சிங்களத்தின் தமிழ் மக்கள் மீதான அத்து மீறல்கள் தொரடர்ந்து உச்சம் பெற்றுவரும் நிலையில், மன்னார் மாவட்டத்தில் தற்போது பரவலாக சிங்கள ஆக்கிரமிப்பு முனைப்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மன்னார் மாவட்டத்தில் ஏற்கெனவே திட்டமிடப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள் நிறுவப்பட்டுள்ள நிலையில் அங்கு தமிழர் பகுதிகளில் காடழிப்பு மும்முரமாக இ;டம்பெற்றுவருகின்றன. இவ்வாறு அழிக்கப்படும் காணிகளில் சிங்களவர்கள் குடியமர்த்தப்படும் அதேவேளை, அழிக்கப்படும் மரங்கள் இரவோடு இரவாக வேறு இடங்களுக்கு குறிப்பாகத் தென் பகுதிக்கு கடத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இச்செயற்பாடுகளுக்கு அடர்ந்தகாட்டுப் பகுதியின் நடுவே புதிதாக வீதி ஒன்று அமைக்கப்பட்டுள்ள அதிர்ச்சித் தகவலும் வெளியாகியுள்ளது. இது தமிழர் சொத்துக்களைச் சூறையாடித் தென்பகுதிக்குக் கடத்துவதற்கு அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
21,000 ஹெக்டேயர் நிலப்பரப்பைக் கொண்ட மன்னார் மடு வனப்பகுதியில் மேற்கொள்ளப் பட்டுவந்த சட்டவிரோத மரக்கடத்தலுக்கெனவே இந்த வீதி புதிதாக அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக வவுனியா மாவட்ட செயலக அதிகாரிகள் மற்றும் மடு தேவாலயத்தின் மதகுரு ஆகியோர் சென்று ஆராய்ந்துள்ளனர்.
மடு வனத்தின் நடுப்பகுதியில் இதற்கு முன்னர் வீதி ஒன்று அமைக்கப்பட்டிருக்கவில்லை எனவும் புதிதாக வீதி ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் அது 60 அடி அகலத்தில் காணப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 28ம் திகதி குறித்த வீதியை அமைத்துக் கொண்டிருந்த நால்வர் கைது செய்யப்பட்ட தோடு அதற்கென பயன்படுத்தப்பட்ட பெக்கோ இயந்திரம் மற்றும் டிரக் வண்டி என்பவற்றை வனவள அதிகாரிகள் கைப்பற்றியிருந்ததாகவும் முன்னர் செய்திகள் வெளியாகியிருந்தன.
ஆயினும் படையினர் வன்னிப் பெருநிலப்பரப்பை முற்றாக ஆக்கிரமித்து நிலைகொண்டுள்ள நிலையில், இராணுவத்தினரின் பிரசன்னமின்றி இச்செயற்பாடு நிகழ்ந்துள்ளது என்று கூறமுடியாது.
படையினரின் ஒத்துழைப்புடனேயே இந்தி நிலச் சுரண்டல் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், மன்னார் கடல்படுகையில் எண்ணெய் அகழ்வுக்கான பணிகள் இந்திய நிறுவனத்தால் கடந்த சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ புத்தளத்தில் வைத்து பகிரங்கமாக ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.
இந்த முயற்சியில் வெற்றி பெற்றால், எரிபொருள்களுக்காக மற்றைய நாடுகளில் தங்கியிருக்க வேண்டிய நிலை இலங்கைக்கு ஏற்படாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மன்னார் கடல்படுகையில் எண்ணெய்ப் படிவுகள் இருப்பதாக பூர்வாங்க ஆய்வுகள் உறுதிப்படுத்தி உள்ளன.
எனினும் ஆழ்கடலில் துளையிட்டு மேலதிக ஆய்வுகளை மேற்கொள்ளும் போது போதிய எண்ணெய்ப் படிவுகள் கிடைக்காமலும் போகலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மன்னார்ப் படுகையில் நேற்றுத் தோண்ட ஆரம்பிக்கப்பட்ட இடத்தில் எண்ணெய்ப் படிவுகள் கிடைத்தால், அதிலிருந்து வர்த்தக ரீதியான மசகு எண்ணெய்யை எடுப்பதற்கு இன்னும் மூன்று ஆண்டுகள் செல்லும். 2014ஆம் ஆண்டில் ஒரு பில்லியன் பரல் எண்ணெய்யைப் பெறமுடியும்.
மன்னார் படுகையில் எண்ணெய் தோண்டுவதற்கான அனுமதி இந்திய நிறுவனம் ஒன்றுக்கும் சீன நிறுவனம் ஒன்றுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் எண்ணெய் நிறுவனமான காஸ்போமும் அங்கு அகழ்வில் ஈடுபடுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு தமிழ் ஈழத்தின் பகுதிகள் ஒவ்வொன்றாய் வெளிநாட்டு நிறுவனங்களிடம் சிறிலங்கா இனவாத அரசினால் தரைவார்க்கப்பட்டு வருகின்றன.
நாம் முன்னர் இப்பகுதியில் மன்னார் கடல் பகுதி வெளிநாடுகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதான செய்திகளை முன்னர் குற்றிப்பிட்டிருந்தமை தெரிந்ததே.
இதேவேளை, மன்னார் மாவட்டத்தில் யுத்தத்துக்குப் பின்னர் மாணவர்களின் கல்வி நிலையில், பெரும் வீழ்ச்சி காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதனால் மாணவர்கள் பாடசாலைக் கல்வியை விட்டு இடைவிலகி வருகின்றனர்.
மன்னார் மாவட்டத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் பாடசாலைகளிலிருந்து 784 சிறுவர்கள் இடைவிலகியுள்ளமை தொடர்பில் மன்னாரிலுள்ள நன்னடத்தைப் பிரிவு மேற்கொண்ட ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் மன்னார் மாவட்ட உளசமூக இணைப்பாளர் நிக்கலஸ் அன்ரனி லோறன்ஸ் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
16 வயது முதல் 18 வயது வரையான சிறுவர்களே பாடசாலைகளிலிருந்து இடைவிலகியுள்ள தாகவும் அவர் கூறினார்.
இந்த சிறுவர்கள் பாடசாலைகளை விட்டு இடைவிலகி நீண்டகாலமாகியுள்ளதால்; அவர்களை மீண்டும் பாடசாலையில் சேர்த்துக்கொள்ள முடியாதுள்ளது. இவ்வாறானவர்களுக்கு சுயதொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அல்லது தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வதற்கான ஆலோசனைகளும் வழிகாட்டல்களும் மன்னார் சிறுவர் தொடர்பாக பணியாற்றும் அலுவலர்களால் வழங்கப்பட்டு வருகின்றன.
வறுமை, பெற்றோர்களின் கவனயீனம், கல்வி கற்பதில் நாட்டமின்மை போன்ற காரணங்களால் இந்த சிறுவர்கள் பாடசாலைகளை விட்டு இடைவிலகியுள்ளதாக ஆய்வுத் தகவல்கள் மூலம் தெரியவருகின்றது.
இந்நிலையில் , மன்னார் மாவட்டத்தில் தற்போது சிறுவர் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகரித்துக் காணப்படுவதாகவும் கடந்த ஜனவரி மாதம் முதல் ஜுலை மாதம் வரையான காலப்பகுதியில் 12 சிறுவர் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்களும் ஒரு பாலியல் வல்லுறவு முயற்சியும் இடம்பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை வட்டாரத்.தகவல்கள் தெரிவிக்கின்றன.
15 வயதிற்குபட்ட 11 சிறுமிகளும் ஒரு சிறுவனும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ள தாகவும் இந்த பாலியல் துஷ்பிரயோகங்கள் அவர்களது உறவினர்களாலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளதென்றும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாலியல் துஷ்பிரயோகங்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையானது பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள் மற்றும் சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்களுடன் இணைந்து ஈடுபட்டு வருகின்றது.
இந்நிலையில், மன்னாரில் இராணுத்தினர் குடும்பப்பதிவுகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் மன்னார் மக்களிடையே அச்சநிலை ஏற்பட்டுள்ளது. சிங்கள மொழி மூலமான படிவங்களை வீடு வீடாகக் கொண்டு செல்லும் இராணுவத்தினர் குடும்ப விபரங்களை பதிவு செய்வதோடு வீட்டில் வேறு யாராவது இருக்கின்றார்களா? என்பதனையும் கேட்டறிந்து வருகின்றனர்.
குறித்த இராணுவத்தினர் சிங்கள மொழியில் கதைப்பதனால் மக்கள் செய்வதறியாது தவிக்கின்றனர். பொலிஸாரோ அல்லது கிராம அலுவலகர்களோ இல்லாமல் இ;ராணுவத்தினர் மட்டும் குடும்பப்பதிவினை மேற்கொண்டு வருகின்றமை மேலும் மக்களை அச்சத்திற்குள்ளாக்கியுள்ளது.
'பதிவுகள் அணைத்தும் சிங்களத்தில் காணப்படுவதினால் எந்த விடையத்தை பதிவு செய்கின்றார்கள் என்பது தெரியவில்லை. இறுதியில் குடும்பத் தலைவர்களிடம் கையொப்பத்தினையும் பெற்றுக் கொள்ளுகின்றனர.; ஏன்? எதற்கு? இந்த பதிவுகள் என்ற விடயம் எமக்குத் தெரியவில்லை. மன்னார் மாவட்டத்தில் சிவில் நிர்வாகத்தில் அதிகளவில் இராணுவத்தினரே தலையிட்டு வருகின்றனர்" என குடும்பத்தலைவர் ஒருவர் அச்சத்துடன் தெரிவித்தார்.
இவையெல்லாம் ஏன்? எதற்கு? புலம் பெயர் உறவுகளே சிந்தியுங்கள்! செயற்படுங்கள்!!
(சூறையாடல்கள் தொடரும்)
No comments:
Post a Comment