இதனால் தமிழ் மக்கள் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். இது வரை இராணுவத்தினரின் பிடியில் இருந்துகொண்டு பல கொலை, கொள்ளை, கடத்தல் போன்ற சூறையாடல்களை எதிர்கொண்டிருந்த மக்கள் தற்போது அவற்றுடன் புதிய பிரச்சினை ஒன்றுக்கும் முகம் கொடுக்கவேண்டிய துர்ப்பாக்கியமான நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
தமிழ் மக்களை படுகொலை செய்வதற்கும் அவர்களின் சொத்துக்களை சூறையாடுவதற்கும் இனி, மேலும் வசதியாக சிங்களத்திற்கு இருக்கும் என பொதுமக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். காரணம் எதைச் செய்துவிட்டும் பழியை மர்மநபர்களாக உலாவரும் கிறிஸ் பூதங்கள் மீது சுலபமாகப் போட்டு விடலாம் என்பதே இவர்களின் குறிக்கோளாக உள்ளது.
முன்னர் இருந்ததை விட தற்போது அதிகளவில் அச்சமடைந்தவர்களாகவே மக்கள் அங்கு தமது நாட்களை நகர்த்துகின்றனர்.
தட்டிக்கேட்க ஆட்கள் இல்லை என்ற நினைப்பில் தாம் நினைத்த போக்கிற்கு சிங்களம் ஆடுகின்றது. இனித் தமிழர்களை எவ்வாறும் ஆட்டிவைக்கலாம் என்பதே இவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
பல இடங்களில் தமிழ் மக்களின் உடமைகள், பெறுமதி வாய்ந்த சொத்துக்கள் சேதமாக்கப்பட்டதுடன், தமிழ் மக்கள் விரட்டியும் அடிக்கப்பட்டனர். மர்ம மனிதர்களாக வலம் வருபவர்கள் இருட்டு வேளையிலும் பொதுமக்கள் விரட்டிச்செல்லும்போது இராணுவமுகாம், கடற்படை முகாம், பொலிஸ் நிலையம் என்பவற்றுக்குள் வழிதவறாமல் ஓடி ஒளிந்து கொள்வதுதான் பொதுமக்களுக்கு மேலும் மேலும் விசனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மீறித் தட்டிக் கேட்க முன்வருபவர்கள் தாக்கப்படுவதுடன் சிறைகளில் அடைக்கப்படும் சம்பவங்களும் அங்கு அதிகளவில் இடம்பெறுவதை நாம் அறியக் கூடியதாக உள்ளது.
இந்நிலையில் கிளிநொச்சியிலும் இந்த மர்ம மனிதர்களின் அச்சம் அதிகரித்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த பூதத்தின் அச்சம் வன்னியின் ஏனைய பாகங்களுக்கும் பரவ ஆரம்பித்துள்ளது.
இதனால், வன்னியுட்பட்ட மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய தமிழர் தாயகப் பகுதிகளில் பாரிய சுற்றிவளைப்புத் தேடுதல்களில் படையினரும் பொலிஸாரும் இறங்கியுள்ளனர்.
'பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் நிலையே இது" என்று அவதானிகள் பலரும் விசனம் தெரிவிக்கின்றனர். இதனால் தமிழ் மக்கள் பெரும் குழப்பமடைந்துள்ள நிலையில் காணப்படுகின்றனர்.
சுற்றிவளைப்புத் தேடுதல் என்னும் பெயரில் தமிழ் மக்களை மேலும் மேலும் துன்புறுத்தும் நடவடிக்கையே அங்கு இடம்பெறுகின்றது.
இதேவேளை, பலரது கவனமும் கிரீஸ் பூதத்தின் பக்கம் திரும்பியுள்ள நிலையில் யாழ்.குடாவில் சிங்களக் குடியேற்றங்களை அமைக்கும் பணியிலும் சிங்களம் முனைப்புடன் இறங்கியுள்ளதான செய்திகள் தற்போது வெளியாகியுள்ளன. இதற்கு இந்தியாவும் துணைநிற்கிறது என்பது அதைவிடக் கொடுமை.
இந்நிலையில், யாழ். குடாநாட்டின் தீவுப் பகுதியை நோக்கி தென்பகுதியின் கவனம் திரும்பியுள்ளதாக உள்ளூர் மீனவர்களிடையே அச்சமான சூழல் எழுந்துள்ளது. அண்மையில் புங்குடுதீவை வந்தடைந்த தெற்கு பெரும்பான்மையின மீனவர்கள் தொடர்ந்தும் அங்கு தங்க வைக்கப்பட்டிருப்பதாக உள்ளூர் மீனவர்களிடையே சந்தேகம் வலுத்துள்ளது.
அதேவேளை, நெடுந்தீவிற்கும் தெற்கு மீனவர்கள் வருகை தரவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் அங்கும் குழப்பகரமான சூழலொன்றை ஏற்படுத்தியுள்ளது. அண்மைக் காலமாக வடமராட்சி வடக்கு மற்றும் கிழக்கு கடற்பரப்பில் கடலட்டை மற்றும் சங்கு பிடிப்பதற்கென கூறி நூற்றுக்கணக்கான தெற்கு மீனவர்கள் வருகை தந்து தங்கியுள்ளனர். இவர்கள் பாதுகாப்பு அமைச்சினதும், கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சினதும் அனுமதியுடனேயே குடாநாட்டிற்கு வந்துள்ளனர்.
இவர்களுக்கான படகுகள் மற்றும் வதிவிட உதவிகளை உள்ளூர் மீனவர்கள் வழங்கி வருகின்றனர். பெருமளவு தென்னிலங்கை மீனவர்கள் படையினரின் முகாம் சூழல்களிலும் தங்கியுள்ளனர்.
தென்னிலங்கை மீனவர்கள் அதி கூடிய வெளியிணைப்பு இயந்திரங்களை பயன்படுத்துவதாகவும் இதனால் தமது தொழில் நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதாகவும் உள்ளூர் மீனவர்கள் குரல் எழுப்பத்தொடங்கியுள்ளனர்.
அண்மையில் ஒன்று கூடிய வடபகுதிமீனவ சங்கங்கள்,தென்னிலங்கை மீனவர்களுக்கு படகுகளையோ, வதிவிடங்களையோ உள்ளூர் மீனவர்கள் வழங்கக் கூடாதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய இழுபறிகளின் மத்தியிலேயே தெற்கு மீனவர்களது கவனம் கடற்படையினரது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள தீவகப் பகுதிகளை நோக்கி திரும்பியுள்ளது. கடற்படையினரது பாதுகாப்புடன் வந்திருந்த நூற்றுக்கணக்கான தென்னிலங்கை மீனவர்கள் புங்குடுதீவு கடற்பரப்பில் கடலட்டை மற்றும் சங்கு பிடிக்கும் தொழிலில் ஈடுபட முற்பட்டுள்ளனர்.
எனினும் இதற்கு உள்ளூர் மீனவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதையடுத்து உட்பட்ட முறுகல் நிலையை தீர்க்க உள்ளூர் மீனவ சங்க பிரதி நிதிகளை கடற்படை அழைத்திருந்தது. அவ்வேளைமீனவ சங்க பிரமுகர்கள் கொலை அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இத்தகைய இழுபறிகளின் மத்தியிலேயே நெடுந்தீவிலுள்ள அரச காணிகளில், தென்னிலங்கை மீனவர்களை குடியமர்த்தும் முயற்சிகள் தொடர்பான செய்திகள் வெளிவரத் தொடங்கியுள்ளன. ஆழ்கடல் மீன் பிடியில் ஈடுபடக் கூடியதாக, தொழில் உபகரணங்கள் சகிதம் இம் மீனவ குடும்பங்கள் குடியமர்த்தப்படவுள்ளன.
இவர்களுக்கு இந்திய வீடமைப்பு திட்ட உதவியின் கீழ் நிரந்தர வீடுகளை அமைத்து வழங்கவும் திட்டமிடப்படுவதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
புலம்பெயர் வாழ் எம் உறவுகளே இது சிந்திக்கும் நேரமல்ல செயற்படும் நேரம்! வரும் 19.09.2011 ஜெனிவாவில்,சிங்களத்தின் வன்கொடுமைகளுக்கு எதிராக நாம் ஒன்றுபட்டுக் குரல்கொடுப்போம் வாரீர்!
(சூறையாடல்கள் தொடரும்)

No comments:
Post a Comment