Tuesday, February 26, 2008

ஐ.நா. செயலாளரின் விசேட கடிதம் ஜனாதிபதியிடம் ஏஞ்சலினா கையளிப்பு


இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் ஏஞ்சலினா கனே நேற்று திங்கட்கிழமை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேசினார்.
நேற்று முற்பகல் வேளை ஜனாதிபதி செயலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
ஐ.நா. அமைப்பிற்கும் இலங்கைக்கும் இடையில் நிலவும் தற்போதைய உறவுகள் தொடர்பாகவும் இனிவரும் காலங்களில் அந்த உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்வது குறித்தும் இந்தச் சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி செயலகத்தினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல், ஐ.நா. அமைப்பு இலங்கையின் நடவடிக்கைகளுக்கு வழங்கும் ஒத்துழைப்புகள் தொடர்பாக தற்போதிருப்பதை விட நன்கு மக்களை தெளிவுபடுத்த வேண்டியதன் முக்கியத்துவம் பற்றி இரு தரப்பிலிருந்தும் சுட்டிக் காட்டப்பட்டிருப்பதாகவும் அவ்வறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.
இதேநேரம், ஏஞ்சலினா கனே அண்மையில் மட்டக்களப்பு மற்றும் நுவரேலியா மாவட்டங்களில் மேற்கொண்ட விஜயங்கள் பற்றி ஜனாதிபதிக்கு விளக்கமளித்துள்ளதுடன் இந்த விஜயங்களை இடைஞ்சல்களின்றி முடித்துக்கொள்ள இலங்கை அரசாங்கம் வழங்கிய ஒத்துழைப்புகளுக்கும் ஜனாதிபதியிடம் நன்றி தெரிவித்ததாகவும் ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
அத்துடன், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கையில் இல்லாதவொரு நிலைமையை உருவாக்கி காண்பிக்க கடந்த காலங்களில் பல்வேறு தரப்பினரும் எடுத்த முயற்சிகள் குறித்தும் இச் சந்திப்பின்போது ஜனாதிபதி ஏஞ்சலினா கனேயிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, ஐ.நா.வின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் விஷேட கடிதமொன்றையும் கனே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் கையளித்திருக்கிறார் என்றும் ஜனாதிபதி செலயக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சந்திப்பில் வெளிநாட்டமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித கோஹன மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க இருவரும் கலந்து கொண்டனர்.

No comments: