வன்னிப் பகுதியில் சிங்களப் பேரினவாதத்தின் பொதுமக்கள் மீதான வன்கொடுமைகள் தொடர்கதையாகி வருகின்றது. இதை அங்கிருந்து வரும் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. அங்கு தமிழ் மக்கள் நாளாந்தம் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்துக் கொண்டே நாட்களை நகர்த்துகின்றனர்.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் வன்னிமண் இருந்த காலத்தில் ஒரு பெண் நள்ளிரவு வேளையில்கூட தன்னந்தனியே செல்லக் கூடியாதாக இருந்தமை உலகே அறிந்த உண்மை. ஆனால் இன்று சிங்களம் விடுதலைப் புலிகளிடமிருந்து மக்களை மீட்டுள்ளதாகக் கூறிவரும் நிலையில் அங்கு மக்கள் வீடுகளுக்குள்ளேயே நின்மதியாக உறங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வன்னியில் இரவுப் பொழுதென்பது மிகவும் அச்சமானதாகவே கழிகின்றது.
இந்நிலையில், கிளிநொச்சி இரணைமடுச் சந்திப்பகுதியில் மோசடியில் ஈடுபட்ட சிங்களவர்களைக் காப்பதற்காக அப்பகுதி மக்கள் மீது படையினர் தாக்குதல் நடத்திய சம்பவம் ஒன்று மக்களை அச்சமடைய வைத்துள்ளது.
கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை இரவு 8 மணியளவில் கிளிநொச்சி இரணைமடுப் பகுதியில் உள்ள மகேந்திரம் என்பவரது கடைக்கு வருகைதந்த 4 சிங்கள இளைஞர்கள் அங்கு சில பொருட்களை வாங்கிவிட்டு மீகுதிப் பணத்தினை பெற்றுக் கொண்ட பின்னரும் மிகுதிப்பணம் தரவில்லை என்று தகராறு புரிந்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த கடை உரிமையாளரின் தம்பி மேற்படி சிங்கள இளைஞர்களுக்கு சிங்கள மொழியில்மிகுதிப்பணம் தரப்பட்டுள்ளது. பிரச்சினை செய்யாமல் அங்கிருந்து விலகிச் செல்லுமாறு கூறியுள்ளார். இதனையடுத்து உரிமையாளரின் தம்பியை எந்தவிதமான காரணமும் இல்லாமல் 4 சிங்கள இளைஞர்களும் தாக்கத்தொடங்கியுள்ளனர்.
இவற்றை அவதானித்துக் கொண்டிருந்த அங்கிருந்த சிலர் மேற்படி சிங்கள இளைஞர்களைத்திருப்பித் தாக்கத் தொடங்கியவுடன், அங்கிருந்து தப்பிச் சென்ற சிங்கள இளைஞர்கள் அருகில் உள்ள படைமுகாம் ஒன்றில் தஞ்சம் புகுந்தனர். 20இற்குமேற்பட்ட படையினருடன் வந்து அங்கிருந்த இளைஞர்களையும், குடும்பஸ்தர்களையும் கண்மூடித்தனமாகத்தாக்கினர். இது மட்டுமல்லாமல் அயலில் உள்ள வீடுகளுக்குள்ளும் புகுந்த படையினர்; வீட்டில் இருந்தவர்களையும் வெளியில் இழுத்துப் பேட்டு காட்டுமிராண்டித் தனமாகத் தாக்கினர்கள்.
தாக்குதலைத் தாங்கிக் கொள்ள முடியாத மக்கள் படையினரை திருப்பித் தாக்கியுள்ளனர். அங்கு நிலைமைமோசமாகவே சம்பவ இடத்திற்கு வந்த இராணுவ காவல்துறையினர்
(மில்ரிப் பொலிஸ் ) இரு தரப்பினரையும் சமாதனப்படுத்த முயன்றபோதும் படையினர் கடுமையாகத் தாக்குதலைத் தொடர்ந்தனர்.
படையினரின் தாக்குதல் தொடர்பாக அப்பிரதேச வாசி ஒருவர் தெரிவிக்கையில், சீருடைகளுடனும் ஆயுதங்களுடனும்வந்த இராணுவத்தினர் கையில் கிடைப்பதை எல்லாம் பயன்படுத்தி தாக்குதல் நடத்தினர். இதனுள் அகப்பட்ட 16 வயதுச்சிறுவன் ஒருவனை வீதியில் போட்டு சப்பாத்துக் கால்களாலும் துப்பாக்கிப் பிடிகளாலும் மயக்கம் போட்டுவிழும் வரை தாக்கினர்.
இத் தாக்குதல் சம்பவத்தினைத் தொடர்ந்து படையினரின் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட அனைவரும் கைதுசெய்யப்பட்டு இரவு 11 மணியளவில் கடுமையாக எச்சரிக்கை செய்யப் பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வருகைதந்த இராணுவப் புலனாய்வினர், இச்சம்பவம் தொடர்பாக வெளியில் யாருக்கும் சொல்லக் கூடாது. குறிப்பாக ஊடகங்களுக்குத் தெரியப்படுத்தக் கூடாது என்று மிரட்டியுள்ளனர். இதுமட்டுமல்லாமல் தாக்குதலுக்கு இலக்கானவர்களைப் பார்த்து இராணுவத்திற்கு கைநீட்டும் அளவிற்கு உங்களுக்குபலம் வந்துவிட்டதா? நீங்கள் வீதியில் வைத்து சிங்களவனை அடிப்பீர்கள். நாங்கள் அதை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்போம் என்று நினைத்தீர்களா? இனிவரும் காலங்களில் இவ்வாறு நடந்தால் உங்கள் அனைவரையும்சுட்டுத் தள்ளிவிடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர் என படைப் புலனாய்வாளர்கள் எச்சரிக்கை விட்டுள்ளார்கள் இதனால் குறிப்பிட்ட பகுதி மக்கள் விரக்தியும் அச்சமும் அடைந்துள்ளார்கள்.
இந்நிலையில், கிளிநொச்சி வட்டக்கச்சிப் பகுதியில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்த 42 வயதுடைய உளநலம் குன்றிய பெண்ணொருவரை கடந்தவாரம் வியாழக்கிழமை இரவு அப்பகுதியைச் சேர்ந்த இருவர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ள கொடுமையான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதனால் குறித்த பெண் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட நிலையில் அயலவரின் உதவியுடன் உடனடியாகக் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இருவரைக் கிளிநொச்சிப் பொலிஸார் மறுநாள் வெள்ளிக்கிழமை அதிகாலை கைதுசெய்து, இருவரும் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் பெ.சிவகுமார் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டனர். அந்த இவரையும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, வன்னியில் கடத்தல் சம்பவங்களும் தற்போது மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.
முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் இளைஞர் ஒருவர் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை இரவு 7 மணியளவில் வாகனம் ஒன்றில் வந்த சில இனந்தெரியாத நபர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ள தாக பிரதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
முல்லைத்தீவு முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலயத்தடியினைச் சேர்ந்த கணேசமூர்த்தி ரதன் (வயது 23) என்ற இளைஞனே கடத்தப்பட்டவர் ஆவார்.
சம்பவ தினத்தன்று தனது வீட்டிற்கு ஆருகில் உள்ள ஆலயத்தடியினால் சென்று கொண்டிருந்த இளைஞனை வாகனத்தில் வந்த சிலர் வழிமறித்து உரையாடியுள்ளனர்.
பின்னர் வீட்டிற்குச் சென்று துவிச்சக்கர வண்டியை விட்டுவிட்டுவருமாறு கூறியுள்ளனர்.
அதன்படி வீட்டிற்குச் சென்ற இளைஞன் தான் கொண்டுசென்ற துவிச்சக்கர வண்டியை வீட்டில் விட்டுவிட்டுத திரும்பிச் செல்ல தயாரானபோது இளைஞனது தாயார் வாகனத்தில் உள்ளவர்கள் யார் என்று கேட்டுள்ளனர்.
அதற்கு அவ்விளைஞன் பேசுவதற்கு முன்னரே வாகனத்தில் இருந்தவர்கள் தாம் இராணுவப் புலனாய்வாளர்கள் என்று தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு அந்த இளைஞனை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளனர்.
பின்னர் மேற்படிச் சம்பவம் தொடர்பாக முள்ளியவளைப் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தற்போது அந்த இளைஞன் வவுனியா ஜோசப் முகாமில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வாகனத்தில் இளைஞன் கடத்திச் சென்றுள்ளமை குறித்து அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பதற்றம் நிலவிவருகின்றது.
இந்நிலையில், முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் காணாமல்போனவர் கடந்த வாரம் புதன்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை காணாமல்போன ஒட்டுசுட்டான் பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதுடைய சிவபாதம் உதயகுமார் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வீட்டில் இருந்து புறப்பட்ட இவரைக் காணாத நிலையில் உறவினர்கள் காவல்துறை நிலையத்தில் முறையிட்டுள்ளார்கள். இதனைத் தொடர்ந்து ஊரவர்கள் தேடுதல்களை மேற்கொண்டு பார்த்தபோது, ஒட்டிசுட்டான் கற்சிலைமடுக்குளத்தில் இவரது உடலம் மிதந்து கொண்டிருந்த நிலையில் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறான சம்பவங்கள் வன்னிப் பகுதியில் அதிகரித்துள்ளது. இதனைத் தடுப்பதற்கு தமிழ் மக்களுக்கு உரிய காவலர்கள்தான் முன்வரவேண்டும்.
புலம்பெயர் வாழ் எம் உறவுகளே எல்லாம் முடிந்துவிட்டது என்று கூறி எம்மையே நாம் ஏமாற்றுவதை நிறுத்தி சிங்களவனுக்கு எதிராக ஒருமித்து குரல் கொடுப்போம்!
இது சிந்திக்கும் நேரமல்ல நாம் ஒன்றாக செயற்படும் நேரம்!
(சூறையாடல்கள் தொடரும்)

No comments:
Post a Comment