Friday, May 4, 2012

.இளம் மாணவர்கள் மீது திரும்பியுள்ள சிங்களப் பார்வை!


தமிழர்களின் சொத்துக்களை தொடர்ந்து சூறையாடிவரும் சிங்களத்தின் கோரப்பார்வை தற்போது தமிழர்களின் சொத்துக்களில் ஒன்றான கல்வியை ஒடுக்குவதற்கும் இளம் மாணவர்களின் சிங்கள அத்துமீறலுக்கு எதிராக எழும் எதிர்ப்பலைகளை அடக்குவதற்கும் முனைப்புடன் திரும்பியுள்ளது.
அந்தவகையில், யாழ். பல்கலையின் மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் சிலருக்கு உயிரச்சுறுத்தல் விடுத்து துண்டுபிரசுரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
கடந்த 15-12-2011 வியாழக்கிழமை காலை யாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் பல இடங்களில் இவ்வாறான துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டிருந்ததுடன், அங்காங்கே வீசப்பட்டும் காணப்பட்டதாக மாணவர்கள் தெரிவித்தனர்.
மாணவர்களின் பெயர்கள், அவர்களின் சொந்த இடங்களான மாவட்டங்கள் குறிப்பிட்டு இதில் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளதுடன், சில விரிவுரையாளர்களின் பெயர்களும் உள்ளடக்கப்பட்டு அவர்களுக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் சமாதானத்தை அனுபவித்துக் கொண்டிருப்பதாகத் தெரிவிக்கும் இந்தத் துண்டுப் பிரசுரத்தில், அதனைக் குழப்ப முனையும் மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்னரும் இவ்வாறான எச்சரிக்கைத் துண்டுப் பிரசுரங்கள் ஒட்டப்பட்டிருந்ததை மாணவர்கள் நினைவூட்டும் அதேவேளை, இம்முறை வவுனியா வளாக மாணவர்கள் சிலரின் பெயரும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
பல்கலைக் கழகத்தினுள் இருந்து தகவல் வழங்கும் புல்லுருவிகள் மூலம் தகவல்களை பெற்றுக்கொள்ளும் படைப் புலனாய்வாளர்கள், மாணவர் சக்தியை நேருக்குநேர் எதிர்கொள்ள முடியாது இவ்வாறு அச்சுறுத்திப் பணியவைக்க முனைவதாக தெரிவித்துள்ள சிரேஸ்ட விரிவுரையாளர் ஒருவர், இவ்வாறான அச்சுறுத்தல் பிரசுரங்கள் மூலம் மாணவர்களின் ஒற்றுமை மற்றும் மனோ வலிமையை சிதைத்து, தமது அரச பயங்கரவாதத்தை நிலைக்கச் செய்ய அரசு எடுக்கும் முயற்சிகள் இவை என மேலும் தெரிவித்துள்ளார்.
அண்மைய நாட்களாக பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிராக சிறீலங்காப் படையினர் மற்றும் புலனாய்வாளர்களின் நடவடிக்கைகள் அதிகரித்துக் காணப்படுவதுடன், அவர்களுக்கு தொடர்ந்தும் உயிரச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருகின்றது.
பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் மீதான கொலைவெறித் தாக்குதல் மற்றும் சித்த மருத்துவபீட மாணவனின் கடத்தல் என்பனவற்றுக்கு எதிராக மாணவர் காட்டிய எதிர்ப்புகளும், மாவீரர் எழுச்சி வாரத்தை ஒட்டிய நிகழ்வுகளாலும் சீற்றமடைந்திருந்த படையினரும், புலனாய்வாளர்களும் இவ்வாறு நடந்து கொள்வார்கள் என தாம் முன்னரே எதிர்பார்த்த ஒன்று என மாணவர்கள் தெரிவித்தனர்.
வன்முறையற்ற ரீதியில் தமது உரிமைக்காக குரல் கொடுக்கும் அனைவரும் சிறீலங்கா அரச பயங்கரவாதத்தால் இவ்வாறு அச்சுறுத்தப்பட்டும், கொன்றொழிக்கப்பட்டும் மௌனிக்க வைக்கப்படுகின்றார்கள் என்பதற்கு மீண்டும் ஒரு புலப்படு ஆதாரமாக இந்த உயிர் அச்சுறுத் தல் பிரசுரங்கள் இருப்பதை அவர்கள் சுட்டிக்காட்டினர்.
கடந்த காலங்களில் தமிழீழ விடுதலைப் போர் உக்கிரமாக நடந்துகொண்டிருந்த காலங்களிலும் சிறிலங்கா படைப்புலனாய்வாளர்கள் மற்றும் அவர்களுடன் இணைந்தியங்கிய மாணவர்களை எச்சரித்து 'நாட்டைக்காக்கும் தமிழர் கூட்டமைப்பு" மற்றும் 'நாம் தமிழர்" என்னும் பெயரில் துண்டுப்பிரசுரங்களை வெளியிட்டதும், கடந்த வருடம் யாழ்ப்பாணத்தில் நடைபெற இருந்த 'ஜேர்மனிய வாரம்" என்னும் தொனிப்பொருளிலான ஒரு கலாசாரப்பகிரல் நிகழ்வை குழப்ப 'நாம் தமிழர்" என்னும் பெயரில் தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் மிரட்டல்கள் விடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ் மக்களின் குரல்கொடுக்கும் சக்தியாக இளைய தலைமுறை உருவாவதை தடுக்கும் நோக்குடன், தாயக மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் மீது மேற்கொள்ளப்படும் இவ்வாறான நடவடிக்கைகள் உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
இதற்கென அனைத்துலகும் வியாபித்து பலமடைந்துள்ள புலம்பெயர் உறவுகள் ஒருமித்துக்குரல் கொடுக்க முன்வரவேண்டும் என்றும், சாத்வீக ரீதியான தாயக மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களின் உரிமைக்கான குரலைப் பலப்படுத்தி, அவர்கள் எதிர்நோக்கும் சிறீலங்கா அரச பயங்கரவாத இன்னல்களை அகற்ற பன்னாட்டு விழிப்புணர்வை ஏற்படுத்த முன்வரவேண்டும் என்றும் தாம் வேண்டி நிற்பதாக மாணவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதேவேளை, மாணவர்கள் கடத்தப்பட்டு காணாமல்போகும் சம்பவங்களும் யாழ்.குடாவில் அரங்கேறி வருகின்றது.
யாழ் நகரில் கடந்தவாரம் புதன்கிழமை மாலை 4 மணியளவில் பிரபல வணிகர் ஒருவரின் மகன் காணாமல் போயுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.
யாழ். பரியோவான் கல்லூரியில் க.பொ.த உயர்தரத்தில் கல்வி பயிலும், யாழ். அத்தியடியைச் சேர்ந்த பாக்கியராசா தனுஜன் (வயது 18) என்ற  மாணவனே காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்.நகரப் பகுதியில் அமைந்துள்ள தனது தந்தையின் வியாபார நிலையத்தில் வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த சமயம் அருகில் இருந்த உணவகத்திற்கு சாப்பிடச் சென்ற குறித்த மாணவன் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை என யாழ். காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ் மக்களை சீண்டும் நடவடிக்கையில் தமிழீழ தாயகப் பகுதிக்கு வெளியேயும் சிங்களம் இறங்கியுள்ளதான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
கடந்த வாரம் புதன்கிழமை இரவு  சிறிலங்கா கேகாலை மாவட்டத்தில் எட்டியாந்தோட்டைக்கு அருகே உள்ள எதுராபொல கீழ்ப்பிரிவு தோட்டத்தில் அமைந்துள்ள இந்து ஆலயத்தினுள் அத்துமீறி நுழைந்த அயலூர் சிங்கள காடையர்கள்,அங்கிருந்த தமிழர்களைக்இ கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளனர்.
மார்கழி மாத பஜனை வழிபாடு தொடர்பான கோயில் நிர்வாகக் குழு கூட்டமொன்றை நடத்திக்கொண்டிருந்தபோது, கோயிலுக்குள் வாள்கள் மற்றும் தடிகளுடன் நுழைந்தவர்கள் கோயில் வழிபாட்டுப் பொருட்களைத் தாக்கி, அங்கிருந்த இளைஞர்களையும் பெண்களையும் தாக்கிவிட்டுச் சென்றதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தையடுத்து தம்மீது இதற்குப் பின்னரும் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சம் நிலவுவதாகவும் தாக்குதலுக்குள்ளான பெண்களில் ஒருவர் தெரிவித்துள்ளார்.
குறித்தப் பிரதேசத்தில் அடிக்கடி இவ்வாறான அச்சுறுத்தல் மற்றும் தாக்குதல் சம்பவங்கள் கடந்த காலங்களிலும் நடந்துள்ளதால் காவல்துறையினரும் தொழிற்சங்க அதிகாரிகளும் அரசியல் தலைவர்களும் தமது பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும்  உள்ளூர் தொழிற்சங்கத் தலைவர்களில் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தாக்குதலில் தமிழர்கள் 4 பேர் காயமடைந்ததாகக் கூறிய காவல்துறைப் பேச்சாளர், பிரதான சந்தேகநபர் அன்றிரவே கைதுசெய்யப்பட்டு 19ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இன்னும் மூன்று சந்தேக நபர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆயினும், கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர், நான் உள்ளேசென்றுவிட்டு மீண்டும் வந்து உங்கள் மீது தாக்குதல் நடத்துவேன் என்று பாதிக்கப்பட்டவர்களை அச்;சுறுத்திவிட்டுச் சென்றதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளனர்.
எவ்வளவு காலத்திற்குத்தான் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகள் இவ்வாறு தொடரும். சிங்களவனுக்குத் துணைபோபவர்களே, சற்றுச் சிந்தியுங்கள்! எப்போது நீங்கள் திருப்பித் தாக்குவீர்கள், உங்கள் இனத்தைக் காட்டிக் கொடுப்பதை நிறுத்திவிட்டு...?
புலம்பெயர் வாழ் எம் உறவுகளே இது சிந்திக்கும் நேரமல்ல நாம் ஒன்றாக இணைந்து செயற்படவேண்டிய நேரம் இது.
(சூறையாடல்கள் தொடரும்) 

No comments: