யாழ்மாவட்டம் மற்றும் வன்னிப் பகுதிகளில் தொடர்ந்து இடம்பெற்று வரும் கொள்ளைச் சம்பவங்களினால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளார்கள். இரவுவெளைகளில் ஆள்நடமாட்டம் இல்லாத வேளைகளிலேயே இந்தக் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
இராணுவத்தினரின் காவல் நிலையங்கள் நெருக்கமாக அமைந்துள்ள பகுதிகள் மற்றும் படையினரின் சுற்றுக்காவல் நடவடிக்கைகள் அதிகமாக இடம்பெறும் பகுதிகளிலேயே கொள்ளைகள் அதிகம் இடம்பெற்றுவருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ்மாவட்டம், வல்வெட்டித்துறை பொலிகண்டிப்பகுதியில் கடந்தவாரம் அதிகாலைவேளை வீட்டில் உள்ளவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த போது ஓட்டினை பிரித்து உள்நுழைந்த திருடர்கள் நகை பணம் உட்பட பெறுமதியான பொருள்களை களவாடிச் சென்றுள்ளனர்.
சுமார் 4 லட்சத்து 23 ஆயிரம் ரூபா பெறுமதியான நகைகள், இரண்டு கைத்தொலைபேசிகள் மற்றும் 5 ஆயிரம் ரூபா ரொக்கப் பணம் என்பனவே களவாடப்பட்டுள்ளன.
இந்நிலையில், யாழ் நெல்லியடியில் ஒரே இரவில் நான்கு கடைகள் உடைக்கப்பட்டு பெரும் தொகையான பணம் பல ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்களும் திருடப்பட்டதுடன் பெறுமதியான பொருட்கள் சேப்படுத்தப்பட்டுள்ளதாகவும் நெல்லியடி காவல்துறையினரிடம் முறைப்பாடு செயப்பட்டுள்ளது.
இக்கொள்ளைகள் கடந்த வாரம் நள்ளிரவை அண்மித்த வேளை இடம்பெற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது. நெல்லியடிச் சந்தியிலிருந்து கொடிகாமம் செல்லும் வீதியில் அமைந்துள்ள இயந்திர விற்பனை நிலையத்தின் கதவு உடைக்கப்பட்டு பெறுமதியான 2 இயந்திரங்கள் திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, நெல்லியடிச் சந்தியில் இருந்து பருத்தித்துறைக்கு செல்லும் வீதியில் அமைந்துள்ள உந்துருளி விற்பனை; நிலையத்தின் கதவு உடைக்கப்பட்டு பல இலட்சம் ரூபா கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகவும் அடுத்து அயலில் உள்ள மரத்தள பாட விற்பனை நிலையத்தின் கதவுகளை உடைத்து உள்நுழைந்த திருடர்கள் பெறுமதியான பொருட்களை உடைத்து சேதப்படுத்தி விட்டு சென்றுள்ளதாக காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பின்னர் மேற்படி வீதியில் அமைந்துள்ள தீந்தை (பெயின்ற்) விற்பனை நிலையத்தினுள் புகுந்து அங்கிருந்த 53 ஆயிரம் ரூபாவை கொள்ளையடித்து சென்றுள்ளதாகவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது இவ்வாறிருக்க, யாழ்ப்பாணம், கச்சேரியடி முதலியார் வீதியிலுள்ள வீடொன்றில் தனித்திருந்த வயோதிபப் பெண்ணொருவரைக் கட்டிவைத்துவிட்டு சுமார் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளை கொள்ளையிட்டுச் சென்ற சம்பவமொன்று கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
யாழ். கச்சேரியடி முதலியார் வீதியிலுள்ள வீட்டில் மேற்படி வயோதிபப் பெண்ணும் தனியார் நிறுவனமொன்றில் கடமையாற்றும் அவரது மகளும் வசித்து வரும் நிலையில், செவ்வாய்க்கிழமை முற்பகல் 11 மணியளவில் வீட்டில் எவரும் இல்லாதபோது குறித்த வீட்டிற்கு மூவர் சென்றுள்ளனர்.
இவர்கள் தமது வீட்டிற்கு மாபிள் பதிக்க வேண்டியுள்ளதாகவும் குறித்த வீட்டில் மாபிள் பதிக்கப்பட்ட நிலையில் அதனை பார்வையிடப்போவதாகவும் கூறி உள்நுழைந்துள்ளனர்.
வீட்டினுள் நுழைந்த இந்த மூவரும் மேற்படி வயோதிபப் பெண்ணின் வாயினுள் துணியை அடைந்து அவரைக் கட்டிவைத்துவிட்டு அவர் அணிந்திருந்த தங்கநகைகளையும் வீட்டிலிருந்த தங்கநகைகளையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
இதனால் பாதிக்கப்பட்ட மேற்படி வயோதிபப்பெண் யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
சுமார் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்கநகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் யாழ். காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், யாழ்ப்பாணம் திருநெல்வேலிப் பகுதியில் கடந்த வியாழக்கிழமை ஒரே இரவில் பதினொரு கடைகள் உடைத்து கொள்ளையிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் சிறீலங்காப்படையினரின் சுற்றுக்காவல் நடவடிக்கை மற்றும் படைக்காவலரண்கள் என பெருந்திரளான படையினர் காவல்துறையினர் நிலைகொண்டுள்ள நிலையில் இந்த பாரிய கொள்ளைச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மிகத் திட்டமிட்ட வகையில் பதினொரு கடைகளிலும் ஒரு குழுவினரே இந்தக் கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என்று மக்கள் கருத்து வெளியிட்டுள்ளார்கள்.
கணனி உதிரிப்பாகங்கள் விற்பனை நிலையங்கள், தீந்தை விற்பனை நிலையங்கள், புடைவை வியாபார நிலையங்கள், பல்பொருள் விற்பனை நிலையங்கள் என்பனவே இவ்வாறு உடைக்கப்பட்டு சூறையாடப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் திருநெல்வேலிப் சந்திப்பகுதியில் ஏழு கடைகளிலும் மற்றும் திருவெல்வேலி தபால்பெட்டி சந்தியிலும் உள்ள நான்கு கடைகளிலும் இந்தக் கொள்ளைகள் இடம்பெற்றுள்ளன. படையினரின் காவலரண்களும் இரவுநேரப் படைகளின் காவல்களும் உள்ள சமயத்திலேயே இந்தக் கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இச் சம்பவத்தினைத் தொடர்ந்து யாழ்.குடாவில் உள்ள வர்த்தகர்கள் மத்தியில் பாரிய பதற்றம் நிலவிவருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் கொள்ளைச்சம்பவங் களினால் மக்கள் அச்சம் அடைந்துள்ளதுடன், சிறீலங்கா காவல்துறையினர் மற்றும் படையினரின் அசமந்தபோக்குக் காரணமாக இவர்களின் பின்னணியில் இடம்பெறும் கொள்ளைச் சம்பவங்களை முன்னிட்டு மக்கள் உயிர் அச்சத்தில் வாழ்ந்து வருவதாக பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளார்கள்.
இந்நிலையில், பூட்டியிருந்த கிளிநொச்சி கரைச்சிப் பிரதேச சபையின் களஞ்சிய அறைக் கதவு உடைக்கப்பட்டு அங்கிருந்தபொருட்கள சிறீலங்கா சுகந்திரக் கட்சியினராலும் படைப்புலனாய்வாளர்களினாலும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
கடந்தவாரம் நண்பகல் வேளை கிளிநொச்சி பழைய மருத்துவமனைக்கு முன்னால் உள்ள களஞ்சிய அறைக்கு வாகனம் ஒன்றில் வந்திறங்கிய சிறிலங்கா சுகந்திரக் கட்சியினரும் படைப ;புலனாய்வாளர்களும் அங்கிருந்த பொருட்களை வாகனத்தில் ஏற்றிச்சென்றுள்ளார்கள். அச்சமயம் அவ்வழியால் வந்த பிரதேசசபை ஊழியர்கள் உடனடியாக தமது அலுவலகத்திற்கு தெரியப்படுத்தியதுடன், மேற்படி வாகனத்தினைப் பின்தொடர்ந்து சென்ற போது வாகனம் அதே வீதியில் சற்றுத் தூரத்தில் உள்ள சிறீலங்கா சுகந்திரக் கட்சியின் அலுவலகத்திற்குச் சென்றுள்ளது. பின்னர் அவ்வலுவலகத்தில் உள்ளவர்களிடம் நீங்கள் செய்தது தவறு, எமது பொருட்களை தருமாறும் கேட்டுள்ளனர்.
அதற்கு அக்கட்சியினர் உடைக்கப்பட்ட களஞ்சிய அறை இருக்கும் இடம் தமக்கு சொந்தமானது என்றும் கரைச்சிப் பிரதேச சபைக்குச் சொந்தமானது என்றால் அதை உறுதிப்படுத்தக் கூடிய பத்திரங்களை தாருங்கள் நாங்கள் பொருட்களையும் தருகிறோம் என்று கூறியதுடன் மேலும் தொடர்ந்து அங்கு நின்றால் நடப்பது வேறாகத்தான் இருக்கும் என்றும் மிரட்டியுள்ளனர்.
இதனையடுத்து கிளிநொச்சிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்வற்காக சுமார் ஒரு மணியளவில் சென்றபோதும் அங்கு பிரதேச சபை ஊழியர்களை அங்கும் இங்குமாக இழுத்தடித்துவிட்டு மாலை 5 மணியளவிலேயே முறைப்பாடு ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்ட சபைக் களஞ்சிய அறையானது போரின்போது பாதிக்கப்பட்டுள்ள நிலையில் முன்னர் இருந்தே பிரதேச சபையினால் களஞ்சிய அறையாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
புலம்பெயர் வாழ் எம் உறவுகளே இது சிந்திக்கும் நேரமல்ல நாம் ஒன்று பட்டு செயற்படவேண்டிய நேரம். சிந்தியுங்கள் செயற்படுங்கள்.
(சூறையாடல்கள் தொடரும்)

No comments:
Post a Comment