Friday, May 4, 2012

தமிழ் மக்களைக் குழப்பும் காணிப்பதிவுகள்!

தமிழர் தாயகப் பகுதி எங்கும் தமிழ்  இளம் சமுதாயங்களின் உயிர்கள் காவுகொள்ளப்படும் நிலையில், தமிழ் மக்களின் பூர்வீகம் நிலங்கள் சிங்கள இனவாதத்தால் சூறையாடப்படும் படலம் தொடர்கின்றது.
யாழ். நகரில் வரலாற்று புகழ்மிக்க பழைய பூங்கா கட்டடம் வடமாகாண சிங்கள ஆளுநர் சந்திரசிறியின் பணிப்புரையின் பேரில் இடித்துடைக்கப்பட்டுவருவதாக யாழ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில் கச்சேரியாகவும் அரச அதிபரின் வாசஸ்தலமாகவும் பாவிக்கப்பட்ட குறித்த கட்டடம் 1829ஆம் ஆண்டு யாழ். மாவட்ட அரச அதிபர் காரியாலயத்திற்கு சொந்தமானதென முன்னாள் அரச அதிபர் லைக்கினால் எழுதிக் கொடுக்கப்பட்டிருந்தது.
தற்போதைய யாழ். அரச அதிபர் காரியாலயத்திற்கு நேரெதிரே அமைந்துள்ள குறித்த பழைய பூங்கா கட்டடம் தொல்பொருள் திணைக்களத்தினால் பராமரிக்கப்பட்டும் வந்துள்ளது.
இந்நிலையிலேயே வடமாகாண ஆளுநர் சந்திரசிறியின் பணிப்பு என்று கூறி, அவரது பிரத்தியேக செயலர் தலைமையில் குறித்த கட்டடத்தின் பகுதியும் சுற்று மதிலும் கடந்தவாரம் இடிக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக யாழ். மாவட்ட அரச அதிபர் இமெல்டா சுகுமார் தனக்கு எதுவும் தெரியாது. 'யாழ். மாவட்டத்தில் என்ன நடைபெறுகிறதென்றே தெரியவில்லை. எங்களையும் மீறி என்னென்னமோ நடைபெற்று வருகிறது" என பொறுப்பில்லாமல் சர்வசாதாரணமாகப் பதில் கூறியுள்ளார்.
தனக்கு ஒரு கடிதம் வந்திருந்ததாகவும் அதில் பழைய பூங்கா கட்டடத்தின் சுவர்களில் பரவிக் கிடக்கின்ற மர வேர்களை அப்புறப்படுத்தவுள்ளோம் என தொல்பொருள் திணைக்களத்திற்கு ஆளுநரால்  எழுதனப்பட்டிருந்ததாகவும் -
இக்கடிதம் தொடர்பான விபரங்களை ஆராய்வதற்கிடையில்  மாநகர சபையினரால் அந்த பழைய கட்டடத்தின் பல பகுதிகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளன எனவும் - யாழ். மாவட்ட அரச அதிபர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2ஆம் திகதி மரபுரிமைகள் அமைச்சினால் இந்த பழைய பூங்கா கட்டடம் 'தொல்பொருள் சின்னம்' என பிரகடணப்படுத்தப்பட்டு 1722 என்னும் இலக்கத்தினையுடைய வர்த்தமானி அறிவித்தலொன்றும் வெளிவந்திருந்த நிலையில் குறித்த கட்டடம் இடிக்கப்படுவதாகவும் ; நீலிக் கண்ணீர் வடித்துள்ள இமெல்டா சுகுமார் மேலிடத்திற்கு இவ்விடயத்தைத் தெரிவிக்கமுடியுமே தவிர என்னால் எதுவும் செய்ய முடியாது...' என்று யாழில் ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
ஆயினும் பழைய பூங்காக் கட்டடத்தின் பெரும் பகுதி உடைத்துச் சின்னாபின்னமாக்கப்பட்டுவிட்டது.
இந்நிலையில், யாழ். மாவட்டத்தில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் காணிப்பதிவு நடவடிக்கையினால் பொதுமக்கள் பலர் கதிகலங்கி உள்ளதுடன் பெரும் சிரமங்களையும் எதிர் நோக்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எந்த விதமான அறிவித்தலுமின்றி கிராம சேவையாளர் ஊடாக விநியோகிக்கப்படும் படிவங்களைப் பெற்றுக்கொள்ளும் பொதுமக்கள், அதனை நிரப்பிக் கொடுப்பதிலேயே முனைப்புக் காட்டுகின்றனர்.
காரணமின்றி மேற்கொள்ளப்படும் இந்தப் பதிவுகள் தொடர்பாக பொதுமக்கள் கிராம சேவையாளரிடம் விளக்கம் கேட்கும் போது அவர்களும் உரிய முறையில் பதில் அளிப்பது கிடையாது.
காரணம் கிராம சேவகர்களுக்கும் இதற்கான பூரண விளக்கம் உயர் அதிகாரிகளால் வழங்கப்படவில்லை என்பதே ஆகும். விண்ணப்பப் படிவங்களை நிரப்பி கையளிக்கும் போது காணியின் உறுதி மற்றும் விளக்கப்படங்களையும் சேர்த்து வழங்குமாறு மக்களிடம் கேட்கப்படுகின்றது. இதன்படியே விண்ணப்பப் படிவங்களும் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.
இதனால் யாழ். மாவட்டத்தில் காணியுள்ள பலர் வெளிநாடுகளில் புலம் பெயர்ந்து வசித்து வருவதனால் இவர்களின் உறுதிகளைப் பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர் நோக்குகின்றனர்.
இந்தப் பதிவுகளை உடன் நிறுத்துமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அரசாங்கத்திடம் பல முறை வலியுறுத்தியபோதும் அரசு அதனை உதாசீனம் செய்து பதிவுகளை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்ற தென்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் அங்கு தமிழ் மக்கள் குழப்பமடைந்துள்ளனர்.
இதேவேளை, வீதி நிர்மாணப் பணிகளுக்கான கிரவல் மண்ணினை பெற்றுக் கொள்ளவென முல்லைத்தீவு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நாள் தோறும் தொன் கணக்கில் மண் அகழ்வு இடம்பெற்று வருகின்றது.
ஆனால் இம்மண் முல்லைத்தீவிற்கு வெளியேயும் எடுத்துச் செல்லப்படுவதாக உள்ளூர் அமைப்புக்கள் பலவும் குற்றச்சாட்டுக்களை எழுப்பி வருகின்றன.
கனிய வள திணைக்களத்திடமிருந்து அனுமதி பெற்றே முலைத்தீவில் மண் அகழ்வில் ஈடுபட்டுள்ளதாக முல்லைதீவு அரச அதிபர் ஏ.பத்திநாதர் கூறுகிறார்.
உள்ளூர் மக்கள் கூட தமக்கு தேவையான கிரவல் மண்ணினை அவர்களிடமிருந்தே பெற்றுக் கொள்ள வேண்டுமெனவும் தெவிக்கிறார்.
ஆனால் முல்லைத்தீவில் மணல் அகழ்விற்கான அனுமதி பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த தென்னிலங்கையர்களுக்கே வழங்கப்பட்டிருப்பதாகவும் உள்ளூர் அமைப்புக்களுக்கு சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டிருக்கவில்லை எனவும் குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்படுகின்றது.
உள்ளூர் பொது அமைப்புக்களுக்கு மண் அகழ்வதற்கான அனுமதியை வழங்குவதன் மூலம் உள்ளூர் மக்களது பணம் தெற்கிற்கு செல்வதை தவிர்க்க முடியுமெனவும் பொது அமைப்புக்கள் கேள்வி எழுப்புகின்றன.
குமுழமுனைப் பகுதியில் பல ஏக்கர் நிலப் பரப்பு ஆக்கிரமிக்கப்பட்டு கனரக வாகனங்கள் மூலம் மண் அகழ்வு தொடர்கிறது. திட்டமிடலின்றி மேற்கொள்ளப்படும் இம் மணல் அகழ்வினால் முள்ளியவளை - குமுழமுனை வீதி இடிந்து வீழ்ந்து போகலாமென அஞ்சப்படுகின்றது. அத்துடன் வெள்ளம் தேங்கும் அபாயம் பற்றியும் எச்சரிக்கப்படுகின்றது.
இவை பற்றியெல்லாம் அங்கு நிர்வாகம் நடத்தும் ஆளும் தரப்பைச் சேர்ந்தவர்களோ பினாமிகளோ கண்டு கொள்வதில்லையென்பதால் இந்நடவடிக்கைகளில் அவர்களது பங்கும் இருக்கலாமென பொது அமைப்புக்கள் தரப்பில் சந்தேகம் எழுப்பப்படுகின்றது.
உரிய தரப்பினரே சிந்தித்துச் செயற்படுவதன் மூலமே நாம் எமது தாயகத்தை மீட்க முடியும். சிந்தியுங்கள். செயற்படுங்கள்!
(சூறையாடல்கள் தொடரும்)

No comments: