தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளின் காரணமாக ஊடகவியலாளர் பெரும் அசெளகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர் என்று கொழும்பிலிருந்து வெளிவரும் "த நேசன்" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் "த நேசன்" வார ஏட்டின் அரசியல் பத்தி பகுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இலங்கையில் ஊடகவியலாளர்களைப் பொறுத்த வரையில் இதுவொரு இக்கட்டான சூழ்நிலையாகவே காணப்படுகிறது. குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளின் காரணமாக ஊடகவியலாளர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
போர் தொடர்பான செய்திகளை திரட்டும் அநேக ஊடகவியலாளர்கள் விசாரணைகளுக்கோ அல்லது அச்சுறுத்தல்களுக்கோ உள்ளாகின்றமை தவிர்க்க முடியாது ஒரு நிலைமையாக மாறியுள்ளது.
சட்டம், ஒழுங்கை காரணம் காட்டி எவ்வித விசாரணைகளிமின்றி பல சந்தர்பங்களில் அரசாங்கத்தினால் ஊடகவியலாளர்கள் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.
ஊடகவியலாளர் பரமேஸ்வரிக்கு எதிரான நடவடிக்கைகளை இதற்கு மேற்கோள் காட்டலாம். இறுதியில் எந்தவித குற்றச்சாட்டுக்களுமின்றி அவர் விடுதலை செய்யப்பட்டார்.
தற்போது ஊடகவியலாளர் திஸ்ஸநாயகத்தை அரசாங்கப் படைத்தரப்பு கைது செய்து, தடுத்து வைத்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஊடகவியலாளர் திஸ்ஸநாயகத்தின் வழக்குத் தொடர்பாக நாங்கள் இங்கு வாதிட விரும்பவில்லை. எனினும், அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு, சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் அவ்வாறின்றி காலவரையறையற்ற தடுத்து வைத்தல் உசிதமான சட்டநடவடிக்கையாக அமையாது என்பதையே நாங்கள் இங்கு வலியுறுத்த விரும்புகின்றோம்.
தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக ஊடகவியலாளர் திஸ்ஸநாயகம் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளதாக எங்களுக்கு அறியக்கிடைத்தது.
திஸ்ஸநாயகத்தின் மனைவி மீது விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் தொடர்பாக ஊடகவியலாளர்கள் தமது அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.
திரு. திஸ்ஸநாயகத்தின் துணைவியாரான ரொனிட்டா ஆசீர்வாதம் பிரபல அரச சார்பற்ற நிறுவனமான ஒக்ஸ்பாம் நிறுவனத்தில் பணிபுரிகின்றார்.
மேலும், அவர் ஆரம்ப காலத்தில் டெய்லி மிரர் பத்திரிகையின் ஊடகவியலாளராகவும் கடமையாற்றியுள்ளார். திரு திஸ்ஸநாயகம் அவர்களும் "டெய்லி மிரர்" நாளேட்டின் ஆசிரியர் குழாமின் அங்கத்தவராக கடமையாற்றியுள்ளார்.
தமது கட்சிக்கு எதிரான தகவல்களை வெளியிடும் ஊடகவியலாளர்கள் மீது ஆளுங்கட்சியைப் போன்றே எதிர்க்கட்சியும் தனது அடக்குமுறைகளை வலிந்து அரங்கேற்றி வருகின்றது.
தங்களது வழிக்குவர மறுதலிக்கும் சுயாதீன ஊடகவியலாளர்களக்கு எதிராக செயற்படுகின்ற தீய பழக்கம் அரசாங்கத்தைப் போன்றே ஐக்கிய தேசியக்கட்சியிடமும் காணப்படுகிறது.
அரசாங்கத்திற்கு சொந்தமான லேக் ஹவுஸ் நிறுவனத்தின் மூலம் அரசாங்கத்தின் அனைத்து அழுக்கான நடவடிக்கைகளும் அரங்கேற்றப்படுகின்றன.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு சார்பான ஊடகங்களின் மூலம் ஐக்கிய தேசியக் கட்சி இந்த ஊடக அடக்குமுறைகளை அமுல்படுத்துகின்றது.
ஊடகங்களைப் பாதுகாத்தல், மனித உரிமை மீறல்களுக்கு எதிராக குரல் கொடுத்தல் போன்ற அனைத்து செயற்பாடுகளுமே தமது சுயலாப நோக்கிலேயே இந்த பிரதான கட்சிகளும் மேற்கொள்கின்றன.
எனினும், மெய்யான ஊடக சுதந்திரம் பற்றி இந்த இரண்டு கட்சிகளினதும் நிலைப்பாடு சற்று சந்தேகத்தை தோற்றுவிக்கும் நிலைமையாகவே விதந்துரைக்கின்றது.
ஊடகங்களைப் பாதுகாக்கும் புதிய பீஷ்மர் ஒருவரை நாங்கள் எதிர்க்கட்சியிலிருந்து அவதானிக்கின்றோம். அவர் வேறு யாருமல்ல கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல ஆவார்.
ஊடகவியலாளர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றிய புதிய கோட்பாடுகளை லக்ஸ்மன் கிரியெல்ல முன்வைத்துள்ளார். புதிய ஊடக கலாச்சாரமொன்றை உருவாக்க அவர் முயற்சிகளை முன்னெடுத்துள்ளார்.
லக்ஸ்மன் கிரியெல்ல, அமைச்சர் மேர்வின் சில்வா ஆகியோர் யார் சிறந்த அரசியல் கோமாளி என்ற பட்டத்திற்காக கடுமையாக போட்டியிடுவதாகவே நாம் நோக்குகின்றோம்.
அரசாங்கத்தின் வரவு-செலவுத் திட்ட மூன்றாம் வாசிப்பின் போது அதனை தோற்கடிக்க முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளின் மூலம் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆழ்ந்த உறக்கம் கலைந்தது. அவர்களால் பெரும்பான்மை நாடாளுமன்ற பலத்தை காண்பிக்க முடியாது போனது.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் சமையலறை பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கும் நோக்கில் ஐக்கிய தேசியக் புதிய போராட்டமொன்றை எதிர்வரும் 3 ஆம் நாள் முன்னெடுக்க உள்ளது. இதுவே ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய அரசியல் தந்திரோபாயமாகக் கருதப்படுகிறது.
ஐக்கிய தேசியக் கட்சியின் பெண்கள் முன்னணி வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு எதிரான போராட்டத்தில் களமிறங்கவுள்ளது. இதன் மூலம் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கும் பொதுமக்களின் நல் அபிப்பிராயத்தை தம் பக்கம் திசை திருப்பிக்கொள்ள முடியும் என்பதே அவர்களது தந்திரோபாயமாக காணப்படுகிறது.
வடபோர் முனை போர்ச் செலவுகள் மற்றும் நாட்டின் கடன் பழு குறித்து ஐக்கிய தேசியக் கட்சி மிகக் குறைந்தளவிலேயே பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டியுள்ளது.
இந்த நாட்டிற்கு எந்த ரீதியிலும் ஒவ்வாத வகையில் அமைச்சர்களுக்கும், அமைச்சரவைகளுக்கும் பாரியளவில் நிதி செலவிடப்படுகிறது.
ஐக்கிய தேசியக் கட்சி இந்த நிலைமைகளை சரியான முறையில் மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டினால் அதுவே வாழ்க்கைச் செலவு சுமையால் அழுந்தித் தவிக்கும் பொதுமக்களை தம்பால் ஈர்த்துக்கொள்ள சிறந்த வழிமுறையாக அமையும்.
எனினும், இவற்றை சரியாக முன்னெடுத்துச் செல்லக்கூடிய அரசியல் பலம் தற்போது ஐக்கிய தேசியக் கட்சியிடம் இல்லை எனக் கூறலாம். குறிப்பாக முன்னாள் அரச தலைவர்களான ஜே.ஆர்.ஜயவர்த்தன மற்றும் ரணசிங்க பிரேமதாச ஆகியோரின் காலத்தில் காணப்பட்ட கிராம மட்டத்திலான பலம் தற்போது வெகுவாக குறைவடைந்துள்ளது.
கிராமிய மட்டத்தில் தமது அதிகாரத்தை வலுப்படுத்திக்கொள்ளும் நோக்கில் அண்மையில் ஐக்கிய தேசியக் கட்சியினால் செயலமர்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
எனினும், இந்த செயலமர்வு எதிர்பார்த்தளவு வெற்றியை அளிக்கவில்லை எனவும், மிகக் குறைந்தளவானோரே இதில் கலந்து கொண்டதாகவும் கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிகிகின்றன.
கட்சியின் கீழ் மட்ட உறுப்பினர்களுக்கும், தலைமைத்துவத்திற்கும் இடையில் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்தும் நோக்கில் இந்த செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்ட போதிலும், ஏற்பாட்டாளர்களது குறைபாடுகளின் காரணமாக எதிர்பார்த்தளவு வெற்றியளிக்கவில்லை எனத் தெரியவருகிறது.
மக்களை திருப்தி செய்யாத போர் வெற்றிகள், வெற்றியாக கருதப்பட முடியாது என வடபோர் முனை தொடர்பாக கேணல் ஜெயவிலால் பெர்னாண்டோ கருத்து வெளியிட்டிருந்தார். இது நியாயமற்றது என பலர் கருதக்கூடும்.
போர் தொடர்பான கட்சியின் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டிய சந்தர்ப்பமாக இது கருதப்படுகிறது.
வடக்கு போர் முடிவுக்குக் கொண்டுவர இராணுவத்தினர் முன்னெடுக்கும் போர் கடினமானது என்பதை தொடர்ந்தும் ஏற்றுக்கொள்ளும் மனோபக்குவம் கிராமப்புற மக்களுக்கு இல்லை.
படைத்தரப்பில இணைந்து தங்களது உயிர்களைத் தியாகம் செய்ய மக்கள் தயாராக உள்ளனர். இந்த யதார்தத்தத்தின் கீழ் மக்களின் எண்ணங்களை மாற்றியமைப்பது சிக்கலானதாக அமையும்.
போர் தொடர்பான ஊழல்கள் மற்றும் குறுகிய நோக்குடைய பிழையான அரசியல் தீர்மானங்களின் காரணமாக படையினர் எதிர்நோக்கக்கூடிய பாரதூரமான விளைவுகளை, ஐக்கிய தேசியக் கட்சி வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டிய தருணமே இதுவாகும்.
தமிழீழ விடுதலைப் புலிகள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய பல சந்தர்ப்பங்களில் வாய்ப்புக்களை வழங்கி ஐக்கிய தேசியக் கட்சி தனது குறுகிய கால ஆட்சிகாலத்தில் தவறிழைத்துள்ளது.
தமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு வெளியே மணிராசகுளத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் முகாம் அமைக்க முயற்சித்த போது ஐக்கிய தேசியக் கட்சி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாதமையை இதற்கு மேற்கோளாக காட்டாலாம்.
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாடுகள் குறித்து மக்கள் விடுதலை முன்னணி தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்ததனைத் தொடர்ந்து சந்திரிகா பண்டாரநாயக்க ஆட்சியை கலைத்தார்.
கம்பஹா மாவட்டத்தின் தொம்பே தேர்தல் தொகுதியில் தொகுதி அமைப்பாளர் ஒருவர் நியமிக்கப்படாமை குறித்து கட்சி தலைமைத்துவம் பிரதேச அமைப்பாளர்கள் கேள்வி எழுப்பினர்.
நாடாளுமன்ற உறுப்பினர் சரத் சந்திர ராஜகருணாவின் மகனை தொம்பே தேர்தல் தொகுதி அமைப்பாளராக நியமிப்பதற்கு திட்டமிடப்பட்டிருப்பதனாலேயே இந்தத் தாமதம் ஏற்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் மைக்கல் பெரேரா இதற்கு பதிலளித்தார்.
1994 ஆம் ஆண்டுக்கு பின்னரான ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் செயற்பாடுகள் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றது. மத்தியமயப்படுத்திய தலைமைத்துவத்தை காட்டிலும், ஒரு பரந்து விரிந்த வியூகமே ஐக்கிய தேசியக் கட்சிக்கு தற்போது தேவை எனத் தெரிவிக்கப்படுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment