Sunday, November 1, 2009

தமிழீழத்திற்கான பொதுமக்கள் வாக்கெடுப்பு எதற்காக?

தமிழ்மக்களின் நீண்ட கால அபிலாசைகளை சர்வதேசத்துக்கு தெரியப்படுத்தும் வகையிலும், அரசியல் ரீதியிலும், ஐனநாயகத்தேர்தலின் மூலமும் நிறைவேற்றிக்கொள்ளவும் என தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மேலும் தெரிவித்ததாவது,

வாக்களிக்கத் தகுதியுள்ளோர் யார்?
தமிழீழத்தைச் சேர்ந்த தமிழ்மக்களும், பிரெஞ்சுக்குடியிருமையும், வதிவிடவுரிமை, அகதிகள் அந்தஸ்து பெற்ற தமிழ்மக்கள் அனைவரும் வாக்களிக்கும் தகுதி பெற்றோராகும். கடவுச்சீட்டு, அடையாள அட்டை, பிறப்புச்சான்றிதழ் ஏதாவதொன்றின் மூலப்பிரதி காண்பித்தல் வேண்டும்.
எப்போது?
டிசெம்பர் 12 திகதி சனிக்கிழமை காலை 8.00 மணிமுதல் இரவு 20.00 மணிவரையும்
டிசெம்பர் 13 திகதி ஞாயிற்றுக்கிழமை 8.00 மணிமுதல் பி.பகல் 15.00 மணிவரையும்
இத் தேர்தல் நடைபெறப்போகும் இடம்
மாநில அதிகாரபீடத்திற்குட்பட்ட பிரதேசங்களிலும், வாக்குசாவடிகள் மாநகர ரீதியாகவும் வைக்கப்படும் ( பிரெஞ்சு நாட்டின் தேர்தல் நடைமுறைகளில் இடம் பெறும்) ஆம், இல்லை என்பதை தெரிவு செய்து தபால் உறையினுள் இட்டு அதற்குரிய பெட்டியில் இடுதல். (இதனுடைய பூரணமான விளக்கங்கள் பின்னர் அறியத்தரப்படும்)
அறிக்கை விடுபவர் ( தெரிவிப்பவர்) வாக்களிப்பவர் தெரிவிப்பது
இலங்கைத்தீவின் தமிழ்மக்களாகிய நாம் தனித்துவமான தேசியமும், பாரம்பரியதாயகமும், சுயநிர்ணய உரிமையும் கொண்டவர்கள் என்ற அடிப்படையில் இத் தீவின் வடக்கு கிழக்கு நிலப்பரப்பின் சுதந்திரமும், இறைமையும் கொண்ட தமிழீழ அரசு உருவாக வேண்டும் என நான் விரும்புகின்றேன்.

போர்க்குற்றம் தொடர்பாக சரத்பொன்சேகாவிடம் அமெரிக்கா விசாரணை

அமெரிக்காவிற்கு விஜயம் செய்துள்ள சிறீலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிடம் மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படக் கூடிய சாத்தியம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க உள்விவகாரத் திணைக்களத்தினருக்கும், சிறீலங்கா முன்னாள் இராணுவத் தளபதிக்கும் இடையில் எதிர்வரும் 4ஆம் திகதி சந்திப்பு நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்க "கிறீன்கார்ட்" பெற்றிருக்கும் சரத் பொன்சேகாவிடம் விசாரணை நடத்தப்பட வேண்டுமென அந்நாட்டு உள்விவகாரத் திணைக்களம் அறிவித்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
"கிறீன்கார்ட்" சலுகையை நீடித்துக் கொள்ளும் நோக்கில் சரத் பொன்சேகாவும், அவரது பாரியார் அனோமாவும் கடந்த 23 ஆம் திகதி அமெரிக்கா சென்றுள்ளனர். மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருந்தால் அமெரிக்க உள்விவகாரத் திணைக்களம் சட்ட நடவடிக்கை எடுக்கக் கூடும் என தெரிவிக்கப்படுகிறது.
"கிறீன் கார்ட்" , மற்றும் அமெரிக்க பிரஜைகள் அந்நாட்டு சட்டத் திணைக்களங்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய கடப்பாடுடையவர்கள் என சுட்டிக்காட்டப்படுகிறது. இதன்படி, அமெரிக்க உள்விவகாரத் திணைக்களம் நடத்தும் விசாரணைகளுக்கு சரத் பொன்சேகா கட்டுப்பட வேண்டியவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
வெள்ளைக் கொடியுடன் சரணடைய முயற்சித்த விடுதலைப் புலி உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ஜெனரல் சரத் பொன்சேகா கடந்த ஜூலை மாதம் 18ஆம் திகதி அம்பலாங்கொடையில் நடைபெற்ற விழாவொன்றில் குறிப்பிட்டுள்ளதாக அமெரிக்க காங்கிரசிற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Wednesday, October 28, 2009

தமிழீழம் தவிர்ந்த எந்தவொரு தீர்வையும் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளத் தயாரில்லை: ஜெயானந்தமூர்த்தி எம்.பி


தமிழீழம் தவிர்ந்த எந்தவொரு தீர்வையும் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளத் தயாரில்லை. என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகமொன்றுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே ஜெயானந்தமூர்த்தி இதனைத் தெரிவித்துள்ளார்.

தமிழீழத்திற்குக் குறைவான அல்லது தமிழ் மக்களை தாங்களே ஆளக்கூடிய தன்னாட்சித் தீர்வுக்குக் குறைவான தீர்வு எந்தவகையிலும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்யப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சமஸ்டித் தீர்வு பற்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பு தற்போது ஆராய்ந்து வருவது தொடர்பாக அவரிடம் கேட்டபோதே மேற்கண்டவாறு கூறியுள்ள ஜெயானந்தமூர்த்தி மேலும் தெரிவித்துள்ளதாவது:-
“தமிழ் தேசியக் கூட்டமைப்பில் நாங்கள் 22 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றோம். ஆனால் எங்களில் சமஸ்டித் தீர்வுக்கு எத்தனை பேர் உடன்படுவார்கள் என்பது கேள்விக் குறியான விடயம்.
இலங்கையில் சமஸ்டி முறையிலான தீர்வுத் திட்டத்தின் பிரகாரம் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்ற முடியாத காரணத்தினால் அல்லது அது தோல்வி கண்டதன் விளைவாகவே வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடித்தளமே தனித் தமிழமே ஆகும். இத்தனித் தமிழீழத்திற்கே மக்கள் அப்போது ஆணை வழங்கியிருந்தனர். இன்றும் அதில் உறுதியாக உள்ளனர்.
இதைவிடுத்து நாம் மக்களின் ஆணையை புறக்கணித்துவிட்டு குறைவான எந்தவொரு தீர்வுக்கோ அல்லது சமஸ்டி முறையிலான ஒற்றையாட்சி தீர்வுக்கோ இறங்கிச் செல்ல முடியாது.
தமிழீழக் கொள்கைக்காகவே எத்தனையோ போராளிகளும் பொதுமக்களும் தமது இன்னுயிரைத் தியாகம் செய்துள்ளனர்.
எனவே அவர்களின் தியாகத்தை எவரும் மறந்துவிட முடியாது. அவர்களின் அடிச்சுவட்டில் நின்று நாம் செயல்பட வேண்டும். அப்போதுதான் அவர்களின் கனவு நனவாகும்.” என்று தெரிவித்துள்ள ஜெயானந்தமூர்த்தி,
“நான் தவிர்க்க முடியாத காரணத்தினால் தற்போது ஐரோப்பிய நாடொன்றில் தங்கியுள்ள போதிலும் எமது கொள்கையில் இருந்து நான் மாறப்போவதுமில்லை. தமிழ் மக்களுக்கான அரசியல் வேலைத்திட்டங்களில் இருந்து விலகப்போவதுமில்லை.
தற்போதும் எனக்கு வாக்களித்த மக்களுடன் தொடர்பில் இருந்து கொண்டே இருக்கின்றேன். எமது தமிழீழத்திற்காக தாயகத்திற்காக தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டே வருகின்றேன்.
சந்தர்ப்பவாதத்திற்கு ஏற்ற வகையில் நாம் எமது கொள்கையை மாற்ற முடியாது. அதில் உறுதியுடன் இருக்க வேண்டும். இதுவே எனது சிந்தனை. தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தவன் என்ற வகையில் அதன் நோக்கத்திலும் அது எதற்காக உருவாக்கப்பட்டது என்ற கொள்கையில் இருந்தும் விலகிச் செல்ல முடியாது.
இன்று கூட்டமைப்பு பற்றி முடிவுகள் எடுக்க முனைபவர்கள் இதுபற்றி விளங்கிக் கொள்ள வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.

இலங்கை வந்துள்ள இந்திய இராணுவக் குழு: கோத்தபாய சந்திப்பு


இலங்கை வந்துள்ள உயர் கட்டளை கற்கைநெறியை பயிலும் இந்திய இராணுவ அதிகாரிகள் குழு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

கொழும்பில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
பிரிகேடியர் மொனி சன்டி தலைமையில் 14 அதிகாரிகள் அடங்கிய இந்தக் குழுவில் இந்தியாவின் இராணுவ மற்றும் விமானப்படை உயர் அதிகாரிகள் அடங்குகின்றனர்.

Tuesday, October 27, 2009

தமிழர்கள் எல்லோரும் புலியாக மாறும் காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறது: சீமான்


நாம் தமிழர் இயக்கம் ஆரம்பித்து தமிழகமெங்கும் கலந்தாய்வு கூட்டம், பொதுக்கூட்டம் நடத்திவருகின்றா சீமான், இன்று புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு கிராமத்தில் திலீபன் திடலில் பொதுக்கூட்டம் நடத்தினார்.
 சீமான் இக்கூட்டத்தில், ‘'பிரபாகரன் இறந்துவிட்டார் என்ற செய்தி வந்ததும் முதன் முதலில் பேருந்துகளை ஓடவிடாமல் தடுத்து நிறுத்திய மண் இந்த வடகாடு மண். அது மட்டுமல்ல, இது பாவாணன் உலவிய மண். இந்த மண்ணில் தம்பி சீமான் பேசுவதை பெருமையக நினக்கிறேன். சுதந்திர இந்தியாதான். ஆனால் நாம் சுதந்திரமாக இருக்கிறோமா? நம் இனம் சுதந்திரமாக இருக்கிறதா? இல்லையே.
 இது எப்போது மாறும். ஈழம் அவ்வளவுதானா. பிரபாகரன் செத்துட்டார் என்று சொல்வது உண்மைதானா என்று கும்பகோணத்தில் என்னிடத்தில் அழுதாள். நான் அவளிடம், கலங்காதே. ஈழக்கனவுகள் நிறைவேறும் என்று சொல்லிவிட்டு வந்தேன். ஆண்ட பரம்பரை மாண்டு கிடக்கிறதே. இதைப்பேசுவது தேச பிழையா. அமெரிக்காவில் கூட புலிகள் இயக்கத்தை பற்றி பேச உரிமை இருக்கிறது. அங்கே ஒரு கையில் புலிக்கொடியும் மறுகையில் பிரபாகரன் படமும் ஏந்தி போராட்டம் நடத்த முடிகிறது. ஆனால் இந்தியாவிலோ அது முடியவில்லை.
 இலங்கை சென்ற திருமாவளவனை பிரபாகரனுடன் இருந்திருந்தால் செத்திருப்பீர்கள் என்று மிரட்டியிருக்கிறான் ராஜபக்சே. இந்தியா, பாகிஸ்தான்.ஜப்பான் நாடுகள் உதவவில்லையென்றால் கொஞ்சம் யோசித்துப்பார் ராஜபக்சே நீ செத்திருப்பாய். நீ எங்களைப்பார்த்து மிரட்டுகிறாய். பிறந்து வளர்ந்த பூமியில் வாழ விடுங்கள் என்று சொல்லுகிறோம். தமிழர்கள் எல்லோரும் புலியாக மாறும் காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறது. பூச்சாண்டி காட்டாதீர்கள் எங்கள் ஈழக்கனவு நிறைவேறும் காலம் கனிந்துகொண்டிருக்கிறது''என்று பேசினார்.
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு கிராமத்தில் திலீபன் திடலில் பொதுக்கூட்டம் நடத்திய போது சீமான் இக்கூட்டத்திற்கு தலைமையேற்று எழுச்சி உரையாற்றினார்.

 இக்கூட்டத்திற்கு முன்னதாக சீமான் தமிழக வாரஇதழ் செய்தியாளரை சந்தித்தார். இச்சந்திப்பின் போது அவர், ‘'அரசியல் இயக்கமாக மாற்றும் நோக்கில்தான் நாம் தமிழர் இயக்கத்தை ஆரம்பித்து செயப்பட்டு வருகிறோம்.
 2011ல் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டோம். 2014ல் வரும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவோம். இயக்கத்தை பலப்படுத்துவதே முதல் நோக்கம். அது சட்டமன்ற தேர்தலுக்குள் முடியாது என்பதால்தான் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளோம்.
 நாங்கள் தேர்தலில் போட்டியிட முடிவு செய்தது இரண்டு காரணங்களுக்காக. ஒன்று காங்கிரசை தோல்வியடையச்செய்ய வேண்டும். இரண்டாவது , தமிழனை தனித்து பிரிக்க வேண்டும். இதனால்தான் கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளோம். இந்த தேர்தலின் மூலம் தமிழன் இருக்கிறானா? இல்லையா? என்பது தெரிந்து விடும்'' என்று சீமான் தெரிவித்தார்.

பிரான்சில் தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் வட்டுக்கோட்டை தீர்மானத் தேர்தல்

புலம்பெயர் வாழ் தமிழ் மக்களின் தாயகம் நோக்கி இன்றைய நிலைப்பாட்டை அறிந்து கொள்ள ஆவலாக இருப்பதையும் அதனுடைய ஒரு களமாகவே எதிர்வரும் 12, 13 திகதிகளில் தமிழர் அமைப்புக்களால் புலம்பெயர்ந்த நாடுகளில் நடாத்தப்படவிருக்கும் வட்டுக்கோட்டை தேர்தல் அமையப்போகின்றது. இது தொடர்பில் பிரான்சு தமிழர் பேரவை விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-

 அன்பான தமிழீழ மக்களே!
ஈழத்தமிழினம் தான் இழந்ந உரிமையை மீண்டும் பெற்றிட பல அறவழிப் போராட்டங்களை நடாத்திய போது அப்போராட்டங்கள் யாவும் ஆளும் கட்சிகளால் ஆயுதம் கொண்டு அடக்கப்பட்டதும் பல உயிர்கள் எடுக்கப்படுவதும் வழமையான வாழ்வாகி தமிழர்களுக்கு போனதால் தமிழீழத் தந்தை அமரர் எஸ்.ஜே. வி.செல்வாநாயகம் அவர்கள் 1976ல் தமிழீழ மக்கள் சுதந்திரமும், சந்தேசமாகவும் வாழவேண்டுமாயின் அது நாங்கள் இழந்து போன இறைமைகொண்ட சுதந்திர தமிழீழத்தை மீண்டும் பெற்றெடுப்பதே என்று அறுதியும் இறுதியுமாக எடுத்துரைத்தது மட்டுமல்லாது அதனை ஆதரித்து அதற்காக அங்கீகாரத்தை 1977 ல் வட்டுக்கோட்டை என்னும் பிரதேசத்தில் ஐனநாயகத் தேர்தல் மூலம் தமிழ் மக்கள் நிரூபித்து காட்டியிருந்தனர்.
 அதனை ஏற்றுக் கொள்ளாத சிங்கள இனவாத அரசுகள் தமிழ் மக்களின் அபிலாசைகளை புறம் தள்ளி திட்டமிட்ட இனக்கலவரங்களை உருவாக்கி, தமிழ் மக்கள் தொடர்ந்து உயிர், உடமை, நிலம் பறிப்பு, கைதுகள், படுகொலைகள், காணாமல் போதல் போன்ற தமிழருக்கெதிரான நடவடிக்கையில் இறங்கியதால் தமிழ் மக்கள் தமது உயிர் வாழ்விற்காக ஆயுதம் ஏந்தி போராட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர் என்பதே உண்மையானதாகும். இந்த போராட்டம் பல்லாயிரக்கணக்கான இளைஞர், யுவதிகளின், மக்களின் உயிர் அர்ப்பணிப்பினால் தமிழீழ மக்களுக்கு உலகில் ஒரு உயர்வான நிலைக்கு இட்டுச்சென்றதோடு நீறு பூத்த நெருப்பாக இருந்து கொண்டிருக்கும் எமது உரிமை போராட்டம் உலகத்தின் இன்றைய விருப்பான சமாதான அரசியல் மூலம் குறிக்கோளை அடையலாம் என்பதால் அந்த அற்புதமான தியாகப் போராட்டம் மௌனித்து நிற்கின்றது என்பதே உண்மை.
அதே நேரத்தில் எமது மக்களின் இன்றைய அபிலாசைகளையும், 1977ல் தமிழ் மக்கள் கொடுத்த அங்கீகாரத்தையும் 32 வருடங்களின் பின் ஈழத் தமிழ் மக்களின் நிலைப்பாட்டை நாடி பிடித்து பார்க்கும் செயலில் சர்வதேசம் நாட்டம் கொண்டுள்ளதையும் புரிந்து கொள்வோம். அன்பார்ந்த தமிழீழ மக்களே! சர்வதேசம் இன்று ஈழத்தமிழ் மக்களின் நியாயமான எதிர்பார்ப்பை விரும்பியோ அன்றில் விரும்பாமலோ ஒரு தீர்வை அவர்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று நினைக்கின்றது. அதற்கு காரணம் இனவெறி பிடித்த சிங்கள அரசுகள் தமிழ் மக்களுக்கு 60 வருடங்களுக்கு மேலாக கொடுமைகள் இழைத்த போதும், அவர்களின் வாழ்விடங்கள் திட்டமிட்ட ரீதியில் பறிக்கப்பட்டபோதும், உள்நாட்டுப் பிரச்சனை எனக் கூறிக்கொண்டு தமிழ் மக்கள் கைதுகளும், காணாமல் போதல், படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட போதும், தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் படிப்படியாக உச்சமடைந்து மக்கள் போராட்டமாக பரிணமித்து சிங்கள தேசத்திற்கு சரிநிகராக தமிழ் மக்கள் உயர்வடைந்து நின்ற போதும், அதனை அடக்குவதற்கு இந்திய அரசு அமைதிப்படை என்ற பெயரில் எமது மண்ணையும், மக்களையும் தாங்கொணா துன்பப்படுத்திய போதும் எமது இனப்பிரச்சனையின் தீர்வுக்கு மூன்றாம் தரப்பாக உலக நாடுகள் உதவிட வேண்டும் என்ற எங்கள் தேசிய ஆன்மா கொள்கைப் பிரகடன உரை நிகழ்த்திய போதும்,
சர்வதேசம் வரை கொண்டு செல்லப்பட்ட தமிழ் மக்களின் நியாயமான போராட்டம் இலங்கை அரசினால் புறம்தள்ளப்பட்டு மீண்டும் போராடவேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர் என்பதை தெரிந்து கொண்ட போதும், உலகம் முழுவதும் ஓடிச்சென்று வகை தொகையின்றி ஆயுதங்களை கொள்வனவு செய்த போதும், உலகத்திற்கு பயங்கரமான நாடுகள் என்ற நாடுகளுடன் நட்பையும் இராணுவ உதவிகளையும் பெற்றுக்கொண்ட போதும், தடைசெய்யப்பட்ட குண்டுகளை வாங்கி குவித்த போதும்,பயங்கரவாதத்துக்கெதிரான போர் எனக்கூறிக்கொண்டு எமது மக்களை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட இனஅழிப்பை தொடங்கி சொல்ல முடியாத துன்பங்களை எம்மக்களுக்கு ஏற்படுத்திய போதும், கொத்துக் கொத்தாக எம்மவர்கள் கொன்று குவிக்கப்பட்ட போதும், இன்று முகாம் என்ற பெயரில் முட்கம்பி வேலிகளுக்குள் அடைத்து வைக்கப்பட்டு பழிவாங்கல் செய்யப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டு தினம் தினம் கொன்றொழித்து வருவதை ஆதார பூர்வமாக சர்வதேச ஊடகங்கள் தெரியப்படுத்த போதும் வேடிக்கை பார்த்த,
 பார்த்து வரும் சர்வதேசம் தனது மனசாட்சிக்கு விடைகாணும் ஒரு முயற்சியாக புலம்பெயர் வாழ் தமிழ் மக்களின் தாயகம் நோக்கி இன்றைய நிலைப்பாட்டை அறிந்து கொள்ள ஆவலாக இருப்பதையும் நாம் புரிந்து கொள்வோம். அதனுடைய ஒரு களமாகவே எதிர்வரும் 12, 13 திகதிகளில் தமிழர் அமைப்புக்களால் புலம்பெயர்ந்த நாடுகளில் நடாத்தப்படவிருக்கும் வட்டுக்கோட்டை தேர்தல் அமையப் போகின்றது. அன்பான பிரான்சு வாழ் தமிழீழ மக்களே! நாம் இழந்தவைகள் கொஞ்சம் நஞ்சமல்ல! அதை உங்களுக்கு மீண்டும் தெரியப்படுத்தும் காலமும் இதுவல்ல! நீங்கள் ஒன்றும் தேசப்பற்று இல்லாத தமிழரும் அல்ல! இத்தேர்தலில் நாம் அளிக்கப்போகும் வாக்குகள் எமது தமிழ் மக்களின் தலைவிதியை கூட தீர்மானிக்கப்போகும் ஒரு பெரும் சக்தியாகக்கூட இருக்கலாம்! பற்பல அற்புதமான தியாகங்களை புரிந்தவொரு இனத்தில் இருந்து தோன்றியவர்கள் நாம்.
 இன்று ஒரு மணி நேரம் செய்யப்போகும் ஒரு தியாகம் எம்மை மண்ணுக்காக, எம்மை நம்பி மானம் காத்து மண்ணில் சாய்ந்த மாவீரர்களுக்காகவும், முட்கம்பி வேலிகளுக்கு துன்பமே வாழ்வாகி வாழும் எம்மக்களுக்காகவும், எதிர்கால வாழ்வே இனி என்ன என்று தெரியாமல் இருக்கும் எங்கள் மண்ணின் விலைபேச முடியாத வீர, வீராங்கனைகளின் வாழ்வில் எதிர்பார்த்த கனவை நனவாக்கும் என நம்புவோம், புறப்படுவோம்!, செயற்படுவோம்! வாக்களிப்போம்! மற்றவர்களையும் உரிமையுடன் வாக்களிக்க வைப்போம்! காலம்: டிசெம்பர் 12, 13, சனி, ஞாயிறு காலை 10.00 மணிமுதல் பிற்பகல் 16.00 மணிவரை இத்தேர்தலில் வாக்களிக்கும் தகுதி கொண்டவர் 18 வயதிற்கு மேற்பட்ட தமிழீழத்தை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும். இந்நபர் தான் வசிக்கும் (Residence) இடத்தில் உள்ள அல்லது அதற்கு அருகில் உள்ள இடத்திற்கு சென்று வாக்களிக்கலாம்.
மேலதிக விபரங்களுக்கும், தொடர்புகளுக்கு
mail: mte.france@gmail.com
தொலை பேசி இல : 06 15 88 42 21
டிசெம்பர் 12,13, 2009 தேர்தல்
ஏற்பாட்டுக்குழு
தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு

Saturday, October 24, 2009

சுவிஸ் பேர்ண் பாராளுமன்றம் முன்பாக மீண்டும் ‘உண்மைக்காய் எழுவோம்’ ஒன்றுகூடல்

[ சனிக்கிழமை, 24 ஒக்ரோபர் 2009 ]
சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பினரால் 24.10.09 சனிக்கிழமை பேர்ன் பாராளுமன்றத்திற்கு முன்பாக உண்மைக்காய் எழுவோம் எனும் எழுச்சி ஒன்றுகூடல் முன்னெடுக்கப்பட்டிருந்தது. 2’500ற்கும் மேற்ப்பட்ட மக்கள் எழுச்சியோடு கலந்து கொண்டு ஈழவிடுதலைக்காக குரல்கொடுத்தனர்.
  மாலை 16.00 மணிக்கு பொதுச் சுடறேற்றலுடன் ஒன்றுகூடல் ஆரம்பமானது. தமிழீழத் தேசிய கீதம் இசைக்கப்பட்டு தேசிய கொடி ஏற்றப்பட்டு சுவிஸ் நாட்டின் தேசியக்கொடியும் ஏற்றப்பட்டு ஈகைச்சுடறேற்றலுடன் உரைகள் ஆரம்பமாகின.
 இளையோர்களால் டொச் பிரெஞ் இத்தாலி போன்ற மொழிகளில் தற்போதைய தமிழரின் அவல நிலைகுறித்து மக்களுக்கு பேச்சுகள் ஊடாகவம் துண்டுப்பிரசுரம் ஊடாகவும் எடுத்துக் கூறப்பட்டது. அதனைத் தவிர சர்வதேச மனித உரிமை மையத்தின் உபபொறுப்பாளரும் மனிதவுரிமைவாதியும் இனவொற்றுமை மையத்தின் தொடக்கப்பணிக்கு முக்கிய பங்கு வகித்தவரும் மற்றும் பொதுவடமை ஆவலருமான ஆழnமை ளுஉhடäபநட அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றியிருந்தார்.
 சமகால தாயக நிலவரம் மற்றும் தமிழ்மக்கள் எதிர்கொள்ளும் மனித அவலங்களை விளக்கி சுவிஸ் அரசாங்கத்திற்கு இளையோர்களால் மனுவொன்றும் வெள்ளிக்கிழமையன்று கையளிக்கப்பட்டிருந்தது.
 இளையோர்கள் பெருந்திரளாக கலந்துகொண்ட இந்நிகழ்வில் 2’500ற்கும் மேற்பட்ட சுவிஸ்வாழ் தமிழ் மக்கள் பங்கேற்றிருந்தனர். தமிழீழம் விடுவிக்கப்பட்டு தமிழ்மக்களின் அரசியல் உரிமைகள் உலகினால் அங்கீகரிக்கப்படும்வரை தொடர்ந்து போராடுவோம் என்றமுழக்கம் அரங்கில் மேலோங்கிநின்றது. மக்கள் மிகவும் எழுச்சியுடன் தேசியத்தலைவரின் புகைப்படங்கள் மற்றும் தேசியக்கொடிகளைத் தாங்கியவாறு காணப்பட்டனர். அத்தோடு தாயத்தில் நடந்தேறிய இனப்படுகொலைகளை சித்தரிக்கின்ற பாதாதைகள் மற்றும் முட்கம்பி வேலிக்குள் அடைபட்டுக்கிடக்கும் தமிழ் மக்களின் அவலங்களை சித்தரிக்கின்ற படங்கள் மற்றும் பாததைகளையும் தாங்கிநின்றனர்.
 இறுதியாக இளையோர்களால் இன்றைய நிகழ்வின் பிரகடணம் வாசிக்கப்பட்டு கொடி இறக்கலுடன் நிகழ்ச்சி நிறைவுபெற்றது.

பாரிசில், நாதன், கஜன் நினைவு வணக்க நிகழ்வு

தமிழீழத் தேச விடுதலைக்காக புலம் பெயர் நாடுகளில் உழைத்து வீரகாவியமாகிய லெப்.கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகிய மாவீரர்களின்13ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஒழுங்கமைப்பில் பிரான்சில் நடைபெறவிருக்கிறது.

காலம் 26.10.2009 திங்கட்கிழமை
நேரம் காலை 10.00மணி
இடம்: Cemitry - Aubervilliers quatre chemins.

Friday, October 23, 2009

விழ விழ எழுவோம் உணர்ச்சிமிக்க ஆவணத் திரைப்படம்


விழ விழ எழுவோம் என்னும் ஆவணத் திரைப்படம்(30 நிமிடம்) மறுமலர்ச்சிப் பாசறையினரால் வெளியிடப்பட்டுள்ளது. மிகச் சுருக்கமாக தமிழன் வரலாற்றைக் கூறி, முள்ளிவாய்க்கல் அவலங்களைச் சித்தரித்து, பின்னர் இனி என்ன செய்யப்போகிறோம் என்றதை தெளிவுபடுத்தியுள்ள இந்த காணொளி பார்ப்பவர்களை கண் கலங்கவைக்கிறது, "விழ விழ எழுவோம் நாம் விழ விழ எழுவோம் ஒன்று விழ நாம் ஒன்பதாய் எழுவோம்" என்ற பாடல் வரிகள் உணர்ச்சிமிக்கதாக அமைந்துள்ளது.


இந்த 30 நிமிட ஆவணப்படம் விரைவில் பிரித்தானியாவில் வெளியிட இருப்பதாக அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். ஏனைய ஜரோப்பிய நாடுகளிலும் தமது சொந்த நகரங்களிலும் இதனை வெளியிட விரும்புவோர் கீழ் காணும் இலக்கத்துடன் தொடர்புகொள்ளவும். கருதரங்குடன் கூடிய ஒரு விவரண படமாக இதை நீங்கள் உங்கள் நகரங்களில் வெளியிட்டு, தமிழீழ மக்களின் கருத்துக்களை வெளிக்கொண்டுவரலாம். உங்கள் நகரங்களில் இப்படத்தை வெளியிட

தொடர்புகளுக்கு:00445601567481

இந்த CD ஜ பெற்றுக்கொள்ள athirvu@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு உங்கள் முகவரியை அனுப்பிவையுங்கள்

வணங்காமண்' நிவாரண பொருள்கள் சென்று சேர்வதில் தொடர்கிறது சிக்கல் : செஞ்சிலுவை சங்கம் 'திடீர்' பல்டி



 இலங்கைத் தமிழர்களுக்காக, "வணங்காமண்' கப்பலில் வந்த நிவாரணப் பொருள்களை, கொழும்பு துறைமுகத்தில் இருந்து எடுத்த, இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், அவற்றை மீண்டும் இலங்கை அரசிடம் ஒப்படைத்துள்ளது. இலங்கை அரசின் மூலமே அந்த நிவாரணப் பொருள்கள் வினியோகிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இலங்கைத் தமிழர்களுக்கு உதவுவதற்காக ஐரோப்பிய நாடுகளில் இருந்து திரட்டப்பட்ட நிவாரணப் பொருள்கள் ஐந்து மாத அலைகழிப்புக்குப் பிறகு, கடந்த 21ம் தேதியன்று இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த பொருள்களை பெற்றுக் கொண்ட செஞ்சிலுவைச் சங்கம் அவற்றை முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களிடம் ஒப்படைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால், இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக, நிவாரணப் பொருள்களை இலங்கை அரசிடம் ஒப்படைப்பதாகவும், இலங்கை அரசு மூலம் அவை தமிழர்களுக்கு வினியோகிக்கப்படும் என, இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்துள்ளது. இந்த மாற்றத்திற்கான காரணத்தை செஞ்சிலுவைச் சங்கம் தெரிவிக்கவில்லை."வணங்காமண்' கப்பலில் ஏற்றிவரப்பட்ட மருந்து, உணவுப்பொருள், உடை உள்ளிட்ட நிவாரணப் பொருள்கள் தமிழர்களுக்கு சென்று சேரவிடாமல் ஐந்து மாதங்களாக அலைகழித்த, இலங்கை அரசிடமே தற்போது இந்த பொருள்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்த பொருள்களை இலங்கை அரசு முறையாக வினியோகிக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

 இது குறித்து, "மனிதம்' தொண்டு நிறுவன செயல் இயக்குனர் அக்னி சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கை: ஐரோப்பிய மக்களால் கொடுக்கப்பட்ட நிவாரணப் பொருள்கள் தமிழர்களை சென்று சேரக்கூடாது என்ற நோக்கில் இலங்கை அரசு செயல்பட்டது. இப்போது எந்த முறையான காரணமும் சொல்லாமல் செஞ்சிலுவைச் சங்கம், இலங்கை அரசிடம் ஒப்படைத்துள்ளது. அவை முறையாக தமிழர்களை சென்று சேராது.நிவாரணப் பொருள்கள் வீணாகுமானால் அதற்கான பொறுப்பை இலங்கை செஞ்சிலுவைச் சங்கமே ஏற்க வேண்டும். இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் இந்த நிவாரணப் பொருள்கள் இலங்கைத் தமிழர்களுக்கு சென்று சேர குரல் கொடுக்க வேண்டும்.இவ்வாறு சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

லண்டனில் நடைபெறவிருக்கும் தமிழ்ச்செல்வன் உட்பட ஆறு போராளிகளினதும் நினைவு வணக்க நிகழ்வு



வரும் 31-10-2009 சனிக்கிழமை அன்று லண்டனில் நடைபெறவிருக்கும் தமிழ்ச்செல்வன் உட்பட ஆறு போராளிகளினதும் நினைவு வணக்க நிகழ்வில் அனைத்து பிரித்தானியா வாழ் மக்களையும் வந்து கலந்து கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.
அத்தோடு அந்த நிகழ்வை சிறப்பிக்க அனைத்து மக்களிடமுமிருந்து ஆக்கபூர்வமான ஒத்துளைப்புகளையும் நாடி நிற்கிறோம். அதில் முதன்மையாக எழுச்சிக் கவிதைகள், நடனம் (தமிழ்த்தேசிய எழுச்சி சார்ந்து) போன்ற ஆக்கங்களை முன் கூட்டியே ( 28-10-2009 முன்) எமக்கு அனுப்பிவைத்தால் அதனை நிகழ்வு ஏற்பாட்டாளர்களின் பரிசீலனைக்கமைய அந்த நிகழ்வில் சேர்த்துக்கொள்ளலாம் என்பதையும் அறியத்தருகிறோம். தேசிய விடுதலைப் போராட்டத்தில் தம் உயிர்களை ஈந்த இந்த மாவீரர்களின் புனித நிகழ்வில் தேசவிடுதலையை நெஞ்சில் சுமந்தவர்களாய் அனைவரும் ஒன்றுபட்டு நிற்போமாக... CAMPAIGN FOR TRUTH AND JUSTICE DATE:31st. Oct. @5:00pm (saturday) Place : TRINITY CENTER, EAST AVENUE, EAST HAM, E12 6SG. UNDERGROUND: EASTHAM (district line)