அரசியல் யாப்பின் 13 ஆவது திருத்தத்துக்கமைய இனநெருக்கடிக்கு அரசியல் தீர்வைக்காண்பதற்கு அரசாங்கத்துக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு அலரிமாளிகையில் நடத்திய பேச்சுவார்த்தையின் போது உறுதியளித்துள்ளார்.13 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் சட்டவலுவுள்ளதாகக் காணப்படுவதால் அதில் எந்தவிதமான இடைச் செருகலுமின்றி நடைமுறைச் சாத்தியமாக்கப்படுவதையே ஐக்கிய தேசியக்கட்சி வலியுறுத்துவதாகவும் ரணில் விக்கிரமசிங்க நேற்றைய சந்திப்பின் போது எடுத்துக் கூறியுள்ளார்.
நேற்றிரவு 7 மணிக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்குமிடையில் இந்த முக்கிய சந்திப்பு இடம் பெற்றது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் ஆளும் தரப்பு சார்பில் ஷ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பொதுச் செயலாளர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, அமைச்சர்கள் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே, விஸ்வாவர்ணபால, சர்வகட்சி பிரதிநிதிகள் குழுத்தலைவர் பேராசிரியர் திஸ்ஸவிதாரண ஆகியோர் இடம்பெற்றனர்.
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் ஐக்கிய தேசியக்கட்சி தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் ருக்மன் சேனாநாயக்கா, பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத் தரணி கே.என்.சொக்ஷி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இச் சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் வரை நீடித்ததாகவும் பேச்சுகள் மிகச்சுமுகமாக இடம்பெற்றதாகவும் ஜனாதிபதி செயலகம் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வகட்சி மாநாடு முன் வைத்திருக்கும் யோசனைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முதலில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அப்போது, ஜனவரி மாதம் 23 ஆம் திகதி சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் அறிக்கையில் இடைக்கால அறிக்கையே சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாகவும் இறுதியறிக்கை விரைவில் முன்வைக்கப்படுமெனவும் குறிப்பிடப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டிய எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, இறுதியறிக்கை முன்வைக்கப்பட்ட பின்னரே ஐக்கிய தேசியக்கட்சி தனது முடிவை வெளியிட எண்ணியுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த விடயத்தில் காலம் கடத்தப்படுவதை தாம் விரும்பவில்லை எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, தமது முயற்சிகள் குறித்து விரிவாக விளக்கிக் கூறியுள்ளார்.
13 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் சட்டரீதியானதென்பதை சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, அதில் எந்த விதமான இடைச் செருகல்களும் இடம்பெறாதவாறு நடைமுறைச்சாத்தியமாக்கப்படுவதையே ஐக்கிய தேசியக்கட்சி எதிர்பார்ப்பதாகவும் அப்படிச் செயற்படும் பட்சத்தில் அதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதில் எத்தகையை முரண்பாடுகளும் ஏற்படாது எனவும் ஜனாதிபதியிடம் எடுத்துக் கூறியுள்ளார்.
இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசு மேற்கொண்டுவரும் முயற்சிகள் ஆரோக்கியமான தொன்றல்லவெனத் தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க, அங்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தக் கூடிய சூழ்நிலை சாதகமாகக் காணப்படவில்லை. சாதகமான சூழ்நிலை திரும்புவதற்கு முன்னர் அங்கு தேர்தல் நடத்தப்பட்டால் அதில் அரசியல் கட்சிகள் போட்டியிடுவதில் நெருக்கடி நிலை ஏற்படுமெனவும் அந்தத் தேர்தல் அர்த்தமற்றதொன்றாகவே காணப்படுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், 17 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்துக்கமைய அரசியலமைப்புப் பேரவைக்கு உறுப்பினர்களை உடனடியாக நியமித்து அதனை இயங்கச் செய்யவேண்டுமென இங்கு எதிர்கட்சித் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
17 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக ஆராய்வதற்காக பாராளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்பட்டிருப்பதாகக் கூறிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, அதுவரையில் அரசியலமைப்புப் பேரவைக்கு உறுப்பினர்களை நியமிக்க முடியாதிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
17 ஆவது அரசியலமைப்புத் திருத்தமும் சட்ட வலுவுள்ளதாக இருப்பதைச் சுட்டிக்காட்டிய ரணில் விக்கிரமசிங்க, பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் அறிக்கை வரும்வரை காத்திருக்க வேண்டிய அவசியம் கிடையாதெனவும் யாப்புத் திருத்தத்துக்கமைய பேரவையை அமைக்க முடியுமெனவும் தெரிவுக்குழுவின் அறிக்கை வந்தபின்னர் அது குறித்து கவனம் செலுத்த முடியுமெனவும் விளக்கமளித்தார்.
அடுத்து எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவில் ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதிநிதிகள் பங்கேற்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது தற்போதைய முயற்சிகள் சாதகமான அடிப்படையில் நடக்குமானால் சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவில் பங்கேற்பது குறித்து கட்சி பரிசீலிக்கத் தயாராக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்திருக்கின்றார்.
No comments:
Post a Comment