Tuesday, April 24, 2012

யாழில் முளைவிடும் சிங்கள பாடசாலை! - கந்தரதன்

ஐ.நா.நோக்கி புலம்பெயர் தமிழ் உறவுகள், சிங்களத்தின் கோரத் தாண்டவத்தினை சர்வதேசத்தின் முன் அம்பலப்படுத்தக் கோரி புறப்படத் தயாராகிவரும் நிலையிலும் தமிழர் தாயகப் பகுதி எங்கும் சிங்களத்தின் அத்துமீறல்கள் தொடர்கின்றன. யாழ்குடாவில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் தொடர்பாக இப்பகுதியில் பல தடவைகள் குறிப்பிட்டிருந்தோம். அதன் தொடர்ச்சியாக சிங்களத்தின் காய்நகர்த்தல்கள் தற்போது தீவிரம் பெற்றுள்ளன. அங்கு குடியேறிய சிங்களவர்களின் கல்விச்செயற்பாடுகளுக்கென பாடசாலைகளை ஆரம்பிக்கும் நடவடிக்கையில் சிங்களம் முனைப்புக் காட்டிவருகின்றது.

யாழ் குடாநாட்டிலுள்ள நாவற்குழிப் பகுதியில் அத்துமீறி குடியேறியுள்ள சிங்களவர்களுக்காக மீண்டும் யாழ் சிங்கள மகாவித்தியாலயத்தினை இயங்க வைக்கும் நடவடிக்கையில் வடமாகாண ஆளுனரின் தலைமையில் படைத்தரப்பு மேற்கொண்டு வருகின்றது. யாழ் தொடருந்து நிலையத்தில் வந்திறங்கி தாம் யாழ்ப்பாணத்தினைச் சேர்ந்தவர்கள் என்று கூறிக்கொண்டு தம்மை அரச காணியில் குடியமர்த்தவேண்டும் என்று தெரிவித்து யாழ் அரச அதிபருடன் விடாப்பிடியாக பல கோரிக்கைகளை விடுத்த மேற்படி சிங்களவர்கள் யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி ஹத்துறு சிங்கவினதும் வடமாகாண ஆளுனர் சந்திரசிறியினதும் நெறிப்படுத்தலில் யாழ் நாவற்குழியில் அத்துமீறி குடியமர்ந்தமை தெரிந்ததே.

மேற்படிச் சிங்களவர்களின் அத்துமீறல்கள் தொடர்பாகப் பொறுப்புக் கூற வேண்டிய யாழ் அரச அதிபர் கண்டும் காணாததுபோல் இருந்துள்ளார். இதனால் சிங்களவர்களது அத்துமீறிக்குடியேறும் தொகை நாளுக்கு நாள் அதிகரித்துச் சென்றது: அதிகரித்து வருகின்றது. தமிழ் மக்களது பிரதேசங்களை கையகப்படுத்தும் ஒரே நோக்கத்திற்காக யாழில் குடியேறவைக்கப்பட்ட சிங்களவர்களது குடும்பங்கள் முழுமையாக இதுவரை வந்து குடியேறவில்லை. குறிப்பாக இங்கு குடியேறியுள்ள குடும்பங்களில் உள்ள பிள்ளைகள் இன்னமும் தென்னிலங்கையில் உள்ள பாடசாலைகளிலேயே கல்வி கற்று வருகின்றார்கள்.

இதுமட்டுமல்லாமல் பெரும்பாலானவர்கள் தமது தொழில் நடவடிக்கைகளையும் இங்கு ஆரம்பிக்கவில்லை. அவர்கள் குடியேறியுள்ள நாவற்குழி பகுதியில் பல கூடாரங்கள் மற்றும் அரை நிரந்தர வீடுகள் போடப்பட்டுள்ளபோதும் அங்கு சுழற்சி முறையிலேயே தென்னிலங்கையில் இருந்து வந்து தங்கிவிட்டுச் செல்கின்றார்கள். ஆனாலும் அவர்களுக்கான மறைமுகமான அரச உதவிகள் வழங்கப்பட்டுக்கொண்டே வரப்படுகின்றது.

மேற்படி சிங்களவர்களுக்கு சகல வழிகளிலும் உதவிகளை வழங்கி வரும் ஹத்துறுசிங்க மற்றும் வடமாகாண ஆளுனர் ஆகியோர் இணைந்து சிங்களவர்களின் குடியேற்றங்களை மேலும் பலப்படுத்தி இவர்களது பிள்ளைகள் யாழிலேயே கல்வி கற்பதற்காக யாழ் சிங்கள மகாவித்தியாலயத்தினை மீண்டும் ஆரம்பிப்பதற்கான முழு முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறான அத்துமீறல்கள் தொடர்பாக கண்டும் காணததுபோல் இருக்கும் யாழ் அரச அதிபரும் இவர்களுக்கான மறைமுகமான உதவிகளை மேற்கொண்டு வருவதுடன் தன்னை இவ்விடயத்தில் சம்பந்தப்படுத்திக் கொள்ளாதது போல் குடாநாட்டு ஊடகங்கள் முன்பாக நடந்து கொள்கின்றார்.

யாழ் மாவட்டத்தில் சிங்களவர்களுக்கான பாடசாலை ஆரம்பிக்கப்பட்டால் சிங்களவர்களது ஆதிக்கம் யாழில் மேன்மேலும் அதிகரித்துச் செல்லும். அரச காணிகளை கைப்பற்றும் அவர்களது முயற்சிகள் படிப்படியாக வளர்ச்சியடைந்து தமிழ் மக்களது காணிகளையும் பலவந்தமாக கைப்பற்றும் நடவடிக்கையும் ஏற்படும் என அவதானிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், வலிகாமம் வடக்கு முன்னரங்கப் பகுதியில் பலாலி படைத் தளத்தின் முன்னரங்க நிலைகளாக விளங்கும் ஒட்டகப்புலத்திலிருந்து வயாவிளான் ஊடாகத் தெல்லிப்பழைச் சந்தி வரைக்கும் அங்கிருந்து காங்கேசன்துறை வரை  நிரந்தரத் தடுப்பு வேலிகளை இராணுவத்தினர் அமைத்து வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் வலி.வடக்கில் பலாலி இராணுவத் தலைமையகத்தை அண்மித்த இடங்களில் உள்ள 23 கிராம அலுவலர் பிரிவுகளில் மக்கள் மீளக்குடியமர்வதற்கான சாத்தியங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன என்று சுட்டிக்காட்டப்படுகின்றது. நிரந்தர தடுப்பு வேலிகளை அமைப்பதற்கான தூண்கள் இப்போது ‘கொங்கிறீட்’ போடப்பட்டு நடப்பட்டு வருகின்றன. இந்த பாதுகாப்பு வேலிக்குள் 23 கிராம அலுவலர் பிரிவுகள் அடங்கி உள்ளன. 7273 குடும்பங்களைச் சேர்ந்த 26281 பேர் இப்பகுதிகளில் மீள்குடியமர்வுக்காகக் காத்திருக்கின்றனர்.

பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டுவரும் பகுதிக்கு அப்பால் குறைந்தது ஒன்றரை வருடங்களுக்கு யாரையும் அனுமதிக்கப் போவதில்லை என்று படையினர் தமக்குத் தெரிவித்திருக்கின்றனர் என மக்கள் சிலர் கூறுகின்றனர். இது உறுதிப்படுத்தப்படாத போதும், முன்னரங்குகளில் நிரந்தர வேலிகள் அமைக்கப்படுவதானது மக்களின் மீள்குடியமர்வு குறித்த பெரும் சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

வலி. வடக்கில் இருந்து 1990 ஆம் ஆண்டு மக்கள் இடம்பெயர்ந்தனர். போர் முடிந்ததன் பின்னர் இந்தப் பிரதேச செயலர் பிரிவில் உள்ள 12 கிராம அலுவலர் பிரிவுகளில் மட்டுமே மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்டனர். கடந்த வருட இறுதிக்குள் எஞ்சியவர்களும் மீளக்குடியமர்த்தப்படுவர் என்று அமைச்சர்களும் அதிகாரிகளும் தெரிவித்து வந்தனர். ஆனால் 2011 மே மாதத்தின் பின்னர் எந்தவிதமான மீள்குடியமர்வு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

இதேவேளை, ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியில் புனரமைக்கப்பட்டு வரும் ஒட்டகப்புலம் கட்டுவன் வீதியின் இடையே உள்ள 4 கிலோ மீற்றர் தூரமும் இந்த பாதுகாப்பு எல்லை வேலிக்குள் அடங்குவதால் அதன் புனரமைப்பு வேலைகள் கைவிடப்பட்டுள்ளன. அந்த 4 கிலோமீற்றர் வீதியையும் தனியாரின் காணிகளுக்கு ஊடாகப் புதிதாக அமைக்குமாறு படைத்தரப்பினரால் தெரிவிக்கப்பட்டுள்ளதாக புனரமைப்பு வேலைகளை மேற்கொண்டுவரும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாகவே வீதிகளை அமைக்கும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. புலம்பெயர் வாழ் எம் தமிழ் உறவுகளே! நாம் சிந்திக்கும் நேரமல்ல இது. சிந்தித்து செயற்படவேண்டிய நேரம். வரும் மார்ச் 5 அன்று சிங்கள வன்கொடுமைகளுக்கு எதிராக ஜெனிவாவில் ஒருமித்துக் குரல்கொடுப்போம் வாரீர்!
(சூறையாடல்கள் தொடரும்)
நன்றி : ஈழமுரசு

No comments: