி எங்கும் தமிழ்  இளம் சமுதாயங்களின் உயிர்கள் காவுகொள்ளப்படும் நிலையில், தமிழ் மக்களின் பூர்வீகம் நிலங்கள் சிங்கள இனவாதத்தால் சூறையாடப்படும் படலம் தொடர்கின்றது.
யாழ். நகரில் வரலாற்று புகழ்மிக்க பழைய பூங்கா கட்டடம் வடமாகாண சிங்கள ஆளுநர் சந்திரசிறியின் பணிப்புரையின் பேரில் இடித்துடைக்கப்பட்டுவருவதாக யாழ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில் கச்சேரியாகவும் அரச அதிபரின் வாசஸ்தலமாகவும் பாவிக்கப்பட்ட குறித்த கட்டடம் 1829ஆம் ஆண்டு யாழ். மாவட்ட அரச அதிபர் காரியாலயத்திற்கு சொந்தமானதென முன்னாள் அரச அதிபர் லைக்கினால் எழுதிக் கொடுக்கப்பட்டிருந்தது.
தற்போதைய யாழ். அரச அதிபர் காரியாலயத்திற்கு நேரெதிரே அமைந்துள்ள குறித்த பழைய பூங்கா கட்டடம் தொல்பொருள் திணைக்களத்தினால் பராமரிக்கப்பட்டும் வந்துள்ளது.
இந்நிலையிலேயே வடமாகாண ஆளுநர் சந்திரசிறியின் பணிப்பு என்று கூறி, அவரது பிரத்தியேக செயலர் தலைமையில் குறித்த கட்டடத்தின் பகுதியும் சுற்று மதிலும் கடந்தவாரம் இடிக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக யாழ். மாவட்ட அரச அதிபர் இமெல்டா சுகுமார் தனக்கு எதுவும் தெரியாது. 'யாழ். மாவட்டத்தில் என்ன நடைபெறுகிறதென்றே தெரியவில்லை. எங்களையும் மீறி என்னென்னமோ நடைபெற்று வருகிறது" என பொறுப்பில்லாமல் சர்வசாதாரணமாகப் பதில் கூறியுள்ளார்.
தனக்கு ஒரு கடிதம் வந்திருந்ததாகவும் அதில் பழைய பூங்கா கட்டடத்தின் சுவர்களில் பரவிக் கிடக்கின்ற மர வேர்களை அப்புறப்படுத்தவுள்ளோம் என தொல்பொருள் திணைக்களத்திற்கு ஆளுநரால்  எழுதனப்பட்டிருந்ததாகவும் -
இக்கடிதம் தொடர்பான விபரங்களை ஆராய்வதற்கிடையில்  மாநகர சபையினரால் அந்த பழைய கட்டடத்தின் பல பகுதிகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளன எனவும் - யாழ். மாவட்ட அரச அதிபர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2ஆம் திகதி மரபுரிமைகள் அமைச்சினால் இந்த பழைய பூங்கா கட்டடம் 'தொல்பொருள் சின்னம்' என பிரகடணப்படுத்தப்பட்டு 1722 என்னும் இலக்கத்தினையுடைய வர்த்தமானி அறிவித்தலொன்றும் வெளிவந்திருந்த நிலையில் குறித்த கட்டடம் இடிக்கப்படுவதாகவும் ; நீலிக் கண்ணீர் வடித்துள்ள இமெல்டா சுகுமார் மேலிடத்திற்கு இவ்விடயத்தைத் தெரிவிக்கமுடியுமே தவிர என்னால் எதுவும் செய்ய முடியாது...' என்று யாழில் ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
ஆயினும் பழைய பூங்காக் கட்டடத்தின் பெரும் பகுதி உடைத்துச் சின்னாபின்னமாக்கப்பட்டுவிட்டது.
இந்நிலையில், யாழ். மாவட்டத்தில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் காணிப்பதிவு நடவடிக்கையினால் பொதுமக்கள் பலர் கதிகலங்கி உள்ளதுடன் பெரும் சிரமங்களையும் எதிர் நோக்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எந்த விதமான அறிவித்தலுமின்றி கிராம சேவையாளர் ஊடாக விநியோகிக்கப்படும் படிவங்களைப் பெற்றுக்கொள்ளும் பொதுமக்கள், அதனை நிரப்பிக் கொடுப்பதிலேயே முனைப்புக் காட்டுகின்றனர்.
காரணமின்றி மேற்கொள்ளப்படும் இந்தப் பதிவுகள் தொடர்பாக பொதுமக்கள் கிராம சேவையாளரிடம் விளக்கம் கேட்கும் போது அவர்களும் உரிய முறையில் பதில் அளிப்பது கிடையாது.
காரணம் கிராம சேவகர்களுக்கும் இதற்கான பூரண விளக்கம் உயர் அதிகாரிகளால் வழங்கப்படவில்லை என்பதே ஆகும். விண்ணப்பப் படிவங்களை நிரப்பி கையளிக்கும் போது காணியின் உறுதி மற்றும் விளக்கப்படங்களையும் சேர்த்து வழங்குமாறு மக்களிடம் கேட்கப்படுகின்றது. இதன்படியே விண்ணப்பப் படிவங்களும் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.
இதனால் யாழ். மாவட்டத்தில் காணியுள்ள பலர் வெளிநாடுகளில் புலம் பெயர்ந்து வசித்து வருவதனால் இவர்களின் உறுதிகளைப் பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர் நோக்குகின்றனர்.
இந்தப் பதிவுகளை உடன் நிறுத்துமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அரசாங்கத்திடம் பல முறை வலியுறுத்தியபோதும் அரசு அதனை உதாசீனம் செய்து பதிவுகளை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்ற தென்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் அங்கு தமிழ் மக்கள் குழப்பமடைந்துள்ளனர்.
இதேவேளை, வீதி நிர்மாணப் பணிகளுக்கான கிரவல் மண்ணினை பெற்றுக் கொள்ளவென முல்லைத்தீவு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நாள் தோறும் தொன் கணக்கில் மண் அகழ்வு இடம்பெற்று வருகின்றது.
ஆனால் இம்மண் முல்லைத்தீவிற்கு வெளியேயும் எடுத்துச் செல்லப்படுவதாக உள்ளூர் அமைப்புக்கள் பலவும் குற்றச்சாட்டுக்களை எழுப்பி வருகின்றன.
கனிய வள திணைக்களத்திடமிருந்து அனுமதி பெற்றே முலைத்தீவில் மண் அகழ்வில் ஈடுபட்டுள்ளதாக முல்லைதீவு அரச அதிபர் ஏ.பத்திநாதர் கூறுகிறார்.
உள்ளூர் மக்கள் கூட தமக்கு தேவையான கிரவல் மண்ணினை அவர்களிடமிருந்தே பெற்றுக் கொள்ள வேண்டுமெனவும் தெவிக்கிறார்.
ஆனால் முல்லைத்தீவில் மணல் அகழ்விற்கான அனுமதி பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த தென்னிலங்கையர்களுக்கே வழங்கப்பட்டிருப்பதாகவும் உள்ளூர் அமைப்புக்களுக்கு சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டிருக்கவில்லை எனவும் குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்படுகின்றது.
உள்ளூர் பொது அமைப்புக்களுக்கு மண் அகழ்வதற்கான அனுமதியை வழங்குவதன் மூலம் உள்ளூர் மக்களது பணம் தெற்கிற்கு செல்வதை தவிர்க்க முடியுமெனவும் பொது அமைப்புக்கள் கேள்வி எழுப்புகின்றன.
குமுழமுனைப் பகுதியில் பல ஏக்கர் நிலப் பரப்பு ஆக்கிரமிக்கப்பட்டு கனரக வாகனங்கள் மூலம் மண் அகழ்வு தொடர்கிறது. திட்டமிடலின்றி மேற்கொள்ளப்படும் இம் மணல் அகழ்வினால் முள்ளியவளை - குமுழமுனை வீதி இடிந்து வீழ்ந்து போகலாமென அஞ்சப்படுகின்றது. அத்துடன் வெள்ளம் தேங்கும் அபாயம் பற்றியும் எச்சரிக்கப்படுகின்றது.
இவை பற்றியெல்லாம் அங்கு நிர்வாகம் நடத்தும் ஆளும் தரப்பைச் சேர்ந்தவர்களோ பினாமிகளோ கண்டு கொள்வதில்லையென்பதால் இந்நடவடிக்கைகளில் அவர்களது பங்கும் இருக்கலாமென பொது அமைப்புக்கள் தரப்பில் சந்தேகம் எழுப்பப்படுகின்றது.
உரிய தரப்பினரே சிந்தித்துச் செயற்படுவதன் மூலமே நாம் எமது தாயகத்தை மீட்க முடியும். சிந்தியுங்கள். செயற்படுங்கள்!
(சூறையாடல்கள் தொடரும்)

யாழ்.குடாவில் அதிகரிக்கும் அகால மரணங்கள்!




யாழ்.குடாவில் இடம்பெற்றுவரும் சமூக சீரழிவுகள் குறித்து பலதடவைகள் இப்பகுதியில் குறிப்பிட்டிருந்தோம். ஆயினும் யாழ்.குடாவில் சமூக சீரழிவுகள் இன்னும் தொடர்ந்து இடம்பெற்றுவருவாதக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 கடந்த நத்தார் தினத்தன்று (25.12.2011) இளைஞர்கள் கும்பல் ஒன்று யாழ்.பேருந்து தரிப்பிடத்தில் நீண்ட நேரம் நின்று, அங்கே வீதியால் வந்த பெண்களுடன் தகாதமுறையில் நடந்துகொண்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ்.பேருந்து தரிப்பிடத்தில் நீண்டநேரமாக இளைஞர்கள் கும்பல் ஒன்று தொலைபேசிகளுடன் நின்றதாகவும், அங்கு வரும் பெண் பிள்ளைகளிடம் தகாத வார்த்தைகள் பேசியதுடன் தகாத முறையில் நடந்துகொள்ள முயன்றதாகவும் அவர்கள்  குறிப்பிட்டனர்.

இளைஞர்களின் இந்த நடவடிக்கையால் பாதிக்கபட்ட பெண் ஒருவர் யாழ்.பேருந்து நிலைய அலுவலகத்தில் முறையிட்டதை அடுத்து, இந்த இளைஞர் கும்பல்; கலைந்துசென்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை இளைஞர்கள் வீதிகளில் கூடிநின்று கதைப்பதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்றும், மீறி வீதிகளில் கூடிநிற்போர் கைதுசெய்யப்படுவார்கள் எனவும் கோப்பாய் காவல்துறைவட்டாரங்கள் தெரிவித்துள்ளதான தகவல்கள் வெளியாகியபோதும், இளைஞர்களின் அட்டகாசம் தொடர் கதையாகவே இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில், கடந்த 2011 ஆம் ஆண்டில் தற்கொலை மரணச் சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 யாழ்ப்பாணத்தில் நடப்பாண்டு 36 தற்கொலையால் ஏற்பட்டுள்ள மரணச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக யாழ். பொது மருத்துவமனை மரணங்கள் தொடர்பான விசாரணை அறிக்கையின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த காலத்தினை விடவும் இத்தற்கொலை சம்பவம் அதிகரித்திருப்பதற்கு காரணமாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சமூகமாக யாழ்ப்பாணம் முழுமையாக மாறியிருப்பதும் தற்கொலை சம்பவங்களுக்கு ஒரு காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்தகாலபோரின்போது ஏற்பட்ட வடுக்கள் குறிப்பாக உயிரிழப்பு, அங்கவீனம், தடுப்பு முகாங்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள், காணமல்போனவர்கள், யுத்தத்தின் இதுவரையும் உறவினர் இறந்தார்களா இல்லை படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்களா என்று விடை தேட முடியாத உறவுகள் போன்றவர்கள் இன்றும் போரின் கொடூரத்தில் இருந்து மீளவில்லை.

இத் தற்கொலைச் சம்பவங்களிற்கு பெரும்பாலும் தாங்கமுடியாத அதிர்ச்சி, மன அழுத்தம், விரக்தி, வாழ்க்கையில் நம்பிக்கை இன்மை, குடும்பப் பிணக்கு, எதிர்கால வாழ்வில் நம்பிக்கை இன்மை போன்றவையே காரணமாக அமைந்துள்ளன. யாழ் பொது மருத்துவமனையின் தற்கொலை மரணங்கள் தொடர்பாக பதிவுகளில் இதுவரை 12 ஆண்களும், 24 பெண்களும் தற்கொலை செய்து உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் யாழ்.குடாவில் சிசு மரணமும் அதிகரித்துள்ளது. யாழ். இளவாலை மார்ஷன் கூடல் பகுதியிலுள்ள பற்றைக் காட்டுக்குள் இருந்து இறந்த நிலையில் சிசு ஒன்றின் சடலத்தை நேற்று திங்கட்கிழமை பகல் மீட்டுள்ளதாக இளவாலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அப்பகுதியில் விறகு வெட்டச் சென்றவர்கள் காவல்துறையினருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் இந்த சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சிசு சிறிய பை ஒன்றில் பொதி செய்யப்பட்டு வீசி எறியப்பட்டுள்ளதாகவும் குறைமாதத்தில் பிறந்த சிசுவாக இது இருக்கலாம் எனவும் காவல்துறைனர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சிசுவின் சடலம் இளவாலை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

இதற்கு இளவயதுக் கர்ப்பமும் காரணமாக உள்ளதாகத்  தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறே, மன்னார் மாவட்டத்திலும் தலைதூக்கும் கலாச்சாரச் சீரழிவுகளை தடுத்து நிறுத்துமாறு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மன்னார் கீரித்தாழ்வுபாட்டுக் கடற்கரை ஓரங்களில் கலாசார சீர்கேடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தில் கடந்த காலங்களில் பொழுதைக் கழிப்பதற்காக எந்த விதமான இடங்களும் காணப்படவில்லை.

இதனால் மக்கள் மாலை நேரங்களில் வீடுகளிலேயே முடங்கிக் கிடந்தனர். தற்போது யுத்தம் முடிவடைந்த நிலையில் மன்னார் மாவட்ட மக்கள் பல்வேறு விடயங்களிலும் சுதந்திரமாகச் செயற்படுகின்றனர்.

இந்த நிலையில் இவர்கள் பொழுதைக் கழிப்பதற்காக மன்னார் பிரதான பாலத்தடி மற்றும் மன்னார் கீரிதாழ்வுபாடு கடற்கரைப் பகுதி ஆகியவற்றுக்குச் சென்று வருகின்றனர். இவர்கள் குடும்பம் குடும்பமாக அங்கு சென்று பொழுதைக் கழித்துவிட்டு வருகின்றனர். ஆனால் இளைஞர்,யுவதிகள் பலர் இவ்விடங்களுக்கு வந்து நடந்து கொள்ளும் விதமோ வித்தியாசமானது.

அண்மைக்காலமாக மன்னார் பாலத்தடிப் பகுதியில் குறிப்பிட்ட சில இளைஞர், யுவதிகளின் நடவடிக்கைகள் நாகரிகமற்ற முறையில் காணப்படுகின்றன. குடும்பத்துடன் வருபவர்களையும், பார்ப்பவர்களையும் முகம் சுழிக்கச் செய்யும் விதத்தில் சில இளைஞர், யுவதிகள் நடந்து கொள்கின்றனர்.

முன்னர் ஊடகங்கள் மூலம் இந்தப் பிரச்சினை வெளிக் கொண்டுவரப்பட்டபின் சம்மந்தப்பட்டவர்கள் செயற்பட்டு குறித்த பிரச்சினையைக் கட்டுப்படுத்தினர். குறித்த பிரச்சினைகள் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே அதிகரித்து காணப்பட்டது. ஆனால் தற்போது குறித்த கலாசாரச் சீரழிவுகள் மன்னார் கீரி தாழ்வுபாடு கடற்கரையோரங்களில் அதிகரித்து காணப்படுவதாக கிராம மக்களும் சமூக ஆர்வலர்களும் விசனம் தெரிவிக்கின்றனர். மன்னார் நகருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள இந்தக் கடற்கரைப் பகுதிகளுக்கு அதிகமான இளைஞர், யுவதிகள் பொழுது போக்கில் அப்பகுதியில் உள்ள பற்றைக் காடுகளிலும் நடந்து கொள்கின்றனர்.

 மன்னாரில் உள்ள அதிகாரிகள் இவ்விடயத்தில் தலையிட்டு தடுத்து நிறுத்த முற்படுகின்றபோதும் அது பயனற்றுப் போயுள்ளதாக விசனம் தெரிவிக்கப்படுகின்றது.  இதனைத் தடுப்பதற்கு உரியவர்கள் தான் வரவேண்டும் பலரும் ஆதங்கம் தெரிவித்து வருகின்றனர்.

தட்டிக்கேட்க ஆளில்லாவிட்டால், எமது மக்களின் எதிர்காலம் கேள்விக்குரியதே!

புலம்பெயர்வாழ் தமிழ் மக்களே இது சிந்திக்கும் நேரமல்ல சிந்தித்து செயற்படும் நேரம்.

(சூறையாடல் தொடரும்)

.இளம் மாணவர்கள் மீது திரும்பியுள்ள சிங்களப் பார்வை!


தமிழர்களின் சொத்துக்களை தொடர்ந்து சூறையாடிவரும் சிங்களத்தின் கோரப்பார்வை தற்போது தமிழர்களின் சொத்துக்களில் ஒன்றான கல்வியை ஒடுக்குவதற்கும் இளம் மாணவர்களின் சிங்கள அத்துமீறலுக்கு எதிராக எழும் எதிர்ப்பலைகளை அடக்குவதற்கும் முனைப்புடன் திரும்பியுள்ளது.
அந்தவகையில், யாழ். பல்கலையின் மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் சிலருக்கு உயிரச்சுறுத்தல் விடுத்து துண்டுபிரசுரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
கடந்த 15-12-2011 வியாழக்கிழமை காலை யாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் பல இடங்களில் இவ்வாறான துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டிருந்ததுடன், அங்காங்கே வீசப்பட்டும் காணப்பட்டதாக மாணவர்கள் தெரிவித்தனர்.
மாணவர்களின் பெயர்கள், அவர்களின் சொந்த இடங்களான மாவட்டங்கள் குறிப்பிட்டு இதில் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளதுடன், சில விரிவுரையாளர்களின் பெயர்களும் உள்ளடக்கப்பட்டு அவர்களுக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் சமாதானத்தை அனுபவித்துக் கொண்டிருப்பதாகத் தெரிவிக்கும் இந்தத் துண்டுப் பிரசுரத்தில், அதனைக் குழப்ப முனையும் மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்னரும் இவ்வாறான எச்சரிக்கைத் துண்டுப் பிரசுரங்கள் ஒட்டப்பட்டிருந்ததை மாணவர்கள் நினைவூட்டும் அதேவேளை, இம்முறை வவுனியா வளாக மாணவர்கள் சிலரின் பெயரும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
பல்கலைக் கழகத்தினுள் இருந்து தகவல் வழங்கும் புல்லுருவிகள் மூலம் தகவல்களை பெற்றுக்கொள்ளும் படைப் புலனாய்வாளர்கள், மாணவர் சக்தியை நேருக்குநேர் எதிர்கொள்ள முடியாது இவ்வாறு அச்சுறுத்திப் பணியவைக்க முனைவதாக தெரிவித்துள்ள சிரேஸ்ட விரிவுரையாளர் ஒருவர், இவ்வாறான அச்சுறுத்தல் பிரசுரங்கள் மூலம் மாணவர்களின் ஒற்றுமை மற்றும் மனோ வலிமையை சிதைத்து, தமது அரச பயங்கரவாதத்தை நிலைக்கச் செய்ய அரசு எடுக்கும் முயற்சிகள் இவை என மேலும் தெரிவித்துள்ளார்.
அண்மைய நாட்களாக பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிராக சிறீலங்காப் படையினர் மற்றும் புலனாய்வாளர்களின் நடவடிக்கைகள் அதிகரித்துக் காணப்படுவதுடன், அவர்களுக்கு தொடர்ந்தும் உயிரச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருகின்றது.
பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் மீதான கொலைவெறித் தாக்குதல் மற்றும் சித்த மருத்துவபீட மாணவனின் கடத்தல் என்பனவற்றுக்கு எதிராக மாணவர் காட்டிய எதிர்ப்புகளும், மாவீரர் எழுச்சி வாரத்தை ஒட்டிய நிகழ்வுகளாலும் சீற்றமடைந்திருந்த படையினரும், புலனாய்வாளர்களும் இவ்வாறு நடந்து கொள்வார்கள் என தாம் முன்னரே எதிர்பார்த்த ஒன்று என மாணவர்கள் தெரிவித்தனர்.
வன்முறையற்ற ரீதியில் தமது உரிமைக்காக குரல் கொடுக்கும் அனைவரும் சிறீலங்கா அரச பயங்கரவாதத்தால் இவ்வாறு அச்சுறுத்தப்பட்டும், கொன்றொழிக்கப்பட்டும் மௌனிக்க வைக்கப்படுகின்றார்கள் என்பதற்கு மீண்டும் ஒரு புலப்படு ஆதாரமாக இந்த உயிர் அச்சுறுத் தல் பிரசுரங்கள் இருப்பதை அவர்கள் சுட்டிக்காட்டினர்.
கடந்த காலங்களில் தமிழீழ விடுதலைப் போர் உக்கிரமாக நடந்துகொண்டிருந்த காலங்களிலும் சிறிலங்கா படைப்புலனாய்வாளர்கள் மற்றும் அவர்களுடன் இணைந்தியங்கிய மாணவர்களை எச்சரித்து 'நாட்டைக்காக்கும் தமிழர் கூட்டமைப்பு" மற்றும் 'நாம் தமிழர்" என்னும் பெயரில் துண்டுப்பிரசுரங்களை வெளியிட்டதும், கடந்த வருடம் யாழ்ப்பாணத்தில் நடைபெற இருந்த 'ஜேர்மனிய வாரம்" என்னும் தொனிப்பொருளிலான ஒரு கலாசாரப்பகிரல் நிகழ்வை குழப்ப 'நாம் தமிழர்" என்னும் பெயரில் தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் மிரட்டல்கள் விடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ் மக்களின் குரல்கொடுக்கும் சக்தியாக இளைய தலைமுறை உருவாவதை தடுக்கும் நோக்குடன், தாயக மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் மீது மேற்கொள்ளப்படும் இவ்வாறான நடவடிக்கைகள் உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
இதற்கென அனைத்துலகும் வியாபித்து பலமடைந்துள்ள புலம்பெயர் உறவுகள் ஒருமித்துக்குரல் கொடுக்க முன்வரவேண்டும் என்றும், சாத்வீக ரீதியான தாயக மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களின் உரிமைக்கான குரலைப் பலப்படுத்தி, அவர்கள் எதிர்நோக்கும் சிறீலங்கா அரச பயங்கரவாத இன்னல்களை அகற்ற பன்னாட்டு விழிப்புணர்வை ஏற்படுத்த முன்வரவேண்டும் என்றும் தாம் வேண்டி நிற்பதாக மாணவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதேவேளை, மாணவர்கள் கடத்தப்பட்டு காணாமல்போகும் சம்பவங்களும் யாழ்.குடாவில் அரங்கேறி வருகின்றது.
யாழ் நகரில் கடந்தவாரம் புதன்கிழமை மாலை 4 மணியளவில் பிரபல வணிகர் ஒருவரின் மகன் காணாமல் போயுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.
யாழ். பரியோவான் கல்லூரியில் க.பொ.த உயர்தரத்தில் கல்வி பயிலும், யாழ். அத்தியடியைச் சேர்ந்த பாக்கியராசா தனுஜன் (வயது 18) என்ற  மாணவனே காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்.நகரப் பகுதியில் அமைந்துள்ள தனது தந்தையின் வியாபார நிலையத்தில் வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த சமயம் அருகில் இருந்த உணவகத்திற்கு சாப்பிடச் சென்ற குறித்த மாணவன் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை என யாழ். காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ் மக்களை சீண்டும் நடவடிக்கையில் தமிழீழ தாயகப் பகுதிக்கு வெளியேயும் சிங்களம் இறங்கியுள்ளதான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
கடந்த வாரம் புதன்கிழமை இரவு  சிறிலங்கா கேகாலை மாவட்டத்தில் எட்டியாந்தோட்டைக்கு அருகே உள்ள எதுராபொல கீழ்ப்பிரிவு தோட்டத்தில் அமைந்துள்ள இந்து ஆலயத்தினுள் அத்துமீறி நுழைந்த அயலூர் சிங்கள காடையர்கள்,அங்கிருந்த தமிழர்களைக்இ கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளனர்.
மார்கழி மாத பஜனை வழிபாடு தொடர்பான கோயில் நிர்வாகக் குழு கூட்டமொன்றை நடத்திக்கொண்டிருந்தபோது, கோயிலுக்குள் வாள்கள் மற்றும் தடிகளுடன் நுழைந்தவர்கள் கோயில் வழிபாட்டுப் பொருட்களைத் தாக்கி, அங்கிருந்த இளைஞர்களையும் பெண்களையும் தாக்கிவிட்டுச் சென்றதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தையடுத்து தம்மீது இதற்குப் பின்னரும் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சம் நிலவுவதாகவும் தாக்குதலுக்குள்ளான பெண்களில் ஒருவர் தெரிவித்துள்ளார்.
குறித்தப் பிரதேசத்தில் அடிக்கடி இவ்வாறான அச்சுறுத்தல் மற்றும் தாக்குதல் சம்பவங்கள் கடந்த காலங்களிலும் நடந்துள்ளதால் காவல்துறையினரும் தொழிற்சங்க அதிகாரிகளும் அரசியல் தலைவர்களும் தமது பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும்  உள்ளூர் தொழிற்சங்கத் தலைவர்களில் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தாக்குதலில் தமிழர்கள் 4 பேர் காயமடைந்ததாகக் கூறிய காவல்துறைப் பேச்சாளர், பிரதான சந்தேகநபர் அன்றிரவே கைதுசெய்யப்பட்டு 19ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இன்னும் மூன்று சந்தேக நபர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆயினும், கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர், நான் உள்ளேசென்றுவிட்டு மீண்டும் வந்து உங்கள் மீது தாக்குதல் நடத்துவேன் என்று பாதிக்கப்பட்டவர்களை அச்;சுறுத்திவிட்டுச் சென்றதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளனர்.
எவ்வளவு காலத்திற்குத்தான் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகள் இவ்வாறு தொடரும். சிங்களவனுக்குத் துணைபோபவர்களே, சற்றுச் சிந்தியுங்கள்! எப்போது நீங்கள் திருப்பித் தாக்குவீர்கள், உங்கள் இனத்தைக் காட்டிக் கொடுப்பதை நிறுத்திவிட்டு...?
புலம்பெயர் வாழ் எம் உறவுகளே இது சிந்திக்கும் நேரமல்ல நாம் ஒன்றாக இணைந்து செயற்படவேண்டிய நேரம் இது.
(சூறையாடல்கள் தொடரும்) 

வன்னியில் முனைப்புப் பெறும் சிங்கள வன்கொடுமைகள்!


வன்னிப் பகுதியில் சிங்களப் பேரினவாதத்தின் பொதுமக்கள் மீதான வன்கொடுமைகள் தொடர்கதையாகி வருகின்றது. இதை அங்கிருந்து வரும் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. அங்கு தமிழ் மக்கள் நாளாந்தம் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்துக் கொண்டே நாட்களை நகர்த்துகின்றனர்.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் வன்னிமண் இருந்த காலத்தில் ஒரு பெண் நள்ளிரவு வேளையில்கூட தன்னந்தனியே செல்லக் கூடியாதாக இருந்தமை உலகே அறிந்த உண்மை. ஆனால் இன்று சிங்களம் விடுதலைப் புலிகளிடமிருந்து மக்களை மீட்டுள்ளதாகக் கூறிவரும் நிலையில் அங்கு மக்கள் வீடுகளுக்குள்ளேயே நின்மதியாக உறங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வன்னியில் இரவுப் பொழுதென்பது மிகவும் அச்சமானதாகவே கழிகின்றது.
இந்நிலையில், கிளிநொச்சி இரணைமடுச் சந்திப்பகுதியில் மோசடியில் ஈடுபட்ட சிங்களவர்களைக் காப்பதற்காக அப்பகுதி மக்கள் மீது படையினர் தாக்குதல் நடத்திய சம்பவம் ஒன்று மக்களை அச்சமடைய வைத்துள்ளது.
கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை இரவு 8 மணியளவில் கிளிநொச்சி இரணைமடுப் பகுதியில் உள்ள மகேந்திரம் என்பவரது கடைக்கு வருகைதந்த 4 சிங்கள இளைஞர்கள் அங்கு சில பொருட்களை வாங்கிவிட்டு மீகுதிப் பணத்தினை பெற்றுக் கொண்ட பின்னரும் மிகுதிப்பணம் தரவில்லை என்று தகராறு புரிந்துள்ளனர்.
 சம்பவ இடத்திற்கு வந்த கடை உரிமையாளரின் தம்பி மேற்படி சிங்கள இளைஞர்களுக்கு சிங்கள மொழியில்மிகுதிப்பணம் தரப்பட்டுள்ளது. பிரச்சினை செய்யாமல் அங்கிருந்து விலகிச் செல்லுமாறு கூறியுள்ளார். இதனையடுத்து உரிமையாளரின் தம்பியை எந்தவிதமான காரணமும் இல்லாமல் 4 சிங்கள இளைஞர்களும் தாக்கத்தொடங்கியுள்ளனர்.
இவற்றை அவதானித்துக் கொண்டிருந்த அங்கிருந்த சிலர் மேற்படி சிங்கள இளைஞர்களைத்திருப்பித் தாக்கத் தொடங்கியவுடன், அங்கிருந்து தப்பிச் சென்ற சிங்கள இளைஞர்கள் அருகில் உள்ள படைமுகாம் ஒன்றில் தஞ்சம் புகுந்தனர். 20இற்குமேற்பட்ட படையினருடன் வந்து அங்கிருந்த இளைஞர்களையும், குடும்பஸ்தர்களையும் கண்மூடித்தனமாகத்தாக்கினர். இது மட்டுமல்லாமல் அயலில் உள்ள வீடுகளுக்குள்ளும் புகுந்த படையினர்; வீட்டில் இருந்தவர்களையும் வெளியில் இழுத்துப் பேட்டு காட்டுமிராண்டித் தனமாகத் தாக்கினர்கள்.
தாக்குதலைத் தாங்கிக் கொள்ள முடியாத மக்கள் படையினரை திருப்பித் தாக்கியுள்ளனர். அங்கு நிலைமைமோசமாகவே சம்பவ இடத்திற்கு வந்த இராணுவ காவல்துறையினர்
(மில்ரிப் பொலிஸ் ) இரு தரப்பினரையும் சமாதனப்படுத்த முயன்றபோதும் படையினர் கடுமையாகத் தாக்குதலைத் தொடர்ந்தனர்.
படையினரின் தாக்குதல் தொடர்பாக அப்பிரதேச வாசி ஒருவர் தெரிவிக்கையில், சீருடைகளுடனும் ஆயுதங்களுடனும்வந்த இராணுவத்தினர் கையில் கிடைப்பதை எல்லாம் பயன்படுத்தி தாக்குதல் நடத்தினர். இதனுள் அகப்பட்ட 16 வயதுச்சிறுவன் ஒருவனை வீதியில் போட்டு சப்பாத்துக் கால்களாலும் துப்பாக்கிப் பிடிகளாலும் மயக்கம் போட்டுவிழும் வரை தாக்கினர்.
இத் தாக்குதல் சம்பவத்தினைத் தொடர்ந்து படையினரின் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட அனைவரும் கைதுசெய்யப்பட்டு இரவு 11 மணியளவில் கடுமையாக எச்சரிக்கை செய்யப் பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வருகைதந்த இராணுவப் புலனாய்வினர், இச்சம்பவம் தொடர்பாக வெளியில் யாருக்கும் சொல்லக் கூடாது. குறிப்பாக ஊடகங்களுக்குத் தெரியப்படுத்தக் கூடாது என்று மிரட்டியுள்ளனர். இதுமட்டுமல்லாமல் தாக்குதலுக்கு இலக்கானவர்களைப் பார்த்து இராணுவத்திற்கு கைநீட்டும் அளவிற்கு உங்களுக்குபலம் வந்துவிட்டதா? நீங்கள் வீதியில் வைத்து சிங்களவனை அடிப்பீர்கள். நாங்கள் அதை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்போம் என்று நினைத்தீர்களா? இனிவரும் காலங்களில் இவ்வாறு நடந்தால் உங்கள் அனைவரையும்சுட்டுத் தள்ளிவிடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர் என படைப் புலனாய்வாளர்கள் எச்சரிக்கை விட்டுள்ளார்கள் இதனால் குறிப்பிட்ட பகுதி மக்கள் விரக்தியும் அச்சமும் அடைந்துள்ளார்கள்.
இந்நிலையில், கிளிநொச்சி வட்டக்கச்சிப் பகுதியில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்த 42 வயதுடைய உளநலம் குன்றிய பெண்ணொருவரை கடந்தவாரம் வியாழக்கிழமை இரவு அப்பகுதியைச் சேர்ந்த இருவர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ள கொடுமையான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
 இதனால் குறித்த பெண் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட நிலையில் அயலவரின் உதவியுடன் உடனடியாகக் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இருவரைக் கிளிநொச்சிப் பொலிஸார் மறுநாள் வெள்ளிக்கிழமை அதிகாலை கைதுசெய்து, இருவரும் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் பெ.சிவகுமார் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டனர். அந்த இவரையும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, வன்னியில் கடத்தல் சம்பவங்களும் தற்போது மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.
முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் இளைஞர் ஒருவர் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை இரவு 7 மணியளவில் வாகனம் ஒன்றில் வந்த சில இனந்தெரியாத நபர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ள தாக பிரதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
முல்லைத்தீவு முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலயத்தடியினைச் சேர்ந்த கணேசமூர்த்தி ரதன் (வயது 23) என்ற இளைஞனே கடத்தப்பட்டவர் ஆவார்.
சம்பவ தினத்தன்று தனது வீட்டிற்கு ஆருகில் உள்ள ஆலயத்தடியினால் சென்று கொண்டிருந்த இளைஞனை வாகனத்தில் வந்த சிலர் வழிமறித்து உரையாடியுள்ளனர்.
பின்னர் வீட்டிற்குச் சென்று துவிச்சக்கர வண்டியை விட்டுவிட்டுவருமாறு கூறியுள்ளனர்.
அதன்படி வீட்டிற்குச் சென்ற இளைஞன் தான் கொண்டுசென்ற துவிச்சக்கர வண்டியை வீட்டில் விட்டுவிட்டுத திரும்பிச் செல்ல தயாரானபோது இளைஞனது தாயார் வாகனத்தில் உள்ளவர்கள் யார் என்று கேட்டுள்ளனர்.
அதற்கு அவ்விளைஞன் பேசுவதற்கு முன்னரே வாகனத்தில் இருந்தவர்கள் தாம் இராணுவப் புலனாய்வாளர்கள் என்று தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு அந்த இளைஞனை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளனர்.
பின்னர் மேற்படிச் சம்பவம் தொடர்பாக முள்ளியவளைப் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தற்போது அந்த இளைஞன் வவுனியா ஜோசப் முகாமில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வாகனத்தில் இளைஞன் கடத்திச் சென்றுள்ளமை குறித்து அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பதற்றம் நிலவிவருகின்றது.
இந்நிலையில், முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் காணாமல்போனவர் கடந்த வாரம் புதன்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை காணாமல்போன ஒட்டுசுட்டான் பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதுடைய சிவபாதம் உதயகுமார் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
 வீட்டில் இருந்து புறப்பட்ட இவரைக் காணாத நிலையில் உறவினர்கள் காவல்துறை நிலையத்தில் முறையிட்டுள்ளார்கள். இதனைத் தொடர்ந்து ஊரவர்கள் தேடுதல்களை மேற்கொண்டு பார்த்தபோது, ஒட்டிசுட்டான் கற்சிலைமடுக்குளத்தில் இவரது உடலம் மிதந்து கொண்டிருந்த நிலையில் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறான சம்பவங்கள் வன்னிப் பகுதியில் அதிகரித்துள்ளது. இதனைத் தடுப்பதற்கு தமிழ் மக்களுக்கு உரிய காவலர்கள்தான் முன்வரவேண்டும்.
புலம்பெயர் வாழ் எம் உறவுகளே எல்லாம் முடிந்துவிட்டது என்று கூறி எம்மையே நாம் ஏமாற்றுவதை நிறுத்தி சிங்களவனுக்கு எதிராக ஒருமித்து குரல் கொடுப்போம்!
இது சிந்திக்கும் நேரமல்ல நாம் ஒன்றாக செயற்படும் நேரம்!
(சூறையாடல்கள் தொடரும்)

தாயகப் பகுதிகளில் தொடரும் கொள்ளைப் பீதி!



யாழ்மாவட்டம் மற்றும் வன்னிப் பகுதிகளில் தொடர்ந்து இடம்பெற்று வரும் கொள்ளைச் சம்பவங்களினால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளார்கள். இரவுவெளைகளில் ஆள்நடமாட்டம் இல்லாத வேளைகளிலேயே இந்தக் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
இராணுவத்தினரின் காவல் நிலையங்கள் நெருக்கமாக அமைந்துள்ள பகுதிகள் மற்றும் படையினரின் சுற்றுக்காவல் நடவடிக்கைகள் அதிகமாக இடம்பெறும் பகுதிகளிலேயே கொள்ளைகள் அதிகம் இடம்பெற்றுவருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 யாழ்மாவட்டம், வல்வெட்டித்துறை பொலிகண்டிப்பகுதியில் கடந்தவாரம் அதிகாலைவேளை வீட்டில் உள்ளவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த போது ஓட்டினை பிரித்து உள்நுழைந்த திருடர்கள் நகை பணம் உட்பட பெறுமதியான பொருள்களை களவாடிச் சென்றுள்ளனர்.
சுமார் 4 லட்சத்து 23 ஆயிரம் ரூபா பெறுமதியான நகைகள், இரண்டு கைத்தொலைபேசிகள் மற்றும் 5 ஆயிரம் ரூபா ரொக்கப் பணம் என்பனவே களவாடப்பட்டுள்ளன.
இந்நிலையில், யாழ் நெல்லியடியில் ஒரே இரவில் நான்கு கடைகள் உடைக்கப்பட்டு பெரும் தொகையான பணம் பல ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்களும் திருடப்பட்டதுடன் பெறுமதியான பொருட்கள் சேப்படுத்தப்பட்டுள்ளதாகவும் நெல்லியடி காவல்துறையினரிடம் முறைப்பாடு செயப்பட்டுள்ளது.
இக்கொள்ளைகள் கடந்த வாரம் நள்ளிரவை அண்மித்த வேளை இடம்பெற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது. நெல்லியடிச் சந்தியிலிருந்து கொடிகாமம் செல்லும் வீதியில் அமைந்துள்ள இயந்திர விற்பனை நிலையத்தின் கதவு உடைக்கப்பட்டு பெறுமதியான 2 இயந்திரங்கள் திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, நெல்லியடிச் சந்தியில் இருந்து பருத்தித்துறைக்கு செல்லும் வீதியில் அமைந்துள்ள உந்துருளி விற்பனை; நிலையத்தின் கதவு உடைக்கப்பட்டு பல இலட்சம் ரூபா கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகவும் அடுத்து அயலில் உள்ள  மரத்தள பாட விற்பனை நிலையத்தின் கதவுகளை உடைத்து உள்நுழைந்த திருடர்கள் பெறுமதியான பொருட்களை உடைத்து சேதப்படுத்தி விட்டு சென்றுள்ளதாக காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பின்னர் மேற்படி வீதியில் அமைந்துள்ள தீந்தை (பெயின்ற்) விற்பனை நிலையத்தினுள் புகுந்து அங்கிருந்த 53 ஆயிரம் ரூபாவை கொள்ளையடித்து சென்றுள்ளதாகவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது இவ்வாறிருக்க, யாழ்ப்பாணம், கச்சேரியடி முதலியார் வீதியிலுள்ள வீடொன்றில் தனித்திருந்த வயோதிபப் பெண்ணொருவரைக் கட்டிவைத்துவிட்டு சுமார் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளை கொள்ளையிட்டுச் சென்ற சம்பவமொன்று  கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
யாழ். கச்சேரியடி முதலியார் வீதியிலுள்ள வீட்டில் மேற்படி வயோதிபப் பெண்ணும் தனியார் நிறுவனமொன்றில் கடமையாற்றும் அவரது மகளும் வசித்து வரும் நிலையில்,  செவ்வாய்க்கிழமை முற்பகல் 11 மணியளவில் வீட்டில் எவரும் இல்லாதபோது குறித்த வீட்டிற்கு மூவர் சென்றுள்ளனர்.
இவர்கள்  தமது வீட்டிற்கு மாபிள் பதிக்க வேண்டியுள்ளதாகவும் குறித்த வீட்டில் மாபிள் பதிக்கப்பட்ட நிலையில் அதனை பார்வையிடப்போவதாகவும் கூறி உள்நுழைந்துள்ளனர்.
வீட்டினுள் நுழைந்த இந்த மூவரும் மேற்படி வயோதிபப்  பெண்ணின் வாயினுள் துணியை அடைந்து அவரைக் கட்டிவைத்துவிட்டு அவர் அணிந்திருந்த தங்கநகைகளையும் வீட்டிலிருந்த தங்கநகைகளையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
இதனால் பாதிக்கப்பட்ட  மேற்படி  வயோதிபப்பெண் யாழ். போதனா  வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
சுமார் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்கநகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் யாழ். காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், யாழ்ப்பாணம் திருநெல்வேலிப் பகுதியில் கடந்த வியாழக்கிழமை ஒரே இரவில் பதினொரு கடைகள் உடைத்து கொள்ளையிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் சிறீலங்காப்படையினரின் சுற்றுக்காவல் நடவடிக்கை மற்றும் படைக்காவலரண்கள் என பெருந்திரளான படையினர் காவல்துறையினர் நிலைகொண்டுள்ள நிலையில் இந்த பாரிய கொள்ளைச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மிகத் திட்டமிட்ட வகையில் பதினொரு கடைகளிலும் ஒரு குழுவினரே இந்தக் கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என்று மக்கள் கருத்து வெளியிட்டுள்ளார்கள்.
கணனி உதிரிப்பாகங்கள் விற்பனை நிலையங்கள், தீந்தை விற்பனை நிலையங்கள், புடைவை வியாபார நிலையங்கள், பல்பொருள் விற்பனை நிலையங்கள் என்பனவே இவ்வாறு உடைக்கப்பட்டு சூறையாடப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் திருநெல்வேலிப் சந்திப்பகுதியில் ஏழு கடைகளிலும் மற்றும் திருவெல்வேலி தபால்பெட்டி சந்தியிலும் உள்ள நான்கு கடைகளிலும் இந்தக் கொள்ளைகள் இடம்பெற்றுள்ளன. படையினரின் காவலரண்களும் இரவுநேரப் படைகளின் காவல்களும் உள்ள சமயத்திலேயே இந்தக் கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.  இச் சம்பவத்தினைத் தொடர்ந்து யாழ்.குடாவில் உள்ள வர்த்தகர்கள் மத்தியில் பாரிய பதற்றம் நிலவிவருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் கொள்ளைச்சம்பவங் களினால் மக்கள் அச்சம் அடைந்துள்ளதுடன், சிறீலங்கா காவல்துறையினர் மற்றும் படையினரின் அசமந்தபோக்குக் காரணமாக இவர்களின் பின்னணியில் இடம்பெறும் கொள்ளைச் சம்பவங்களை முன்னிட்டு மக்கள் உயிர் அச்சத்தில் வாழ்ந்து வருவதாக பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளார்கள்.
இந்நிலையில், பூட்டியிருந்த கிளிநொச்சி கரைச்சிப் பிரதேச சபையின் களஞ்சிய அறைக் கதவு உடைக்கப்பட்டு அங்கிருந்தபொருட்கள சிறீலங்கா சுகந்திரக் கட்சியினராலும் படைப்புலனாய்வாளர்களினாலும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
கடந்தவாரம் நண்பகல் வேளை கிளிநொச்சி பழைய மருத்துவமனைக்கு முன்னால் உள்ள களஞ்சிய அறைக்கு வாகனம் ஒன்றில் வந்திறங்கிய சிறிலங்கா சுகந்திரக் கட்சியினரும் படைப ;புலனாய்வாளர்களும் அங்கிருந்த பொருட்களை வாகனத்தில் ஏற்றிச்சென்றுள்ளார்கள். அச்சமயம் அவ்வழியால் வந்த பிரதேசசபை ஊழியர்கள் உடனடியாக தமது அலுவலகத்திற்கு தெரியப்படுத்தியதுடன், மேற்படி வாகனத்தினைப் பின்தொடர்ந்து சென்ற போது வாகனம் அதே வீதியில் சற்றுத் தூரத்தில் உள்ள சிறீலங்கா சுகந்திரக் கட்சியின் அலுவலகத்திற்குச் சென்றுள்ளது. பின்னர் அவ்வலுவலகத்தில் உள்ளவர்களிடம் நீங்கள் செய்தது தவறு, எமது பொருட்களை தருமாறும் கேட்டுள்ளனர்.
அதற்கு அக்கட்சியினர் உடைக்கப்பட்ட களஞ்சிய அறை இருக்கும் இடம் தமக்கு சொந்தமானது என்றும் கரைச்சிப் பிரதேச சபைக்குச் சொந்தமானது என்றால் அதை உறுதிப்படுத்தக் கூடிய பத்திரங்களை தாருங்கள் நாங்கள் பொருட்களையும் தருகிறோம் என்று கூறியதுடன் மேலும் தொடர்ந்து அங்கு நின்றால் நடப்பது வேறாகத்தான் இருக்கும் என்றும் மிரட்டியுள்ளனர்.
இதனையடுத்து கிளிநொச்சிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்வற்காக சுமார் ஒரு மணியளவில் சென்றபோதும் அங்கு பிரதேச சபை ஊழியர்களை அங்கும் இங்குமாக இழுத்தடித்துவிட்டு மாலை 5 மணியளவிலேயே முறைப்பாடு ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்ட சபைக் களஞ்சிய அறையானது போரின்போது பாதிக்கப்பட்டுள்ள நிலையில் முன்னர் இருந்தே பிரதேச சபையினால் களஞ்சிய அறையாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
புலம்பெயர் வாழ் எம் உறவுகளே இது சிந்திக்கும் நேரமல்ல நாம் ஒன்று பட்டு செயற்படவேண்டிய நேரம். சிந்தியுங்கள் செயற்படுங்கள்.
(சூறையாடல்கள் தொடரும்)

தமிழர்களை சோதிக்கின்றது சிங்களம்!


தமிழ் மக்கள் கிறீஸ் பூதத்தின்  அச்சத்தில் இருந்து இன்னும் விலகாத நிலையில்,  தமிழர் தாயகத்தின் பல  பகுதிகளில்  இன்னும் கிறீஸ் பூதத்தின் பீதியுடனேயே மக்கள் நாட்களை நகர்த்தும் நிலையில் தமிழ் மக்கள் மீதான சிங்களத்தின் திட்டமிட்ட சூறையாடல் அரங்கேறிக்கொண்டே வருகின்றது.
அம்பாறைப் பகுதியில் விவசாயத்தை ஜீவனோபாயமாகக்கொண்டு வாழும் தமிழ் மக்கள், சிங்களப் பெரும் பான்மையினரால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்ற தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
அங்கு நெல் அறுவடைக்காச் செல்லும் தமிழ் விவசாயிகளை பெரும்பான்மை இனத்தவர்கள் அடித்து விரட்டுவதாக அம்பாறை விவசாயிகள் முறைப்பாடு தெரிவித்துள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பிரதேசங்களில் வேளாண்மைச் செய்கையில் ஈடுபடும் தமிழ் விவசாயிகளை வயல் நிலங்களுக்குள் கால்வைக்கக் கூடாது என மாவட்டதிலுள்ள பெரும்பான்மை சிங்களவர்கள் விரட்டுவதாக தமிழ் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
தற்போது அறுவடை நிலையிலுள்ள நெல்வயல்களை காட்டு மிருகங்களிடமிருந்து பாதுகாப்பதற்காகவும், அறுவடைக்காகவும் அப்பகுதிக்கு செல்லும் விவசாயிகளே இவ்வாறு மிரட்டி விரட்டப்படுகின்றனர் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை, சம்மாந்துறை, வளத்தாப்பிட்டி, கொண்டவெட்டவான் போன்ற பகுதிகளில் செய்கை பண்ணப்பட்டிருக்கும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்குச் சொந்தமான நெற்காணிக்கு செல்லும் விவசாயிகள் மற்றும் வேலையாட்களை இவர்கள் அச்சுறுத்தி மிரட்டுகின்றனர்.
'அம்பாறை மாவட்டம் சிங்களவர்களின் இடம் இங்கு உங்களுக்கு என்ன வேலையிருக்கின்றது. இப்பகுதிகளுக்கு நீங்கள் வரக்கூடாது" என எச்சரிக்கை விடுத்து இந்த அப்பாவி விவசாயிகளைத் திருப்பியனுப்புவதாகவும் அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக அப்பகுதியிலுள்ள காவல்துறையினரிடம் முறையிட்டபோதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.
அம்பாறை மாவட்டத்தில் தமிழர்க்குச் சொந்தமான நெற்காணிகள் மற்றும் குடியிருப்புக் காணிகளை பெரும்பான்மை சிங்களவர்கள், சிறீலங்காப்படையினர், காவல்துறையினர் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன்; அபகரிக்கும் செயற்பாடுகள் அண்மைக்காலமாக அதிகரித்துவருகின்றன.
இந்த   நில அபகரிப்புத் தொடர்பாக அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த சிறீலங்கா அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்பட்டுவரும் முஸ்லிம் அமைச்சர்களினால் கூட எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இதனால் இப்பகுதி தமிழ் மற்றும் முஸ்லிம் விவசாயிகள் மிகவும் உள ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
இந்நிலையில், யாழ். கொழும்புக்கு இடையில் போக்குவரத்தில் ஈடுபடுகின்ற பஸ்களின் தமிழ் சாரதிகளிடம் போக்குவரத்துப் பிரிவுப் பொலிஸார் கப்பம் பெறுகின்றதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுதொடர்பாக  பொலிஸ்மா அதிபர் என்.கே. இலங்ககோனிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ்.  கொழும்புக்கு இடையில் இரவு நேர சேவையில் ஈடுபடும் பஸ் சாரதிகளிடம் 100 ரூபா முதல் 200 ரூபா வரையில் போக்குவரத்துப் பிரிவுப் பொலிஸார் கப்பம் பெறுவதை நேரில் கண்ட ஊடகவியலாளர் ஒருவரே இந்த முறைப்பாட்டைச் செய்துள்ளார்.
சிலாபம், குருநாகல், மதவாச்சி, அநுராதபுரம் ஆகிய பகுதிகளில் கடமையில் ஈடுபடும் போக்கு வரத்துப் பிரிவு பொலிஸார் இவ்வாறு கப்பம் பெறுகின்றனர் என இந்த ஊடகவியலாளர் கூறியுள்ளார்.
பஸ் சாரதிகளுக்குத் தண்டப் பணம் விதிப்பதாக எச்சரிக்கும் பொலிஸார், தண்டப்பணம் விதிப்பதற்குப் பதிலாக சாரதிகளிடம் பணத்தை கையூட்டாகப் (இலஞ்சப் பணம்) பெறுகின்றனர் என ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக, ஒரு நாளுக்கு ஆயிரக் கணக்கான பணத்தை சாரதிகளிடம் இருந்து பொலி ஸார் பெற்று வருகின்றனர் எனக் கூறப்பட்டுள்ளது.
இதனை இவர்கள் வாடிக்கையாகச் செய்துவருகின்றனர். பல சாரதிகளிடமும் பணத்தை மிரட்டிக் கேட்கும் இவர்கள், பணம் தரமறுப்பவர்களை நீண்ட நேரத்திற்கு மறித்துவைத்து சோதனை என்ற பெயரில், பயணிகளை இறக்கிவிட்டு அவர்களை சோதனை மேல் சோதனைக்குட்படுத்துகின்றனர்.
இதனால், பயணிகளே இவர்கள் கேட்கும் பணத்தை தர முன்வருகின்றனர். சில சாரதிகள் இந்தச் சிரமத்திற்குப் பயந்து பணத்தை கொடுத்து வருகின்றனர்.
இந்தத் தகவல் வெளியில் தெரிந்தால் வாகனத்தை பறித்து விடுவோம் எனவும் பொலிஸார் மிரட்டியதாக, அண்மையில் அங்கு பயணம் செய்து திரும்பிய பயணி ஒருவர் விசனம் தெரி வித்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்த முறைப்பாடு பற்றி விசாரணை மேற்கொள்ளவுள்ளதாக வழமைபோன்று  பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.
கொடுப்பவர்கள் இருக்கும் வரை எடுப்பவர்கள் எடுத்துக்கொண்டே இருப்பார்கள். இதைத் தடுப்பவர்கள் முன்வந்தாலே கொடுப்பவர்கள் தடுப்பார்கள்.
புலம்பெயர் வாழ் எம் உறவுகளே இது சிந்திக்கும் நேரமல்ல செயற்படும் நேரம்!         வரும் (19.09.2011) திங்கட்கிழமை  ஜெனிவாவில் இடம்பெறும் மாபெரும் பொங்கு தமிழ் பேரணியில்   சிங்களத்தின் வன்கொடுமைகளுக்கு எதிராக நாம் ஒன்றுபட்டுக் குரல்கொடுப்போம் வாரீர்!  (சூறையாடல்கள் தொடரும்)

சூறையாடப்படும் சிறுவர் உரிமைகள்!


தமிழர் தாயகப் பகுதி எங்கும் தற்போது சீரழிவுகள் உச்சம் பெற்றுள்ளன. ஆரம்பகாலத்தில் பிள்ளைகள் பெற்றோரின் அனுமதியைப் பெற்றே எந்த ஒரு காரியத்தையும் செய்வார்கள். ஆனால், தற்போது அங்கு நிலைமை மாறியுள்ளது. பெற்றோரை, பெரியோரை மதிக்கும் பண்பு பிள்ளைகளிடம் குறைவடைந்து வருகின்றது என பலரும் கவலை வெளியிட்டுள்ளனர்.
பல பிள்ளைகள் பெற்றோரை மிரட்டி தமது காரியங்களை சாதித்து வருகின்றனர். இதற்கு தற்போதைய சூழ்நிலையே காரணமாக அமைகின்றது. சரியான வழிநடத்தல் இன்மையும் மற்றொரு காரணம்.
பெற்றோர் பிள்ளைகளை சற்றுக் கண்டிக்க முனைந்தால் நேரடியாகவே அவர்கள் தற்கொலை செய்துகொள்ள முன்வருpன்றனர். பலர் தற்கொலையும் செய்கின்றனர். இதற்கு அவர்களின் மனநிலை பாதிக்கப்பட்டமையும் ஒரு காரணமாக உள்ளது.
இவ்வாறே கடந்தவாரம் நெல்லியடிப் பகுதியில் ஒரு சம்பவம் இடம்பெற்றுள்ளது.  உயர்தரப் பரீட்சைக்கு படிக்குமாறு பெற்றோர் அதட்டியதால் மாணவன் நஞ்சருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
 நெல்லியடி கிழக்கு கரவெட்டி சாமியார் அரசடி வீதி பகுதியைச் சேர்ந்த உயர்தர வகுப்பு மாணவனான 19 அகவையுடைய நடராஜா கஜமுகன் என்ற மாணவனே நஞ்சருந்தி தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான சம்பவங்கள் யாழ்குடாநாடு உள்ளிட்ட தமிழர் தாயகப் பகுதிகளில் அதிகளவில் இடம்பெறுகின்றன.
இதனால் பெற்றோர் பிள்ளைகளைத் தண்டிக்க மன்வருவதில்லை. இது அவர்களுக்கு சாதகமாக அமைந்து விடுகின்றது. பிள்ளைகள் தவறுகளை துணிந்து செய்கின்றனர். மாணவர்களின் இவ்வாறான பாதிப்புகள் குறித்து சிங்களம் எதுவித கவலையும் இன்றி தமிழ் மக்கள் சீரழியக் கூடிய வழிகளை மேலும் மேலும் ஏற்படுத்திக் கொடுக்கின்றது.
இவ்வாறான காரணங்களால் இளவயதுப் பிள்ளைகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், கிளிநொச்சியில் அண்மைக் காலத்தில் கருச்சிதைவுகள் காரணமாக இளம் கர்ப்பிணிப் பெண்கள் மரணமடையும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக் கப்படுகின்றது.
கடந்த திங்கட்கிழமை  கிளிநொச்சி பூநகரியைச் சேர்ந்த ஒரு குழந்தையின் தாயாரான லாக்சன் ரஜனிதேவி (வயது27) என்ற இளம் கர்ப்பிணி பெண்ணே மரணமார். இந்த இளம்பெண் 3 மாதக் கர்ப்பமாக இருந்துள்ளார். பின்னர் சட்டத்துக்கு முரணான வகையில் வீட்டிலேயே கருக்கலைப்பை மேற்கொண்டுள்ளார். இதனால் அதிக அளவான இரத்தப்போக்கு ஏற்பட்டது எனவும் இவர் வைத்தியசாலைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறே, யாழ். மாவட்டத்தில் இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரையான 5 மாதங்களுக்குள் பதினெட்டு வயதுக்குட்பட்ட 75 பிள்ளைகள் திருமணமாகாமலே கர்ப்பம் தரித்துள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவ்வாறான சம்பவங்களில் பாடசாலை மாணவிகளே அதிகளவில் இனங்காணப்பட்டுள்ளதாக வைத்திய அதிகாரி திருமதி திருமகள் தெரிவித்துள்ளார்.
இவர்கள் இவ்வாறான தவறான வழிக்குச் செல்வதற்கு பெற்றோர்களும், ஆசிரியர்களுமே காரணம் எனவும், பாடசாலை மாணவர்களுக்கு பாலியல் கல்வி தொடர்பாகவோ, அதனால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பாகவோ இவர்கள் போதிப்பதில்லை எனவும் அவர் கூறினார்.
இணையத்தளம் மற்றும் குறுந்தகவல்கள் (எஸ்.எம்.எஸ்) மூலம் பாலியல் தொடர்பான தவறான தகவல்களைப் பெற்று அவற்றை நடைமுறையில் அணுக முற்படுவதனாலேயே இவ்வாறான பாரதூரமான விளைவுகள் ஏற்படுகின்றன என்றும் வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்தார்.
இளவயதுக் கர்ப்பங்களைத் தடுப்பதற்கான செயற்திட்டம் கடந்தவாரம் தம்மால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட வைத்தியர், முதற்கட்டமாக பாடசாலை ஆசிரியர்கள், அதிபர்களுக்குச் செயலமர்வை ஆரம்பித்துள்ளதாகவும், இதன்போது மாணவர்களுக்கு வாழ்க்கைத் தேர்ச்சிப் பயிற்சிகளை வழங்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இதேவேளை, யாழ். மாவட்டத்தில் இந்த வருடத்தின் முதல் ஐந்து மாதங்களிலும் 65 சிறுவர் தொழிலாளர்கள் இனங்காணப்பட்டுள்ள அதேவேளை, 414 சிறுவர்கள் பெற்றோரால் கைவிடப்பட்டுள்ளனர் என யாழ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வருடத்தின் ஜனவரி முதல் மே மாதம் வரையிலான காலப் பகுதியில் 253 சிறுவர்கள் பாடசாலையைவிட்டு இடை விலகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குடும்பத்தில் ஏற்படுகின்ற பிரச்சினைகளே இவற்றுக்கு அடிப்படைக் காரணமாக அமைந்து விடுகின்றது. குடும்பப் பிரச்சினைகளாலேயே பெருமளவான சிறுவர்கள் கைவிடப்பட்டுள்ளனர். இவர்கள் தமது உறவினர்களுடன் அல்லது பராமரிப்பு இல்லங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன.
இவ்வாறே கடந்தவாரம் கிளிநொச்சி திருவையாறுப் பகுதியில் பெற்றோரால் கைவிடப்பட்ட நிலையில், வீதியில் நின்றதாக பொதுமக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் 9 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் மீட்கப்பட்டு நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டான்.
 யாழ்ப்பாணத்திலுள்ள சான்றிதழ் பெற்ற சிறுவர் காப்பகத்தில் இணைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி பெ.சிவகுமார் உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறான சம்பவங்களுக்கு இராணுவ அடக்குமுறைக்குள் தமிழ் மக்களின் கலாச்சாரம், பண்பாடுகள் சிதைக்கப்பட்டு சின்னாபின்னமாக்கப்படுவதே காரணமாக அமைகின்றது.
 இவ்வாறான நிலைமைகளில் சிறுவர்கள் என்ன செய்வார்கள்? அவர்களின் பாதைகள் எங்கே செல்லும்? விடை உங்கள் ஒவ்வொருவரின் மனங்களிலும் தான். புலம்பெயர் எம் உறவுகளே சிந்தியுங்கள்! செயற்படுங்கள்!! 
(சூறையாடல்கள் தொடரும்)


.

.தமிழ் மக்களின் சொத்துக்களை சூறையாட புதிய வீதி!


 சிங்களத்தின் தமிழ் மக்கள் மீதான அத்து மீறல்கள் தொரடர்ந்து உச்சம் பெற்றுவரும் நிலையில், மன்னார் மாவட்டத்தில் தற்போது பரவலாக சிங்கள ஆக்கிரமிப்பு முனைப்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மன்னார் மாவட்டத்தில் ஏற்கெனவே திட்டமிடப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள் நிறுவப்பட்டுள்ள நிலையில் அங்கு தமிழர் பகுதிகளில் காடழிப்பு மும்முரமாக இ;டம்பெற்றுவருகின்றன. இவ்வாறு அழிக்கப்படும் காணிகளில் சிங்களவர்கள் குடியமர்த்தப்படும் அதேவேளை, அழிக்கப்படும் மரங்கள் இரவோடு இரவாக வேறு இடங்களுக்கு குறிப்பாகத் தென் பகுதிக்கு கடத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இச்செயற்பாடுகளுக்கு அடர்ந்தகாட்டுப் பகுதியின் நடுவே புதிதாக வீதி ஒன்று அமைக்கப்பட்டுள்ள அதிர்ச்சித் தகவலும் வெளியாகியுள்ளது. இது தமிழர் சொத்துக்களைச் சூறையாடித் தென்பகுதிக்குக் கடத்துவதற்கு அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
21,000 ஹெக்டேயர் நிலப்பரப்பைக் கொண்ட மன்னார் மடு வனப்பகுதியில் மேற்கொள்ளப் பட்டுவந்த சட்டவிரோத மரக்கடத்தலுக்கெனவே இந்த வீதி புதிதாக அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக வவுனியா மாவட்ட செயலக அதிகாரிகள் மற்றும் மடு தேவாலயத்தின் மதகுரு ஆகியோர் சென்று ஆராய்ந்துள்ளனர்.
மடு வனத்தின் நடுப்பகுதியில் இதற்கு முன்னர் வீதி ஒன்று அமைக்கப்பட்டிருக்கவில்லை எனவும் புதிதாக வீதி ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் அது 60 அடி அகலத்தில் காணப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 28ம் திகதி குறித்த வீதியை அமைத்துக் கொண்டிருந்த நால்வர் கைது செய்யப்பட்ட தோடு அதற்கென பயன்படுத்தப்பட்ட பெக்கோ இயந்திரம் மற்றும் டிரக் வண்டி என்பவற்றை வனவள அதிகாரிகள் கைப்பற்றியிருந்ததாகவும் முன்னர் செய்திகள் வெளியாகியிருந்தன.
ஆயினும் படையினர் வன்னிப் பெருநிலப்பரப்பை முற்றாக ஆக்கிரமித்து நிலைகொண்டுள்ள நிலையில், இராணுவத்தினரின் பிரசன்னமின்றி இச்செயற்பாடு நிகழ்ந்துள்ளது என்று கூறமுடியாது.
படையினரின் ஒத்துழைப்புடனேயே இந்தி நிலச் சுரண்டல் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், மன்னார் கடல்படுகையில் எண்ணெய் அகழ்வுக்கான பணிகள் இந்திய நிறுவனத்தால் கடந்த சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ புத்தளத்தில் வைத்து பகிரங்கமாக ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.
 இந்த முயற்சியில் வெற்றி பெற்றால், எரிபொருள்களுக்காக மற்றைய நாடுகளில் தங்கியிருக்க வேண்டிய நிலை இலங்கைக்கு ஏற்படாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மன்னார் கடல்படுகையில் எண்ணெய்ப் படிவுகள் இருப்பதாக பூர்வாங்க ஆய்வுகள் உறுதிப்படுத்தி உள்ளன.
எனினும் ஆழ்கடலில் துளையிட்டு மேலதிக ஆய்வுகளை மேற்கொள்ளும் போது போதிய எண்ணெய்ப் படிவுகள் கிடைக்காமலும் போகலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மன்னார்ப் படுகையில் நேற்றுத் தோண்ட ஆரம்பிக்கப்பட்ட இடத்தில் எண்ணெய்ப் படிவுகள் கிடைத்தால், அதிலிருந்து வர்த்தக ரீதியான மசகு எண்ணெய்யை எடுப்பதற்கு இன்னும் மூன்று ஆண்டுகள் செல்லும். 2014ஆம் ஆண்டில் ஒரு பில்லியன் பரல் எண்ணெய்யைப் பெறமுடியும். 
மன்னார் படுகையில் எண்ணெய் தோண்டுவதற்கான அனுமதி இந்திய நிறுவனம் ஒன்றுக்கும் சீன நிறுவனம் ஒன்றுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
 ரஷ்யாவின் எண்ணெய் நிறுவனமான காஸ்போமும் அங்கு அகழ்வில் ஈடுபடுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு தமிழ் ஈழத்தின் பகுதிகள் ஒவ்வொன்றாய் வெளிநாட்டு நிறுவனங்களிடம் சிறிலங்கா இனவாத அரசினால் தரைவார்க்கப்பட்டு வருகின்றன.
நாம் முன்னர் இப்பகுதியில் மன்னார் கடல் பகுதி வெளிநாடுகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதான செய்திகளை முன்னர் குற்றிப்பிட்டிருந்தமை  தெரிந்ததே.
இதேவேளை, மன்னார் மாவட்டத்தில் யுத்தத்துக்குப் பின்னர் மாணவர்களின் கல்வி நிலையில், பெரும் வீழ்ச்சி காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதனால் மாணவர்கள் பாடசாலைக் கல்வியை விட்டு இடைவிலகி வருகின்றனர்.
மன்னார் மாவட்டத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் பாடசாலைகளிலிருந்து 784 சிறுவர்கள் இடைவிலகியுள்ளமை தொடர்பில் மன்னாரிலுள்ள நன்னடத்தைப் பிரிவு மேற்கொண்ட ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் மன்னார் மாவட்ட உளசமூக இணைப்பாளர் நிக்கலஸ் அன்ரனி லோறன்ஸ் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
16 வயது முதல் 18 வயது வரையான சிறுவர்களே பாடசாலைகளிலிருந்து இடைவிலகியுள்ள தாகவும் அவர் கூறினார்.
இந்த சிறுவர்கள் பாடசாலைகளை விட்டு இடைவிலகி நீண்டகாலமாகியுள்ளதால்; அவர்களை மீண்டும் பாடசாலையில் சேர்த்துக்கொள்ள முடியாதுள்ளது. இவ்வாறானவர்களுக்கு சுயதொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அல்லது தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வதற்கான ஆலோசனைகளும் வழிகாட்டல்களும் மன்னார் சிறுவர் தொடர்பாக பணியாற்றும் அலுவலர்களால் வழங்கப்பட்டு வருகின்றன.
வறுமை, பெற்றோர்களின் கவனயீனம், கல்வி கற்பதில் நாட்டமின்மை போன்ற காரணங்களால் இந்த சிறுவர்கள் பாடசாலைகளை விட்டு இடைவிலகியுள்ளதாக ஆய்வுத் தகவல்கள் மூலம் தெரியவருகின்றது.
இந்நிலையில் , மன்னார் மாவட்டத்தில் தற்போது சிறுவர் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகரித்துக் காணப்படுவதாகவும் கடந்த ஜனவரி மாதம் முதல் ஜுலை மாதம் வரையான காலப்பகுதியில் 12 சிறுவர் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்களும் ஒரு பாலியல் வல்லுறவு முயற்சியும் இடம்பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை வட்டாரத்.தகவல்கள் தெரிவிக்கின்றன.
15 வயதிற்குபட்ட 11 சிறுமிகளும் ஒரு சிறுவனும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ள தாகவும்  இந்த பாலியல் துஷ்பிரயோகங்கள் அவர்களது உறவினர்களாலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளதென்றும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 பாலியல் துஷ்பிரயோகங்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையானது பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள் மற்றும் சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்களுடன் இணைந்து ஈடுபட்டு வருகின்றது.
இந்நிலையில், மன்னாரில் இராணுத்தினர் குடும்பப்பதிவுகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் மன்னார் மக்களிடையே அச்சநிலை ஏற்பட்டுள்ளது. சிங்கள மொழி மூலமான படிவங்களை வீடு வீடாகக் கொண்டு செல்லும் இராணுவத்தினர் குடும்ப விபரங்களை பதிவு செய்வதோடு வீட்டில் வேறு யாராவது இருக்கின்றார்களா? என்பதனையும் கேட்டறிந்து வருகின்றனர்.
குறித்த இராணுவத்தினர் சிங்கள மொழியில் கதைப்பதனால் மக்கள் செய்வதறியாது தவிக்கின்றனர். பொலிஸாரோ அல்லது கிராம அலுவலகர்களோ இல்லாமல் இ;ராணுவத்தினர் மட்டும் குடும்பப்பதிவினை மேற்கொண்டு வருகின்றமை மேலும் மக்களை அச்சத்திற்குள்ளாக்கியுள்ளது.
'பதிவுகள் அணைத்தும் சிங்களத்தில் காணப்படுவதினால் எந்த விடையத்தை பதிவு செய்கின்றார்கள் என்பது தெரியவில்லை. இறுதியில் குடும்பத் தலைவர்களிடம் கையொப்பத்தினையும் பெற்றுக் கொள்ளுகின்றனர.; ஏன்? எதற்கு? இந்த பதிவுகள் என்ற விடயம் எமக்குத் தெரியவில்லை. மன்னார் மாவட்டத்தில் சிவில் நிர்வாகத்தில் அதிகளவில் இராணுவத்தினரே  தலையிட்டு வருகின்றனர்" என குடும்பத்தலைவர் ஒருவர் அச்சத்துடன் தெரிவித்தார்.
இவையெல்லாம் ஏன்? எதற்கு? புலம் பெயர் உறவுகளே சிந்தியுங்கள்! செயற்படுங்கள்!!
(சூறையாடல்கள் தொடரும்)

Tuesday, April 24, 2012

பூனையில்லா வீட்டில் எலி துள்ளுகின்றது! - கந்தரதன்

யாழ்குடாவில் தற்போது அரங்கேறிவரும் சம்பவங்களை நோக்கும் போது மரணம் மலிந்த பூமியாக காணப்படுவதை உணரக் கூடியதாக உள்ளது. பொருளாதாரத்தைப் பொறுத்தளவில் அங்கு நாளாந்தம் ஒரு சிறிய குடும்பத்துக்கு ஆயிரம் ரூபா போதாமையாக உள்ளது. விலைவாசி ஏற்றம் நாளும் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்திவருகின்றது. அங்கு அதிஉச்ச ரீதியில் பண வீக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் உளரீதியில் பாதிப்புக்கள் ஏற்படுகின்றது. பல குடும்பங்கள் யுத்தம் இடம்பெற்ற சூழ்நிலையில் பாதிக்கப்பட்டதைவிட தற்போது அதிகமாகப் பாதிக்கப்படுவதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை யாழில் நாளாந்தம் தூக்கில் தொங்கிய நிலையில் சடலங்கள் மீட்கப்பட்டுவருகின்றன. குடும்பத்தை நிர்வகிக்கும் குடும்பத் தலைவர்களே அதிகமாகத் தற்கொலை செய்துகொள்வதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆயினும் இச்சடலங்கள் குறித்து சந்தேகங்கள் எழுந்துள்ளன.

அண்மையில் யாழில் மீட்கப்பட்ட சடலங்களில் பல இனந்தெரியாத முறையில் படுகொலை செய்யப்பட்ட நிலையிலேயே மீட்கப்பட்டுள்ளமை பொதுமக்களும் உறவினர்களும் வழங்கிய தகவல்களின் மூலம் தெரியவந்துள்ளது. சிங்கள இனவாதத்துக்கு துணைபோவோர் மட்டுமே அங்கு வாழக்கூடியதாக உள்ளது எனவும் ஏனையவர்கள் கடும் அச்சுறுத்தலுக்கு மத்தியில் அச்சத்துடனேயே நாட்களை நகர்த்துகின்றனர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் கொள்ளைச் சம்பவங்களும் யாழ்ப்பாணத்தில் அதிகரித்தே காணப்படுகின்றன. ஆட்கள் இல்லாத வீடுகள், பாதுகாப்பற்ற வீடுகள் மற்றும் ஆண் துணையற்ற வீடுகள் என நன்கு இனங்காணப்பட்டு, சிங்கள அடிவருடிகளான ஒட்டுக் குழுக்களால் கொள்ளைகள் திட்டமிட்டு நிகழ்த்தப்படுகின்றன.

தற்போது தாம் நினைத்ததை நிறைவேற்றுவதிலேயே அரசுடன் சேர்ந்தியங்கும் ஒட்டுக்குழுக்கள் செயற்பட்டுவருகின்றன. இது பூனை இல்லாத வீட்டில் எலி துள்ளிவிளையாடுவதாய் அமைந்துள்ளது.

அதாவது கடந்தவாரம் வடமாகணத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பாடசாலை அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்ட நிதியினை மடக்கி யாழ் மத்திய கல்லூரியில் நீச்சல் தடாகம் அமைக்கப்பட்டுள்ளதுடன் அதற்கு இடையூறு விளைவித்த நூற்றாண்டு மண்டபமும் இடித்தளிக்கப்பட்டதான அதிர்ச்சிச் சம்பவம் அனைவரையும் கவலை கொள்ளவைத்துள்ளது.

வடமாகாண ஆளுனர் சந்திரசிறீ மற்றும் ஒட்டுக்குழு அமைச்சர் டக்ளசின் இச் செயற்பாட்டிற்கு வடபகுதி கல்விச் சமூகம் கடும் அதிர்ப்தியை வெளியிட்டுள்ள அதேவேளை, ஆழ்ந்த கவலையையும் வெளியிட்டுள்ளது. ஆரம்பிக்கப்பட்டு பின்னர் நிதிப்பற்றாக்குறை காரணமாக முழுமையாக நிறைவேற்றப்படாமல் இடைநடுவில் நிறுத்தப்பட்டிருந்த குறித்த நீச்சல் தடாகம் அமைக்கும் வேலைகள்,  வடமாகாணத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள பாடசாலைகளுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு ஒதுக்கப்பட்ட 4.5 மில்லியன் ரூபாவினை வடமாகாண ஆளுனர் மடக்கிக் கொடுத்துள்ளார்.

கட்டி முடிவடைந்த மேற்படி நீச்சல் தடாகத்தினை திறந்து வைப்பதற்கு மகிந்தவை யாழுக்கு அழைத்திருந்தனர். அதற்கான ஏற்பாடுகள் பலமாக யாழ் மத்திய கல்லூரியில் இடம்பெற்றன. கல்லூரியை சுற்றி காப்பற் வீதிகள், மண்டபங்கள் வகுப்பறைகள் எல்லாம் புதுப்பொலிவு பெற்றுள்ளன. இவ்வாறு எல்லாவகையான ஏற்பாடுகளையும் சிறந்த முறையில் செய்துகொண்டிருக்கும்போது யாழ் மத்திய கல்லூரிக்கு சென்ற டக்ளஸ் நீச்சல் தடாகத்திற்கு முன்னால் உள்ள 100 வருடங்கள் பழைமை வாய்ந்த கட்டடத்தினை இடித்து மகிந்தவும் அவருடன் வருகின்ற பிரமுகர்களும் அமர்வதற்கான மேடையினை அமைக்குமாறு உத்தரவிட்டார்.

அந்த உத்தரவினை நடைமுறைப்படுத்த மறுத்த பாடசாலை அதிபர் அக் கட்டடத்தின் பழைமையான வரலாறுகளைக் கூறி அக்கட்டடம் வரலாற்று பொக்கிசம் பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று என்றும் தெரிவித்துள்ளார். தாக்குதல் நடத்தும் தொனியில் மிரட்டிய டக்ளஸ், நான் மீண்டும் வந்து பார்க்கும்போது இந்தக் கட்டடம் இருக்கக் கூடாது என்று சொல்லிவிட்டுச் சென்றுள்ளார்.

அதன் பின்னரும் இடிக்கப்படாமல் இருந்த அக்கட்டடம், இடிந்து விழும் அபாயத்தில் உள்ள
தால் உடனடியாக இடிக்கப்பட வேண்டும் என்று கல்வி அமைச்சிடம் இருந்து பாடசாலைக்கு உடனடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் அக்கட்டடம் இடித்தழிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தினால் கடும் சீற்றமடைந்துள்ள யாழ். மத்திய கல்லூரியின் பழைய மாணவர்கள், கடும் எதிர்ப்பினை வெளியிட்டதுடன், யாழ். கல்விச் செயற்பாடுகளிலும் அரசியல் தனது ஆதிக்கத்தினை கடுமையான முறையில் செலுத்தி வருகின்றது என சாடியுள்ளனர்.

இந்நிலையில் வேலையற்ற பட்டதாரிகள் மகிந்தவை சந்திப்பதற்காக யாழ் பெருமாள் கோவிலடிப் பகுதியில் ஒன்று கூடியிருந்தனர். இதனையறிந்த யாழ்.காவல்துறையினர், அவர்களை கலைந்து செல்லுமாறு போலியான பிடியாணைப் பத்திரமொன்றைக் காட்டி விரட்டியடித்தனர்.

இதனையடுத்து, வேலையற்ற பட்டதாரிகள் டக்ளசிடம் சென்றனர். இவர்களின் வருகையை அறிந்த டக்ளஸ், பட்டதாரிகளை நீண்ட நேரம் காக்க வைத்துவிட்டு, உங்களில் நூறுபேருக்கு மட்டுமே நியமனம் எனவும் நீங்கள் மகிந்தவை முன்னரே ஆதரித்திருந்தால் உங்களுக்கு நியமனம் முதலே கிடைத்திருக்கும் நீங்கள் மகிந்தவை ஆதரிக்காமல் விட்டமையினாலேயே இந்த நிலைமை என கடும் தொனியில் மிரட்டியுள்ளார்.

அத்துடன் மகிந்தவின் யாழ் வருகையையட்டி மக்களுக்கு பல கெடுபிடிகளை இராணுவத்தினரும் ஒட்டுக்குழுக்களும் மேற்கொண்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எம் தமிழ் உறவுகளே இது சிந்திக்கும் நேரமல்ல செயற்படும் நேரம்.
(சூறையாடல்கள் தொடரும்)
நன்றி :ஈழமுரசு

யாழில் முளைவிடும் சிங்கள பாடசாலை! - கந்தரதன்

ஐ.நா.நோக்கி புலம்பெயர் தமிழ் உறவுகள், சிங்களத்தின் கோரத் தாண்டவத்தினை சர்வதேசத்தின் முன் அம்பலப்படுத்தக் கோரி புறப்படத் தயாராகிவரும் நிலையிலும் தமிழர் தாயகப் பகுதி எங்கும் சிங்களத்தின் அத்துமீறல்கள் தொடர்கின்றன. யாழ்குடாவில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் தொடர்பாக இப்பகுதியில் பல தடவைகள் குறிப்பிட்டிருந்தோம். அதன் தொடர்ச்சியாக சிங்களத்தின் காய்நகர்த்தல்கள் தற்போது தீவிரம் பெற்றுள்ளன. அங்கு குடியேறிய சிங்களவர்களின் கல்விச்செயற்பாடுகளுக்கென பாடசாலைகளை ஆரம்பிக்கும் நடவடிக்கையில் சிங்களம் முனைப்புக் காட்டிவருகின்றது.

யாழ் குடாநாட்டிலுள்ள நாவற்குழிப் பகுதியில் அத்துமீறி குடியேறியுள்ள சிங்களவர்களுக்காக மீண்டும் யாழ் சிங்கள மகாவித்தியாலயத்தினை இயங்க வைக்கும் நடவடிக்கையில் வடமாகாண ஆளுனரின் தலைமையில் படைத்தரப்பு மேற்கொண்டு வருகின்றது. யாழ் தொடருந்து நிலையத்தில் வந்திறங்கி தாம் யாழ்ப்பாணத்தினைச் சேர்ந்தவர்கள் என்று கூறிக்கொண்டு தம்மை அரச காணியில் குடியமர்த்தவேண்டும் என்று தெரிவித்து யாழ் அரச அதிபருடன் விடாப்பிடியாக பல கோரிக்கைகளை விடுத்த மேற்படி சிங்களவர்கள் யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி ஹத்துறு சிங்கவினதும் வடமாகாண ஆளுனர் சந்திரசிறியினதும் நெறிப்படுத்தலில் யாழ் நாவற்குழியில் அத்துமீறி குடியமர்ந்தமை தெரிந்ததே.

மேற்படிச் சிங்களவர்களின் அத்துமீறல்கள் தொடர்பாகப் பொறுப்புக் கூற வேண்டிய யாழ் அரச அதிபர் கண்டும் காணாததுபோல் இருந்துள்ளார். இதனால் சிங்களவர்களது அத்துமீறிக்குடியேறும் தொகை நாளுக்கு நாள் அதிகரித்துச் சென்றது: அதிகரித்து வருகின்றது. தமிழ் மக்களது பிரதேசங்களை கையகப்படுத்தும் ஒரே நோக்கத்திற்காக யாழில் குடியேறவைக்கப்பட்ட சிங்களவர்களது குடும்பங்கள் முழுமையாக இதுவரை வந்து குடியேறவில்லை. குறிப்பாக இங்கு குடியேறியுள்ள குடும்பங்களில் உள்ள பிள்ளைகள் இன்னமும் தென்னிலங்கையில் உள்ள பாடசாலைகளிலேயே கல்வி கற்று வருகின்றார்கள்.

இதுமட்டுமல்லாமல் பெரும்பாலானவர்கள் தமது தொழில் நடவடிக்கைகளையும் இங்கு ஆரம்பிக்கவில்லை. அவர்கள் குடியேறியுள்ள நாவற்குழி பகுதியில் பல கூடாரங்கள் மற்றும் அரை நிரந்தர வீடுகள் போடப்பட்டுள்ளபோதும் அங்கு சுழற்சி முறையிலேயே தென்னிலங்கையில் இருந்து வந்து தங்கிவிட்டுச் செல்கின்றார்கள். ஆனாலும் அவர்களுக்கான மறைமுகமான அரச உதவிகள் வழங்கப்பட்டுக்கொண்டே வரப்படுகின்றது.

மேற்படி சிங்களவர்களுக்கு சகல வழிகளிலும் உதவிகளை வழங்கி வரும் ஹத்துறுசிங்க மற்றும் வடமாகாண ஆளுனர் ஆகியோர் இணைந்து சிங்களவர்களின் குடியேற்றங்களை மேலும் பலப்படுத்தி இவர்களது பிள்ளைகள் யாழிலேயே கல்வி கற்பதற்காக யாழ் சிங்கள மகாவித்தியாலயத்தினை மீண்டும் ஆரம்பிப்பதற்கான முழு முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறான அத்துமீறல்கள் தொடர்பாக கண்டும் காணததுபோல் இருக்கும் யாழ் அரச அதிபரும் இவர்களுக்கான மறைமுகமான உதவிகளை மேற்கொண்டு வருவதுடன் தன்னை இவ்விடயத்தில் சம்பந்தப்படுத்திக் கொள்ளாதது போல் குடாநாட்டு ஊடகங்கள் முன்பாக நடந்து கொள்கின்றார்.

யாழ் மாவட்டத்தில் சிங்களவர்களுக்கான பாடசாலை ஆரம்பிக்கப்பட்டால் சிங்களவர்களது ஆதிக்கம் யாழில் மேன்மேலும் அதிகரித்துச் செல்லும். அரச காணிகளை கைப்பற்றும் அவர்களது முயற்சிகள் படிப்படியாக வளர்ச்சியடைந்து தமிழ் மக்களது காணிகளையும் பலவந்தமாக கைப்பற்றும் நடவடிக்கையும் ஏற்படும் என அவதானிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், வலிகாமம் வடக்கு முன்னரங்கப் பகுதியில் பலாலி படைத் தளத்தின் முன்னரங்க நிலைகளாக விளங்கும் ஒட்டகப்புலத்திலிருந்து வயாவிளான் ஊடாகத் தெல்லிப்பழைச் சந்தி வரைக்கும் அங்கிருந்து காங்கேசன்துறை வரை  நிரந்தரத் தடுப்பு வேலிகளை இராணுவத்தினர் அமைத்து வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் வலி.வடக்கில் பலாலி இராணுவத் தலைமையகத்தை அண்மித்த இடங்களில் உள்ள 23 கிராம அலுவலர் பிரிவுகளில் மக்கள் மீளக்குடியமர்வதற்கான சாத்தியங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன என்று சுட்டிக்காட்டப்படுகின்றது. நிரந்தர தடுப்பு வேலிகளை அமைப்பதற்கான தூண்கள் இப்போது ‘கொங்கிறீட்’ போடப்பட்டு நடப்பட்டு வருகின்றன. இந்த பாதுகாப்பு வேலிக்குள் 23 கிராம அலுவலர் பிரிவுகள் அடங்கி உள்ளன. 7273 குடும்பங்களைச் சேர்ந்த 26281 பேர் இப்பகுதிகளில் மீள்குடியமர்வுக்காகக் காத்திருக்கின்றனர்.

பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டுவரும் பகுதிக்கு அப்பால் குறைந்தது ஒன்றரை வருடங்களுக்கு யாரையும் அனுமதிக்கப் போவதில்லை என்று படையினர் தமக்குத் தெரிவித்திருக்கின்றனர் என மக்கள் சிலர் கூறுகின்றனர். இது உறுதிப்படுத்தப்படாத போதும், முன்னரங்குகளில் நிரந்தர வேலிகள் அமைக்கப்படுவதானது மக்களின் மீள்குடியமர்வு குறித்த பெரும் சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

வலி. வடக்கில் இருந்து 1990 ஆம் ஆண்டு மக்கள் இடம்பெயர்ந்தனர். போர் முடிந்ததன் பின்னர் இந்தப் பிரதேச செயலர் பிரிவில் உள்ள 12 கிராம அலுவலர் பிரிவுகளில் மட்டுமே மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்டனர். கடந்த வருட இறுதிக்குள் எஞ்சியவர்களும் மீளக்குடியமர்த்தப்படுவர் என்று அமைச்சர்களும் அதிகாரிகளும் தெரிவித்து வந்தனர். ஆனால் 2011 மே மாதத்தின் பின்னர் எந்தவிதமான மீள்குடியமர்வு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

இதேவேளை, ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியில் புனரமைக்கப்பட்டு வரும் ஒட்டகப்புலம் கட்டுவன் வீதியின் இடையே உள்ள 4 கிலோ மீற்றர் தூரமும் இந்த பாதுகாப்பு எல்லை வேலிக்குள் அடங்குவதால் அதன் புனரமைப்பு வேலைகள் கைவிடப்பட்டுள்ளன. அந்த 4 கிலோமீற்றர் வீதியையும் தனியாரின் காணிகளுக்கு ஊடாகப் புதிதாக அமைக்குமாறு படைத்தரப்பினரால் தெரிவிக்கப்பட்டுள்ளதாக புனரமைப்பு வேலைகளை மேற்கொண்டுவரும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாகவே வீதிகளை அமைக்கும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. புலம்பெயர் வாழ் எம் தமிழ் உறவுகளே! நாம் சிந்திக்கும் நேரமல்ல இது. சிந்தித்து செயற்படவேண்டிய நேரம். வரும் மார்ச் 5 அன்று சிங்கள வன்கொடுமைகளுக்கு எதிராக ஜெனிவாவில் ஒருமித்துக் குரல்கொடுப்போம் வாரீர்!
(சூறையாடல்கள் தொடரும்)
நன்றி : ஈழமுரசு

தொடர்கின்றது சிங்களத்தின் கொலைவெறி! - கந்தரதன்


இச்சம்பவத்தையடுத்து நெடுந்தீவு மக்கள் கடும் அச்சத்தின் மத்தியில் காணப்படுவது அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், கிளிநொச்சியில் 16வயது மாணவி மீது பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட படைச் சிப்பாய் மீது காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்று பெற்றோர் கடும் விசனம் தெரிவித்துள்ளனர்.
ஜெனிவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை அமர்வுகளில் சிறீலங்காவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற தமிழ் மக்கள் குரல் எழுப்பிக்கொண்டிருந்த வேளையிலும் சிங்களக் கொடுங்கோல் இராணுவத்தினர் தமிழ் மக்களை சீண்டிச் சின்னாபின்னமாக்கி சூறையாடும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்ட நிலைமை வர்ணிக்கமுடியாத கொடுமை.

நெடுந்தீவு 10ம் வட்டாரத்தில் பாடசாலை  மாணவி ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று கடந்த சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

நெடுந்தீவு 6ம் வட்டாரத்தைச் சேர்ந்த லக்சனா வயது 13 என்ற குறித்த மாணவி கடந்த 3ம் திகதி சனிக்கிழமை காலை கடைக்குச் சென்றபின்னர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாத நிலையில் குறித்த சிறுமி நெடுந்தீவு 10ம் வட்டாரத்தில் கைவிடப்பட்ட வளவு ஒன்றில் தலையில் பலமாக அடித்து படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேலும் இவரது சடலத்திற்கு அருகில் வெற்று மதுப் போத்தல்களும் சிறுமியின் உள்ளாடைகள் கிழித்தெறியப்பட்ட நிலையிலும் காணப்பட்டுள்ளன. இராணுவத்தினரும் ஒட்டுக் குழுக்களும் நெருக்கமாக வாழும் நிலையில் இராணுவத்தினரே இந்த கொடுஞ்செயலைப் புரிந்துள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

கிளிநொச்சி நகரில் கடமையாற்றும் சிப்பாய் ஒருவர் 16 வயதான மாணவி ஒருவரை காதலிப்பதாக கூறி அவரை மதவாச்சிக்கு அழைத்துச் சென்று அங்கு நிராதரவாக கைவிட்டுச் சென்றுள்ளார்.

பின்னர் காவல்துறையினர் குறித்த மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். 16 வயதுக்குட்பட்ட பெண்களை அவர்களது சம்மதத்துடன் திருமணம் செய்தாலும் கூட அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவது வழமை. எனினும் இந்தச் சிப்பாய் மீது காவல்துறையினர் இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்காமல் இருப்பது குறித்து பெற்றோர் குழப்பமடைந்த நிலையில் காணப்படுகின்றனர்.

விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளி ஒருவர் வெள்ளை வானில் கடத்தப்பட்ட சம்பவம் ஒன்று கடந்த 27ம் திகதி திங்கட்கிழமை கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி உதயபுரம் கிழக்கைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தையான முத்தையா சுப்பிரமணியம் (வயது 60) என்னும் நபரே கடத்தப்பட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பிரிவில் பணியாற்றிய மேற்படிக் குடும்பஸ்தர், இறுதி யுத்தத்தின் பின்னர் இரகசிய தடுப்பு முகாங்களில் வைந்திருக்கப்பட்டு பின்னர், 2010ம் ஆண்டு விடுவிக்கப்பட்டிருந்தார்.

கடத்தல் சம்பவம் நடைபெற்ற தினத்தில் இரவு 9 மணியளவில் வெள்ளைநிற வாகனத்தில் மேற்படிக் குடும்பஸ்தரின் வீட்டுற்கு முன்னால் வந்திறங்கிய இனம் தெரியாத குழுவினர், விலாசம் விசாரிப்பது போல் அக் குடும்பஸ்தரை வீட்டிற்கு வெளியே அழைத்துச் சென்று வீட்டு வாசலில் வைத்து கடத்திச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக அவரது குடும்பத்தினரால் வவுனியா மனித உரிமைகள் அலுவலகத்தில் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது. இதேவேளை இவ்வாறான பல கடத்தல்கள், காணாமல் போதல்கள், பாலியல் வன்கொடுமைகள் நாளாந்தம் தமிழர் தாயகப் பகுதியில் சிங்களத்தினால் நாளும் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. இவற்றில் பல உயிராபத்துகள் கருதி அச்சத்தில் மூடி மறைக்கப்பட்டுவருகின்றன.

இதனைச் சர்வதேசம் கவனத்தில் எடுக்கவேண்டியது மிகமிக அவசியமானது. இலங்கையில் எல்லாம் முடிந்துவிட்டது என்று தமிழர்களுக்கு வதிவிட உரிமை மறுக்கும் நாடுகளே, உரிமை மறுத்து தமிழர்களை நாடுகடத்திவரும் நாடுகளே இலங்கையில் இன்றும் தமிழர்கள் மீது அரங்கேறிவரும் கொடுமைகள் உங்கள் கண்களுக்கும் காதுகளுக்கும் எட்டவில்லையா?
உரியவர்களே விடை உங்களின் மனங்களில்தான். உலகெங்கும் வாழ் தமிழ் மக்களே நாம் சிந்திக்கும் நேரமல்ல இது ஒன்றுபட்டு செயற்படவேண்டிய நேரம்!
(சூறையாடல்கள் தொடரும்)
நன்றி : ஈழமுரசு

தமிழர் பூர்வீகத்துக்கே பூட்டு! - கந்தரதன்


சிறீலங்கா இனவாத அரசுக்கு எதிராக ஜெனீவாவில் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட பிரேரணை 24 நாடுகளால் ஆதரிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையிலும் சிறீலங்காவில் சிங்களத்தின் தமிழ் மக்கள் மீதான வன்கொடுமைகள் நின்றபாடில்லை.

அதுதொடர்கதையாகவே இருந்து வருகின்றது. வலிகாமம் வடக்கில் தொடந்தும் உயர்பாதுகாப்பு வலயங்களாகவுள்ள பகுதிகளை, படையினர் இறுக்கமான முறையில் மேலும் மேலும் பலப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். ஒட்டகப்புலம் பிரதேசத்தில் 23 கிராம சேவகர் பிரிவுகள் உள்ளன. இங்கிருந்து சுமார் இரண்டரைக் கிலோ மீற்றர், அதாவது வசாவிளான் வரைக்கும் கொங்றிட் தூண்கள் நாட்டப்பட்டு முள்ளுக் கம்பி வேலிகளை படையினர் அமைத்து வருகின்றமை தெரிந்ததே.

வலிகாமம், வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தினுள் இதுவரை 8 கிராம சேவகர் பிரிவுகளில் ஒரு பகுதியும், 15 கிராம சேவகர் பிரிவுகளில் முழுமையாகவும் மீள்குடியேற்றத்திற்கான தடைவிதிக்கப்பட்டிருக்கின்றது.

அந்தவகையில், கே.கே.எஸ். தெற்கு ஜே.233, கே.கே.எஸ். மத்தி ஜே.234, கே.கே.எஸ் மேற்கு ஜே.235, குரும்பசிட்டி ஜே.242, மயிலிட்டி வடக்கு ஜே.246, தையிட்டி கிழக்கு ஜே.247, மயிலிட்டித்துறை மேற்கு ஜே.248, தையிட்டி வடக்கு ஜே.249, தையிட்டி மேற்கு ஜே.250, மயிலிட்டித்துறை வடக்கு ஜே.251, பலாலி மேற்கு ஜே.252, பலாலி கிழக்கு ஜே.253, பலாலி வடக்கு ஜே.254, பலாலி வடகிழக்கு ஜே.255, பலாலி தெற்கு ஜே.256 கிராம சேவகர் பிரிவுகளில் மீள்குடியேற்ற தடைவிதிக்கப்பட்ட பகுதிகளாகும்.

இந்த நிலையில் தற்போது, முட்கம்பிவேலிகள் அமைக்கப்பட்டு அந்தப் பகுதிகளை தொடர்ந்தும் கையகப்படுத்திப் பலப்படுத்தும் நடவடிக்கையில் படையினர் ஈடுபட்டு வருகின்றனர் என பிரதேச மக்கள் தொடர்ந்தும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் வலிகாமம் வடக்குப் பகுதியில் மக்களை மீளக்குடியமர்த்துவதற்கு படையினரின் சாதகமான பதில் இதுவரை கிடைக்கவில்லை. என்று யாழ்மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். வலி.வடக்குப் பகுதியில் கண்ணிவெடி அகற்றப்பட்டுப் பல பிரதேசங்கள் கையளிக்கப்பட்டுள்ள போதும் அந்தப் பகுதிகளில் மக்களை மீளக்குடியமர்த்த படையினர் அனுமதிக்கவில்லை.

வலி.வடக்கில் 23 கிராம சேவகர் பிரிவுகளில் மக்கள் இன்னமும் மீளக்குடியமர்த்தப்படாத நிலையில் படையினர் அங்கு நிரந்தர பாதுகாப்புவேலியை அமைத்து வருகின்றனர். மீள்குடியமர்வு தொடர்பாக படையினரிடம் தொடர்ச்சியாகக் கேட்டு வருகின்றேன். அண்மையில் பலாலி ஆசிரியர் கலாசாலையை விடுவித்துத் தருமாறும் கோரியிருந்தேன்.

அத்துடன் மக்களின் வாழ்விடங்களை விரைவில் விடுத்து அவர்களை சொந்த இடத்தில் குடியமர்த்த உதவுமாறும் படைத் தளபதியிடம் கோரியிருந்தேன். இதற்கு அவர்கள் இதுவரையில் சாதகமானபதில் எதனையும் வழங்கவில்லை படையினர் அனுமதியளித்தால் மாத்திரமே இந்தப் பகுதிகளில் மக்களை மீளக்குடியமர்த்தமுடியும். படையினரின் சாதகமான பதில் கிடைக்கும் வரை எதுவும் செய்ய முடியாது என்று யாழ்மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், யாழ் சுழிபுரம் திருவடி நிலை கடற்கரைப் பகுதியில் சட்ட விரோதமாக கடற்படையினர் மணலை அகழ்ந்து வருவதாகப் பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் முறையிட்டதைத் தொடர்ந்து அவர்கள் குறித்த பகுதிக்கு நேரில் சென்று நிலைமைகளை அவதானித்துள்ளனர். ‘பொது மக்கள் தெரிவித்ததைப் போல பல இடங்களில் சட்ட விரோதமாக மணல் அகழப்பட்டிருப்பதை அவதானிக்க முடிந்தது.

இது குறித்து உரியவர்களின் கவனத்துக்குக் கொண்டு வந்து இத்தகைய சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்க உரிய நடவடிக்கை எடுப்போம்` என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மக்களிடம் உறுதியளித்தபோதும் படையினரின் அடாவடிகள் அங்கு தொடர்வதை எவராலும் தடுத்துநிறுத்த முடியவில்லை.

இதேவேளை, முல்லைத்தீவு நாயாற்றுவெளியில் அத்துமீறிக்குடியேறுவதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட சிங்களவர்கள் பார ஊர்திகளில் ஏற்றிச் செல்லப்பட்டிருக்கின்ற அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. பாரஊர்திகளில், மீன்பிடிப்படகுகள், மீன்பிடி உபகரணங்கள் என்பவற்றுடன் தற்காலிக வீடுகளுக்குத் தேவையான பொருட்களையும் ஏற்றிச் சென்றிருக்கின்றனர். இதனை அறிந்த முல்லைத்தீவு மக்கள் பாரஊர்திகளை மறித்து தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

இருப்பினும் சிறீலங்கா இராணுவத்தினரின் தலையீட்டுடன் பொருட்கள் இறக்கப்பட்டு நாயாற்று வெளிப்பகுதியில் வீடுகள் அமைத்து முடிக்கப்பட்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வாரம் இரு தினங்கள் இரு தொகுதிகளாக பாரஊர்திகள் முல்லைத்தீவைச் சென்றடைந்திருக்கின்றன. கடந்த புதன்கிழமை மட்டும் முப்பதிற்கும் மேற்பட்ட பாரஊர்திகள் நாயாற்று வெளியைச் சென்றடைந்திருந்தாக அந்த மக்கள் மேலும் தெரிவித்தனர்.

அதிகளவிலான மீன்கள் பிடிபடக்கூடிய முகத்துவாரத்தை அண்மித்த பகுதியில் முல்லைத்தீவு மீனவர்கள் மீன்பிடிக்க கடற்படையினரால் அனுமதி மறுக்கப்பட்டு வருவதாகவும், அதேபகுதியில் சிங்கள மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதிக்கப்படுவர் என்றும் முல்லைத்தீவு மீனவர்கள் எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றனர்.

இப்பிரதேச தமிழ் மக்களின் வாழ்வாதார தொழிலை சீர்குலைக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த அடாவடித் தனம் குறித்து தாம் கடுமையான எதிர்ப்புகளை வெளியிட்டும் அதனை சம்பந்தப்பட்ட தரப்பினர் கணக்கெடுக்கவில்லை எனவும் இறக்கு
மதி செய்யப்பட்ட சிங்கள மக்களுக்கான வாடிகள் அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டு உள்ளதாகவும் பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலமைகள் குறித்து அவசர கூட்டம் ஒன்றை கூடி மக்களிடம் கருத்து வெளியிட்டுள்ள பிரதேசத்தின் படைத்தளபதி இது ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உத்தரவு இதனை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். புதிதாக அழைத்து வரப்பட்ட மக்களுடன் இணைந்து தொழிலில் ஈடுபடவேண்டும் இல்லாவிடில் தேவையற்ற சிக்கல்களை மக்கள் எதிர்கொள்ள வேண்டிவரும் எனவும் எச்சரித்துள்ளார்.

இதற்கு யார் பதில் சொல்வது? இராணுவத்தின் பயங்கரவாதத்தை அழிப்பதற்கு யார் முன்வருவது? சர்வதேசமே வெறும் வாய்ப்பேச்சோடு தமிழ்மக்களின் பிரச்சினைக்குத் தீர்வுவைக்காதே. செயல்வடிவத்தில்தான் தமிழ்மக்களுக்கு தீர்வுவேண்டும். உலகெங்கும் வாழ் தமிழ் உறவுகளே சர்வதேசத்தின் காதுகளுக்கு ஒருமித்துக் குரல்கொடுப்போம்! இது சிந்திக்கும் நேரமல்ல நாம் சிந்தித்து செயற்படும் நேரம்!
(சூறையாடல்கள் தொடரும்)
நன்றி: ஈழமுரசு

தமிழொழிக்க தமிழரிடம் உதவி! - கந்தரதன்

ஜெனிவாவில் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட பிரேரணை நிறைவேற்றப்பட்ட நிலையில், குழப்பமடைந்துள்ள சிங்களம் ஜெனிவா விடயம் தொடர்பாக முன்னுக்குப் பின் முரணான செய்திகளை வெளியிட்டு வருகின்றது.
சிறீலங்கா அரசாங்கத்திற்கும் அதில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களுக்கும் தொடர்பில்லாததுபோலவே சிறீலங்காவினால் தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

இவ்வாறான இனவாதப் போக்குடைய அரசு சர்வதேசத்தையே ஏமாற்றுவது போன்று தகவல்களை வெளிவிடும் நிலையில் தமிழ் மக்கள் விடயத்தில் இவர்கள் எவ்வாறு நடந்து கொள்வார்கள் என்பதுபற்றி சர்வதேசம் புரிந்துகொள்ளும் என்பது திண்ணம்.

இந்நிலையில் பௌத்த மதபீடம் ஒன்றை உருவாக்கும் வேலைத்திட்டம் ஒன்றுக்கு வட பகுதித் தமிழ் மக்களிடம் இருந்து பணம் பிடுங்கும் முயற்சியில் சிங்களம் இறங்கியுள்ளது. அநுராதபுரம் மகா மேகவன விகாரைக்கு அருகாமையில் ‘சந்தகிரி சாயா’ என்ற பெயரிலான பௌத்த பீடம் ஒன்றை அமைப்பதற்கு சிங்கள இராணுவத்தினரும் சிங்கள காவல்துறையினரும் யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும் பொது மக்களிடம் பணம் கறக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தென்னிலங்கையில் பௌத்த மதக் கட்டடம் ஒன்றை அமைப்பதற்கு வடபகுதி மக்களிடம் இருந்து ஏன் பணம் கறக்கவேண்டும் என பொது மக்கள் தமது கடும் ஆட்சேபனையை வெளியிட்டுள்ளனர். கடந்த 30 வருடங்களாக சிங்கள இராணுவத்தினர் தமிழர் தாயகத்தின் மீது சர்வதேசத்தின் உதவியுடன் முடுக்கிவிட்ட இனஅழிப்பு யுத்தம் காரணமாக வடபகுதியில் ஏராளமான இந்து மற்றும் கிறிஸ்தவ ஆலயங்கள் அழிந்துள்ளன.

இவற்றைப் புனரமைப்பதற்கு எந்தவொரு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படாத நிலையில் தென்னிலங்கையில் பௌத்த பீடம் அமைப்பதற்காக வடக்குத் தமிழ் மக்களிடம் நிதி கறக்கப்படுகிறது. பௌத்த மகா சங்கத்தின் ஏற்பாட்டில் அமைக்கப்படவுள்ள மேற்படி மத பீடத்திற்கு பெருந்தொகையான நிதி தேவையென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக நிதி கோரி  அச்சிடப்பட்டதாகத் தெரிவிக்கப்படும்  பற்றுச் சீட்டுக்கள் வடபகுதியில் விற்கப்படுகின்றன. சிங்கள மொழியில் அச்சிடப்பட்ட மேற்படிபற்றுச் சீட்டு ஒன்று 100 ரூபா வீதம் விற்கப்படுகின்றது.

மேற்படி கட்டடம் அமைப்பதற்காகத் தெரிவுசெய்யப்பட்ட கல் ஒன்றின் விலை 50 ரூபா என்றும் ஒரு பற்றுச் சீட்டை 100 ரூபாவுக்கு வாங்குவதன் மூலம் மேற்படி மத பீடத்தை அமைப்பதற்கு 2 கற்களை அன்பளிப்புச் செய்யுமாறும் சில இடங்களில் பொதுமக்கள் வற்புறுத்தப்படுகின்றனர். யாழ்ப்பாணத்தில் வீதிகளால் செல்கின்ற பொது மக்களை மறிக்கின்ற படையினரும் காவல்துறையினரும் மேற்படி பற்றுச் சீட்டு விற்பனையில் ஈடு
படுவதை அவதானிக்க முடிவதாக பொதுமக்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை மேற்படி மதபீடத்தை அமைப்பதற்காக வன்னியிலுள்ள வர்த்தககர்களிடம் படையினர் 5000 ரூபா வீதம் பணம் அறவிட்டு வருவதாகவும் வர்த்தகர்கள் அச்சத்தின் காரணமாக பணத்தை வழங்கி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பனையால் விழுந்தவனை மாடேறி மிதிப்பது என்பதைப் போல ஏற்கனவே யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களிடம் இவ்வாறான அராஜகங்கள் பல சிங்கள இனவாத அரக்கர்களால் அரங்கேற்றப்பட்டுவருகின்றன.

இவ்வாறே மட்டக்களப்பில் சிறீலங்கா அரசின் ஒட்டுக்குழு அமைப்பான பிள்ளையான் குழுவினரால் கப்பம் கோரும் நடவடிக்கை காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கிவரும் அரச சார்பற்ற நிறுவனங்களிடம் இருந்து கப்பம் கோரும் நடவடிக்கையில் ஒட்டுக்குழு பிள்ளையான் குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வறிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் கிழக்கு மாகாணத்தில் இயங்கிவரும் அரச சார்பற்ற நிறுவனங்களிடம் இவ்வாறு கப்பம் கோரப்படுவதாக சிறீலங்காவில் வெளியாகும் சிங்கள நாளிதழ் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.

பிள்ளையானும் அவரது சகாக்களுமே இவ்வாறு கப்பம் கோரி வருகின்றனர். கப்பம் கோரல் அச்சுறுத்தல்களினால் பிரதேசத்தில் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க முடியவில்லை என அரச சார்பற்ற நிறுவனங்கள் விசனம் தெரிவித்துள்ளன. கப்பம் வழங்காவிட்டால் கிழக்கில் எவ்வித பணிகளையும் மேற்கொள்ள இடமளிக்கப் போவதில்லை என பிள்ளையானும் அவரது சகாக்களும் எச்சரிக்கை விடுத்து வருவதாக சிங்கள நாளிதழில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் அமைந்துள்ள ஓர் அரச சார்பற்ற நிறுவனத்திற்கு பிள்ளையானும் அவரது சகாக்களும் அடிக்கடி தொலைபேசியில் கப்பம் கோரி மிரட்டல் அழைப்புக்களைவிடுத்து வருகின்றனர். சில அரச சார்பற்ற நிறுவனங்கள் வருடாந்தம் பில்லியன் கணக்கான ரூபாவினை கிழக்கு அபிவிருத்திப் பணிகளுக்காக செலவிட்டு வருகின்றன.

ஆயுததாரிகள் புடைசூழ பயணம் செய்யும் பிள்ளையான் அரச சார்பற்ற நிறுவனங்களின் பணிகளுக்கு பெரும் தடையாக உள்ளார் எனவும் அந்த சிங்கள நாளிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, மட்டக்களப்பில் தற்போது கப்பம் கோரிக் கடத்தப்படும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன.

மட்டக்களப்பு வாகரை பகுதியில் இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக வாகரை காவல்
துறையில் உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சிற்றுந்து ஒன்றில் வந்த இனந்தெரியாத நபர்களால் குறித்த இளைஞன் துப்பாக்கி முனையில் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

வாகரை - பால்சேனையைச் சேர்ந்த தணிகாசலம் ஆனந்தகிசோத் என்ற 22 வயது இளைஞனே கடந்த வாரம் கைத்துப்பாக்கி முனையில் அவரது வீட்டில் இருந்து கடத்தப்பட்டுள்ளார். சிற்றுந்தில் வந்த துப்பாக்கிதாரிகள் வீட்டிற்குள் நுழைந்து தந்தை பற்றி விசாரித்ததாகவும் தந்தை வீட்டில் இல்லாததால் மகனை கடத்திச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான பல சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. சர்வதேசத்தின் பார்வை சிறிலங்காவை நோக்கி இருக்கின்றபோதும் இவ்வாறான தமிழ் மக்கள் மீதான கெடுபிடிகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன. இதனைத் தடுத்து நிறுத்த சர்வதேசம் விரைந்து செயற்படவேண்டியதே இன்றைய தேவையாக உள்ளது. உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் உறவுகளே சர்வதேசத்தின் காதுகளுக்கு ஒருமித்துக் குரல்கொடுப்போம்! இது சிந்திக்கும் நேரமல்ல நாம் சிந்தித்து செயற்படும் நேரம்!

(சூறையாடல்கள் தொடரும்)
நன்றி : ஈழமுரசு

ஆலயங்களை அவமதிக்கும் சிங்களம்! - கந்தரதன்

சர்வதேசத்தின் பார்வை தற்போது சிறீலங்காவை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கும் நிலையிலும், இனவாத சிங்களத்தின் பார்வை தமிழர்களின் பூர்வீகத்தின் மீதே வீழ்ந்துகொண்டிருக்கின்றது. சாகையிலும் தமிழ் உயிர் குடித்துச் சாவேன் என்ற நிலையிலேயே சிங்களம் தற்போதும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்நிலையில், வடபகுதியில் இந்து ஆலயங்களின் விக்கிரகங்கள், தெய்வ வாகனங்கள் தென்னிலங்கைக்கு கடத்தப்பட்டமை தொடர்பாக பல தடவைகள் இப்பகுதியில் குறிப்பிட்டிருந்தோம்.

இந்து ஆலயங்களில் திருவிழாக்கள் தற்போது ஆரம்பித்துள்ள நிலையில் சிங்களத்தின் பார்வை தமிழர்களின் பூர்வீக ஆலயங்களை நோக்கித் திரும்பியுள்ளது. கடந்த ஒரு வாரத்திற்குள் நான்கு இந்து ஆலயங்களில் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் இரண்டு ஆலயங்களில் வாகனங்களின் தலைகள் அறுக்கப்பட்டு திருடிச் செல்லப்பட்டுள்ளன. கோப்பாய் வடக்கு பிரான்பற்று இலுப்பையடி பிள்ளையார் ஆலயத்தின் சுவாமிகாவும் வாகனங்களின் தலைகள், ஆயுதங்கள் பயன்படுத்தி அறுக்கப்பட்டு திருடிச்செல்லப்பட்டுள்ளன.

மேற்படி ஆலயத்தில் பயன்படுத்தும் வாகனங்கள் அனைத்தும் வழமையாக வாகனசாலையில் வைத்து பூட்டப்பட்டிருக்கும். ஆயினும் அடிக்கடி வாகன சாலை திறக்கப்பட்டு துப்பரவு செய்யப்பட்டும் வந்துள்ளது. இந்நிலையில் கடந்தவாரம் மேற்படி ஆலயத்தின் வாகன சாலையைத் திறந்து வாகனங்களைத் துப்புரவுசெய்ய முற்பட்ட போது அங்கிருந்த வாகனங்களின் தலைகள் அறுக்கப்பட்டுகாணப்பட்டுள்ளது.

ஆனால் வாகனங்களில் இருந்து அறுக்கப்பட்ட தலையின் எச்சங்கள் எவையும் அங்கு இல்லை என்றும் தெரியவந்துள்ளது. இதேபோன்ற ஒரு திருட்டுச் சம்பவம் யாழ் அச்செழுப் பகுதியில் உள்ள அம்மன் ஆலயத்திலும் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறே, வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் பகுதியிலுள்ள கௌத்தந்துறைப் பிள்ளையார் ஆலயத்தின் கதவினை உடைத்து ஐம்பொன்னினாலான மிகப்பெறுமதியான பிள்ளையார் சிலை திருடப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை காலை பூஜையை முடித்துக் கொண்டு ஆலயத்தினைப் பூட்டிவிட்டு மீண்டும் மதியப் பூஜைக்காக 11மணியளவில் ஆலயத்திற்கு வந்த குருக்கள் ஆலயக் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை அவதானித்துள்ளார்.

கதவு உடைக்கப்பட்டது தொடர்பாக ஆலய நிர்வாகத்தினருக்குத் தெரியப்படுத்தியுள்ளார். சம்பவ இடத்திற்கு வருகைதந்த ஆலய நிர்வாகத்தினர் ஆலயத்திற்குச் சென்று பார்த்த போது ஆலயத்தின் எழுந்தருளி விக்கிரகமான ஐம்பொன்னினாலான மிகப் பழைமை வாய்ந்ததும், பெறுமதியானதுமான பிள்ளையார் விக்கிரகம் திருடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மேற்படி ஆலயம் கடந்த போரின்போது மிக மோசமாக அழிவடைந்து இருந்த நிலையில் அண்மையில் ஊர் மக்களின் நிதி உதவியுடன் புனரமைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், புலோலி வடக்கு முச்சந்தி ஆனைவிழுந்தான் பிள்ளையார் ஆலயத்தின் கலசங்கள் இரண்டு திருடப்பட்ட சம்பவமும் கடந்த வார முற்பகுதியில் இடம்பெற்றுள்ளது. 50 ஆயிரம் ரூபா பெறுமதியான கலசங்களே இவ்வாறு களவாடப்பட்டுள்ளன.

கடந்த 2011 டிசெம்பர் 20 ஆம் நாளும் மேற்படி ஆலயத்தின் கூரையை பிரித்து ஆலயத்தினுள் உள்நுழைந்த திருடர்களால், லட்சம் ரூபா பெறுமதியான ஆலயப் பொருட்கள் களவாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணத்தில் இவ்வாறான ஆலய உடமைகள், விக்கிரகங்கள், வாகனங்கள் திருடப்படுவது அதிகரித்துள்ளமையும் சிறீலங்காப் படையினரின் காவலரண்கள் வீதிக்கு வீதி இருந்தும் கொள்ளையர்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து செல்வது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளார்கள்.

யாழில் இவ்வாறான கொள்ளைச்சம்பவங்கள் அதிகரித்துள்ளமை குறித்து ஆலய நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதேவேளை, தமிழர் தாயகப் பகுதிகளில் பல இந்து ஆலயங்களை சிறிலங்காப் படையினர் ஆக்கிரமித்துள்ளமை அனைவரும் அறிந்ததே. அதுமட்டுமல்லாமல் சில இடங்களில் ஆலய சுற்றாடல்களையும் படையினர் அத்துமீறி ஆக்கிரமித்துள்ளதுடன், ஆலய நிகழ்வுகளுக்கு கட்டுப்பாடுகள் விதித்து வருவதாக ஆலய நிர்வாகத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்.

இவ்வாறே, கிளிநொச்சி கனகாம்பிகை கண்ணகி அம்மன் ஆலயத்தில் அம்மன் வீதி உலாவருவதற்கு படையினர் தடை விதித்துள்ளனர்.  நீர் பாயும் இடங்களின் ஊடாக அம்மன் உலாச் செல்லுவது வழக்கம் என்றும் அழகர் வீதி எனப்படும் குளக்கட்டின் வழியாகச் சென்று கோயிலை அடைவதே மரபு என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் கடந்த வாரம்  அம்மன் இரணைமடுக்குளத்தின் அணைக்கட்டு வாயிலாக உலா வந்தபொழுது படையினர் அம்மனைத் தடுத்து நிறுத்தினர். பின்னர் திருவையாறு வழியாக அம்மன் கோயிலைச் சென்றடைந்தார். கடந்த இரண்டு வருடங்களின் முன்பாக அப்பகுதியில் மீள்குடியேற்றம் நடந்த பொழுதும் இரணைமடுக்குளத்தை தளமாகக் கொண்ட படையினரின் முகாங்கள் அகற்றப்படாதுள்ளன. படையினரின் இந்த முகாங்கள் ஆலயத்தின் வெளிவீதியிலும் உள்ளன எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக கனகாம்பிகைக் குளத்திற்கு மேற்காக உள்ள சாந்தபுரப்பகுதிகளில் படையினர் பாரிய முகாம்களை அமைத்து ஆயுத களஞ்சியங்களை அமைத்து சிங்கள மக்களின் பார்வைக்காக விட்டுள்ளார்கள். இவ்வாறான நிலையில் கனகாம்பிகை கண்ணகி அம்மன் ஆலயத்தின் முன்பகுதி ஊடாககுளத்தின் கரைக்கு கால் நடைமேய்ப்பதற்கும் மற்றும் மணல் அகழ்வு நடவடிக்கையில் மக்கள் ஈடுபடமுடியாதவாறு படையினர் தடை விதித்துள்ளனர் என மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

இதற்கிடையில் கடந்த ஜனவரி மாதம் அம்மனுக்கு கும்பாபிசேகம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் சிறீலங்காப்படையினர் அம்மனின் வீதி உலா வைத்தடுத்து நிறுத்தியதாக பக்தர்கள் விசனம் தெரிவித்தார்கள்.

இரணைமடுக்குளத்தின் மூலையில் புத்தர் சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அம்மன் திருப்பி அனுப்பப்பட்ட அணைக்கட்டின் வழியாக பெருமளவு தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு படையினர் அனுமதித்து வருகின்றமை மக்களை மேலும் விசனமடையவைத்துள்ளது.

இவ்வாறே, தமிழர் பகுதிகளை ஆக்கிரமித்துக் கொண்டு வரும் புத்தபெருமான் கடந்தவாரம் குருநகர்ப் பகுதியையும் ஆக்கிரமித்துள்ளதாகவும் இந்த ஆக்கிரமிப்புப் பணிகளில் சிறிலங்காப் படையினரே முழு மூச்சில் செயற்பட்டு வருகின்றனர் எனவும் அப்பகுதிப் பொதுமக்கள் ஆத்திரம் வெளியிட்டுள்ளனர்.

அந்த வகையில் யாழ்.கடற்கரை வீதி, குருநகர் பகுதியில் புதிதாக புத்தர் சிலையன்றை அமைக்கும் பணியில் படையினர் மும்முரமாக ஈடுபட்டு வருவதாக பிரதேச மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

குறித்த பகுதியில் கடந்த காலங்களில் பாரியளவு கடற்படை காவலரண் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. கடந்த வாரமளவில் குறித்த காவலரண் அகற்றப்பட்டிருந்த நிலையில் குறித்த பகுதியை மக்களுக்கு விடுவிப்பதற்காகவே காவலரண் அகற்றப்பட்டுள்ளதாக மக்கள் நம்பியிருந்தனர். எனினும் அந்த இடத்தில் புத்தர் சிலையன்றை அமைக்கும் பணியை படையினர் ஆரம்பித்துள்ளனர். புதிய புத்தர் சிலையின் மூலம் யாழ்.கோட்டைக்கு சுற்றுலா வரும் தென்னிலங்கை மக்களைக் கவரமுடியும் எனப் படையினர் சிலர் மக்களுக்குத் தெரியப்படுத்தியிருக்கின்றனர்.

இதேவேளை யாழ்.மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட இந்தப் பகுதியில் சிலை அமைப்பது தொடர்பில் சபையிடம் எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என யாழ். மாநகரசபை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் அதிகரித்துச் செல்லும் தென்னிலங்கையர்களின் எண்ணிக்கையினைத் தொடர்ந்து,  இனந்தெரியாத பல நபர்கள் நடமாடித்திரிகின்றார்கள் எனவும் இவர்கள் யார் என்று இனம்கண்டுகொள்ளமுடியாத நிலைகாணப்படுவதாகவும் யாழ்.தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து பொதுமக்கள் மிகவும் அவதானமாக செயற்படுமாறும் அவதானிகள் தெரிவித்துள்ளனர். இவற்றை எல்லாம் சிங்களம் வேடிக்கையாகவே எண்ணுகின்றது. எமது பூர்வீகம் அழிவதை நாமும் வேடிக்கை பார்ப்போமாயின் நாம் தமிழர்களே அல்ல. அனைத்துலகும் பரந்து வாழ் தமிழ் உறவுகளே. சிங்களத்தால் எமக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு சர்வதேசத்தை நோக்கி ஒருமித்து குரல் கொடுப்போம். நாம் சிந்திக்கும் நேரமல்ல சிந்தித்து செயற்படும் நேரம்.
(சூறையாடல்கள் தொடரும்)
நன்றி : ஈழமுரசு