Friday, May 4, 2012

தமிழர்களை சோதிக்கின்றது சிங்களம்!


தமிழ் மக்கள் கிறீஸ் பூதத்தின்  அச்சத்தில் இருந்து இன்னும் விலகாத நிலையில்,  தமிழர் தாயகத்தின் பல  பகுதிகளில்  இன்னும் கிறீஸ் பூதத்தின் பீதியுடனேயே மக்கள் நாட்களை நகர்த்தும் நிலையில் தமிழ் மக்கள் மீதான சிங்களத்தின் திட்டமிட்ட சூறையாடல் அரங்கேறிக்கொண்டே வருகின்றது.
அம்பாறைப் பகுதியில் விவசாயத்தை ஜீவனோபாயமாகக்கொண்டு வாழும் தமிழ் மக்கள், சிங்களப் பெரும் பான்மையினரால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்ற தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
அங்கு நெல் அறுவடைக்காச் செல்லும் தமிழ் விவசாயிகளை பெரும்பான்மை இனத்தவர்கள் அடித்து விரட்டுவதாக அம்பாறை விவசாயிகள் முறைப்பாடு தெரிவித்துள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பிரதேசங்களில் வேளாண்மைச் செய்கையில் ஈடுபடும் தமிழ் விவசாயிகளை வயல் நிலங்களுக்குள் கால்வைக்கக் கூடாது என மாவட்டதிலுள்ள பெரும்பான்மை சிங்களவர்கள் விரட்டுவதாக தமிழ் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
தற்போது அறுவடை நிலையிலுள்ள நெல்வயல்களை காட்டு மிருகங்களிடமிருந்து பாதுகாப்பதற்காகவும், அறுவடைக்காகவும் அப்பகுதிக்கு செல்லும் விவசாயிகளே இவ்வாறு மிரட்டி விரட்டப்படுகின்றனர் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை, சம்மாந்துறை, வளத்தாப்பிட்டி, கொண்டவெட்டவான் போன்ற பகுதிகளில் செய்கை பண்ணப்பட்டிருக்கும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்குச் சொந்தமான நெற்காணிக்கு செல்லும் விவசாயிகள் மற்றும் வேலையாட்களை இவர்கள் அச்சுறுத்தி மிரட்டுகின்றனர்.
'அம்பாறை மாவட்டம் சிங்களவர்களின் இடம் இங்கு உங்களுக்கு என்ன வேலையிருக்கின்றது. இப்பகுதிகளுக்கு நீங்கள் வரக்கூடாது" என எச்சரிக்கை விடுத்து இந்த அப்பாவி விவசாயிகளைத் திருப்பியனுப்புவதாகவும் அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக அப்பகுதியிலுள்ள காவல்துறையினரிடம் முறையிட்டபோதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.
அம்பாறை மாவட்டத்தில் தமிழர்க்குச் சொந்தமான நெற்காணிகள் மற்றும் குடியிருப்புக் காணிகளை பெரும்பான்மை சிங்களவர்கள், சிறீலங்காப்படையினர், காவல்துறையினர் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன்; அபகரிக்கும் செயற்பாடுகள் அண்மைக்காலமாக அதிகரித்துவருகின்றன.
இந்த   நில அபகரிப்புத் தொடர்பாக அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த சிறீலங்கா அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்பட்டுவரும் முஸ்லிம் அமைச்சர்களினால் கூட எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இதனால் இப்பகுதி தமிழ் மற்றும் முஸ்லிம் விவசாயிகள் மிகவும் உள ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
இந்நிலையில், யாழ். கொழும்புக்கு இடையில் போக்குவரத்தில் ஈடுபடுகின்ற பஸ்களின் தமிழ் சாரதிகளிடம் போக்குவரத்துப் பிரிவுப் பொலிஸார் கப்பம் பெறுகின்றதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுதொடர்பாக  பொலிஸ்மா அதிபர் என்.கே. இலங்ககோனிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ்.  கொழும்புக்கு இடையில் இரவு நேர சேவையில் ஈடுபடும் பஸ் சாரதிகளிடம் 100 ரூபா முதல் 200 ரூபா வரையில் போக்குவரத்துப் பிரிவுப் பொலிஸார் கப்பம் பெறுவதை நேரில் கண்ட ஊடகவியலாளர் ஒருவரே இந்த முறைப்பாட்டைச் செய்துள்ளார்.
சிலாபம், குருநாகல், மதவாச்சி, அநுராதபுரம் ஆகிய பகுதிகளில் கடமையில் ஈடுபடும் போக்கு வரத்துப் பிரிவு பொலிஸார் இவ்வாறு கப்பம் பெறுகின்றனர் என இந்த ஊடகவியலாளர் கூறியுள்ளார்.
பஸ் சாரதிகளுக்குத் தண்டப் பணம் விதிப்பதாக எச்சரிக்கும் பொலிஸார், தண்டப்பணம் விதிப்பதற்குப் பதிலாக சாரதிகளிடம் பணத்தை கையூட்டாகப் (இலஞ்சப் பணம்) பெறுகின்றனர் என ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக, ஒரு நாளுக்கு ஆயிரக் கணக்கான பணத்தை சாரதிகளிடம் இருந்து பொலி ஸார் பெற்று வருகின்றனர் எனக் கூறப்பட்டுள்ளது.
இதனை இவர்கள் வாடிக்கையாகச் செய்துவருகின்றனர். பல சாரதிகளிடமும் பணத்தை மிரட்டிக் கேட்கும் இவர்கள், பணம் தரமறுப்பவர்களை நீண்ட நேரத்திற்கு மறித்துவைத்து சோதனை என்ற பெயரில், பயணிகளை இறக்கிவிட்டு அவர்களை சோதனை மேல் சோதனைக்குட்படுத்துகின்றனர்.
இதனால், பயணிகளே இவர்கள் கேட்கும் பணத்தை தர முன்வருகின்றனர். சில சாரதிகள் இந்தச் சிரமத்திற்குப் பயந்து பணத்தை கொடுத்து வருகின்றனர்.
இந்தத் தகவல் வெளியில் தெரிந்தால் வாகனத்தை பறித்து விடுவோம் எனவும் பொலிஸார் மிரட்டியதாக, அண்மையில் அங்கு பயணம் செய்து திரும்பிய பயணி ஒருவர் விசனம் தெரி வித்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்த முறைப்பாடு பற்றி விசாரணை மேற்கொள்ளவுள்ளதாக வழமைபோன்று  பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.
கொடுப்பவர்கள் இருக்கும் வரை எடுப்பவர்கள் எடுத்துக்கொண்டே இருப்பார்கள். இதைத் தடுப்பவர்கள் முன்வந்தாலே கொடுப்பவர்கள் தடுப்பார்கள்.
புலம்பெயர் வாழ் எம் உறவுகளே இது சிந்திக்கும் நேரமல்ல செயற்படும் நேரம்!         வரும் (19.09.2011) திங்கட்கிழமை  ஜெனிவாவில் இடம்பெறும் மாபெரும் பொங்கு தமிழ் பேரணியில்   சிங்களத்தின் வன்கொடுமைகளுக்கு எதிராக நாம் ஒன்றுபட்டுக் குரல்கொடுப்போம் வாரீர்!  (சூறையாடல்கள் தொடரும்)

No comments: