
சிறீலங்கா இனவாத அரசுக்கு எதிராக ஜெனீவாவில் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட பிரேரணை 24 நாடுகளால் ஆதரிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையிலும் சிறீலங்காவில் சிங்களத்தின் தமிழ் மக்கள் மீதான வன்கொடுமைகள் நின்றபாடில்லை.
அதுதொடர்கதையாகவே இருந்து வருகின்றது. வலிகாமம் வடக்கில் தொடந்தும் உயர்பாதுகாப்பு வலயங்களாகவுள்ள பகுதிகளை, படையினர் இறுக்கமான முறையில் மேலும் மேலும் பலப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். ஒட்டகப்புலம் பிரதேசத்தில் 23 கிராம சேவகர் பிரிவுகள் உள்ளன. இங்கிருந்து சுமார் இரண்டரைக் கிலோ மீற்றர், அதாவது வசாவிளான் வரைக்கும் கொங்றிட் தூண்கள் நாட்டப்பட்டு முள்ளுக் கம்பி வேலிகளை படையினர் அமைத்து வருகின்றமை தெரிந்ததே.
வலிகாமம், வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தினுள் இதுவரை 8 கிராம சேவகர் பிரிவுகளில் ஒரு பகுதியும், 15 கிராம சேவகர் பிரிவுகளில் முழுமையாகவும் மீள்குடியேற்றத்திற்கான தடைவிதிக்கப்பட்டிருக்கின்றது.
அந்தவகையில், கே.கே.எஸ். தெற்கு ஜே.233, கே.கே.எஸ். மத்தி ஜே.234, கே.கே.எஸ் மேற்கு ஜே.235, குரும்பசிட்டி ஜே.242, மயிலிட்டி வடக்கு ஜே.246, தையிட்டி கிழக்கு ஜே.247, மயிலிட்டித்துறை மேற்கு ஜே.248, தையிட்டி வடக்கு ஜே.249, தையிட்டி மேற்கு ஜே.250, மயிலிட்டித்துறை வடக்கு ஜே.251, பலாலி மேற்கு ஜே.252, பலாலி கிழக்கு ஜே.253, பலாலி வடக்கு ஜே.254, பலாலி வடகிழக்கு ஜே.255, பலாலி தெற்கு ஜே.256 கிராம சேவகர் பிரிவுகளில் மீள்குடியேற்ற தடைவிதிக்கப்பட்ட பகுதிகளாகும்.
இந்த நிலையில் தற்போது, முட்கம்பிவேலிகள் அமைக்கப்பட்டு அந்தப் பகுதிகளை தொடர்ந்தும் கையகப்படுத்திப் பலப்படுத்தும் நடவடிக்கையில் படையினர் ஈடுபட்டு வருகின்றனர் என பிரதேச மக்கள் தொடர்ந்தும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் வலிகாமம் வடக்குப் பகுதியில் மக்களை மீளக்குடியமர்த்துவதற்கு படையினரின் சாதகமான பதில் இதுவரை கிடைக்கவில்லை. என்று யாழ்மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். வலி.வடக்குப் பகுதியில் கண்ணிவெடி அகற்றப்பட்டுப் பல பிரதேசங்கள் கையளிக்கப்பட்டுள்ள போதும் அந்தப் பகுதிகளில் மக்களை மீளக்குடியமர்த்த படையினர் அனுமதிக்கவில்லை.
வலி.வடக்கில் 23 கிராம சேவகர் பிரிவுகளில் மக்கள் இன்னமும் மீளக்குடியமர்த்தப்படாத நிலையில் படையினர் அங்கு நிரந்தர பாதுகாப்புவேலியை அமைத்து வருகின்றனர். மீள்குடியமர்வு தொடர்பாக படையினரிடம் தொடர்ச்சியாகக் கேட்டு வருகின்றேன். அண்மையில் பலாலி ஆசிரியர் கலாசாலையை விடுவித்துத் தருமாறும் கோரியிருந்தேன்.
அத்துடன் மக்களின் வாழ்விடங்களை விரைவில் விடுத்து அவர்களை சொந்த இடத்தில் குடியமர்த்த உதவுமாறும் படைத் தளபதியிடம் கோரியிருந்தேன். இதற்கு அவர்கள் இதுவரையில் சாதகமானபதில் எதனையும் வழங்கவில்லை படையினர் அனுமதியளித்தால் மாத்திரமே இந்தப் பகுதிகளில் மக்களை மீளக்குடியமர்த்தமுடியும். படையினரின் சாதகமான பதில் கிடைக்கும் வரை எதுவும் செய்ய முடியாது என்று யாழ்மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், யாழ் சுழிபுரம் திருவடி நிலை கடற்கரைப் பகுதியில் சட்ட விரோதமாக கடற்படையினர் மணலை அகழ்ந்து வருவதாகப் பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் முறையிட்டதைத் தொடர்ந்து அவர்கள் குறித்த பகுதிக்கு நேரில் சென்று நிலைமைகளை அவதானித்துள்ளனர். ‘பொது மக்கள் தெரிவித்ததைப் போல பல இடங்களில் சட்ட விரோதமாக மணல் அகழப்பட்டிருப்பதை அவதானிக்க முடிந்தது.
இது குறித்து உரியவர்களின் கவனத்துக்குக் கொண்டு வந்து இத்தகைய சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்க உரிய நடவடிக்கை எடுப்போம்` என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மக்களிடம் உறுதியளித்தபோதும் படையினரின் அடாவடிகள் அங்கு தொடர்வதை எவராலும் தடுத்துநிறுத்த முடியவில்லை.
இதேவேளை, முல்லைத்தீவு நாயாற்றுவெளியில் அத்துமீறிக்குடியேறுவதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட சிங்களவர்கள் பார ஊர்திகளில் ஏற்றிச் செல்லப்பட்டிருக்கின்ற அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. பாரஊர்திகளில், மீன்பிடிப்படகுகள், மீன்பிடி உபகரணங்கள் என்பவற்றுடன் தற்காலிக வீடுகளுக்குத் தேவையான பொருட்களையும் ஏற்றிச் சென்றிருக்கின்றனர். இதனை அறிந்த முல்லைத்தீவு மக்கள் பாரஊர்திகளை மறித்து தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.
இருப்பினும் சிறீலங்கா இராணுவத்தினரின் தலையீட்டுடன் பொருட்கள் இறக்கப்பட்டு நாயாற்று வெளிப்பகுதியில் வீடுகள் அமைத்து முடிக்கப்பட்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வாரம் இரு தினங்கள் இரு தொகுதிகளாக பாரஊர்திகள் முல்லைத்தீவைச் சென்றடைந்திருக்கின்றன. கடந்த புதன்கிழமை மட்டும் முப்பதிற்கும் மேற்பட்ட பாரஊர்திகள் நாயாற்று வெளியைச் சென்றடைந்திருந்தாக அந்த மக்கள் மேலும் தெரிவித்தனர்.
அதிகளவிலான மீன்கள் பிடிபடக்கூடிய முகத்துவாரத்தை அண்மித்த பகுதியில் முல்லைத்தீவு மீனவர்கள் மீன்பிடிக்க கடற்படையினரால் அனுமதி மறுக்கப்பட்டு வருவதாகவும், அதேபகுதியில் சிங்கள மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதிக்கப்படுவர் என்றும் முல்லைத்தீவு மீனவர்கள் எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றனர்.
இப்பிரதேச தமிழ் மக்களின் வாழ்வாதார தொழிலை சீர்குலைக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த அடாவடித் தனம் குறித்து தாம் கடுமையான எதிர்ப்புகளை வெளியிட்டும் அதனை சம்பந்தப்பட்ட தரப்பினர் கணக்கெடுக்கவில்லை எனவும் இறக்கு
மதி செய்யப்பட்ட சிங்கள மக்களுக்கான வாடிகள் அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டு உள்ளதாகவும் பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலமைகள் குறித்து அவசர கூட்டம் ஒன்றை கூடி மக்களிடம் கருத்து வெளியிட்டுள்ள பிரதேசத்தின் படைத்தளபதி இது ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உத்தரவு இதனை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். புதிதாக அழைத்து வரப்பட்ட மக்களுடன் இணைந்து தொழிலில் ஈடுபடவேண்டும் இல்லாவிடில் தேவையற்ற சிக்கல்களை மக்கள் எதிர்கொள்ள வேண்டிவரும் எனவும் எச்சரித்துள்ளார்.
இதற்கு யார் பதில் சொல்வது? இராணுவத்தின் பயங்கரவாதத்தை அழிப்பதற்கு யார் முன்வருவது? சர்வதேசமே வெறும் வாய்ப்பேச்சோடு தமிழ்மக்களின் பிரச்சினைக்குத் தீர்வுவைக்காதே. செயல்வடிவத்தில்தான் தமிழ்மக்களுக்கு தீர்வுவேண்டும். உலகெங்கும் வாழ் தமிழ் உறவுகளே சர்வதேசத்தின் காதுகளுக்கு ஒருமித்துக் குரல்கொடுப்போம்! இது சிந்திக்கும் நேரமல்ல நாம் சிந்தித்து செயற்படும் நேரம்!
(சூறையாடல்கள் தொடரும்)
நன்றி: ஈழமுரசு
No comments:
Post a Comment