Monday, February 25, 2008

கொழும்பின் பல பகுதிகளில் சல்லடை போட்டு தேடுதல்


நகருக்குள் பிரவேசித்த அனைத்து வாகனங்களும் நுழைவாயில்களில் மறிக்கப்பட்டு கடம் சோதனை
கொழும்பு நகரை மையமாக வைத்து நேற்று ஞாயிற்றுக் கிழமை பாரிய தேடுதல் நடைபெற்ற அதேநேரம், கொழும்பு நகருக்குள் நுழைந்த அனைத்து வாகனங்களும் பலத்த சோதனைக்குட்படுத்தப்பட்டன.
கொழும்பின் புறநகர்ப் பகுதியான கல்கிசையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை காலை தனியார் பயணிகள் பஸ்ஸில் இடம்பெற்ற குண்டுவெடிப்பையடுத்தே நேற்று இந்தப் பாரிய தேடுதல் நடைபெற்றது.
நேற்றுக்காலை 6 மணியளவில் ஆரம்பமான இந்தப் பாரிய தேடுதல் பிற்பகல் வரை நடைபெற்றுள்ளது. இதில் ஆயிரக் கணக்கான படையினரும் பொலிஸாரும் ஈடுபட்டனர்.
பிரதான மார்க்கங்களூடாக கொழும்பு மாநகருக்குள் வந்த அனைத்து வாகனங்களும் அனைத்து நுழைவாயில்களிலும் வழிமறிக்கப்பட்டு தீவிர சோதனைக்குட்படுத்தப்பட்டன. இதனால் காலை முதல் நகர நுழைவாயில் பகுதிகளில் மிக நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் பல மணி நேரம் காத்திருந்தன.
பயணிகள் பஸ்கள் உட்பட அனைத்து வாகனங்களிலும் வந்தவர்கள் வாகனங்களைவிட்டு இறக்கப்பட்டு அடையாள அட்டைகள் மற்றும் ஆவணங்கள் சோதனையிடப்பட்டதுடன்' பலர் தீவிர விசாரணைகளுக்குமுட்படுத்தப்பட்டனர்.
இந்த சோதனைகளால் நகரின் நுழை வாயில்கள் மற்றும் அதனை அண்டிய உட்பகுதிகளில் பெரும் போக்குவரத்து நெரிசலேற்படவே பஸ் பயணிகள் அவற்றை விட்டிறங்கி நீண்ட தூரம் நடந்து வந்து வேறு பஸ்களில் ஏறி பயணிக்கும் நிலையேற்பட்டது.
இந்தச் சோதனைகளின்போது பயணிகள் பஸ்களிலிருந்து பொருட்களும் வெளியே இறக்கப்பட்டு பலத்த சோதனைகளுக்குட்படுத்தப்பட்டன.
மோப்பநாய்களும் குண்டுகளைக் கண்டறியம் நவீன கருவிகளும் அனைத்து நுழை வாயில்களிலும் பயன்படுத்தப்பட்டன.
நுழைவாயில்களில் இடம்பெற்ற சோதனைகளை முடித்துக்கொண்டு நீண்டநேரத்தின் பின் நகருக்குள் நுழைந்தவர்கள் மேலும் பல இடங்களில் வழிமறிக்கப்பட்டு, வாகனங்களிலிருந்து இறக்கப்பட்டு பலத்த சோதனைக்குட்படுத்தப்பட்டனர்.
நகர நுழைவாயில்களில் இந்தச் சோதனைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது நகரினுள் பல பகுதிகளிலும் படையினர் பாரிய தேடுதல்களையும் சோதனைகளையும் நடத்தியுள்ளனர்.
நகரினுள் பல இடங்களில் வீதிச்சோதனைகள் நடைபெற்றதால் நகரினுள்ளும் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டன.
தமிழ்மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் படையினரும் பொலிஸாரும் இணைந்து தீவிர தேடுதல்களை நடத்தினர். இதன் போது பலர் கைதுசெய்யப்பட்டு அந்தந்தப் பகுதி பொலிஸ் நிலையங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.
இந்தப் பாரிய தேடுதல்கள் மற்றும் சோதனைகள் காரணமாக நகரில் மக்கள் வீடுகளினுள் முடங்கினர். இதனால் பல வீதிகளில் மக்கள் நடமாட்டம் மிகக் குறைவாகவேயிருந்தது.

No comments: